search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நீலகிரியில் 1½ லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 வட்டங்களிலும் நகர் புறங்களை விட கிராமப் புறங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின் கிராமப்புறங்களில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை குறைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நகர் புறங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி, கூடலூர் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா தொற்றினால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணி க்கையும் அதிகரித்துள்ளது.

    ஊட்டியில் இதுவரையிலும் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட கலனில் மட்டுமே ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படுகிறது.

    தொற்று பாதித்தோரின் உடல் நிலைக்கு ஏற்ப நாளொன்றுக்கு 2 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் வைக்க தளம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இதையடுத்து சென்னையில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணிகளும், குழாய்கள் மூலம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 110 லிருந்து 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 569 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 4 லட்சத்து 27,579 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×