என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதி மக்களை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அச்சுறுத்தி வந்த டி23 என்ற புலியை நேற்று வனத்துறையினர் கூட்டுப்பாறா என்ற இடத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
புலியின் உடலில் 8 இடங்களில் காயங்கள் இருப்பதால் அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து புலியை கூண்டில் அடைத்து லாரியில் ஏற்றி மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே மைசூர் உயிரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆட்கொல்லி புலிக்கு சிகிச்சை அளிக்கும் பணியை டாக்டர்கள் குழுவினர் தொடங்கினர்.
இதுவரை மயக்கத்தில் இருந்த புலி இன்று காலை மயக்கத்தில் இருந்து தெளிந்து மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது.
இந்த நிலையில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள டி23 புலிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 18 நாட்களாக உணவு உண்ணாமல் இருந்துள்ளதாலும், உடலில் காயங்கள் இருப்பதால் மிகவும் சோர்வுடனேயே காணப்படுவதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர். மேலும் கால்நடை டாக்டர்கள் உதவியுடன் புலிக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையை கொண்டாட தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து கார், வேன், மோட்டார் சைக்கிள் என ஏராளமான வாகனங்களில் பொதுமக்கள் ஊட்டிக்கு படையெடுத்தனர்.
இதனால் ஊட்டி நகரில் திரும்பிய திசை எங்கும், சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி 10 ஆயிரம் பூந்தொட்டிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பெரணி இல்லம் அருகில் மலர் செடிகளால் சிறிய பூங்கா போன்று அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குவதால், மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நுழைவுச்சீட்டை பெற்று, பூங்காவில் உள்ள மலர் அலங்காரங்களை கண்டு ரசித்தனர். மேலும் அங்குள்ள பெரிய புல்வெளி, இத்தாலியன் கார்டன், ஜப்பான் பூங்கா, இலை பூங்கா, பெரணி இல்லம், பழமை வாய்ந்த மரங்கள் உள்ளிட்டவற்றை பார்த்தும், புகைப்படங்கள் எடுத்தும், ரசித்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சவாரி செய்தனர். இதுதவிர ரோஜா பூங்கா, ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்டனர். சேரிங்கிராஸ், ஊட்டி-கோத்தகிரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளனர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணியளவில் கோவைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு செல்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினரும் வருகின்றனர்.
ஊட்டி ராஜ்பவனில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளதாக தெரிகிறது.
இதுவரை கவர்னர் பங்கேற்ற கூடிய நிகழ்ச்சிகள் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. 5 நாள் பயணத்தை முடித்து கொள்ளும் கவர்னர் வருகிற 19-ந்தேதி ஊட்டியில் இருந்து சென்னை செல்கிறார். கவர்னரின் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. வனப்பகுதியில் வாகனத்தில் சென்று வனவிலங்குகளை காண வனத்துறையினர் அழைத்து செல்கின்றனர். இதனால் சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இதற்கிடையில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காணும் ஆவலில் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். அப்போது தொந்தரவு கொடுத்தால், அவர்களை காட்டுயானைகள் தாக்கும் அபாயம் உள்ளது. இதை உணராமல் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
தொடர் விடுமுறை வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வர தொடங்கி உள்ளனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற விதிமுறையை கடைபிடிக்காமல் அத்துமீறி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதுமலை சாலையோரம் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை ரசித்து செல்கின்றனர். மிதமான வேகத்தில் வாகனத்தில் சென்றவாறு வனவிலங்குகளை கண்டு ரசிப்பது தவறில்லை. ஆனால் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் காட்டுயானைகள் திடீரென ஆவேசமடைந்து தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் நிலையம் அருகே உள்ள தாஸ்பிரகாஷ் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உர குடோன் ஒன்று உள்ளது.
இங்கு விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விவசாயத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் இந்த குடோனில் இருந்து ஒரே கரும்புகையாக வெளிவந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அந்த குடோன் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து ஊட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்ததும் ஊட்டி போலீசார், தீயணைப்பு துறையினருடன் விரைந்து வந்து குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதால் உடனடியாக அணைக்க முடியவில்லை. நீண்ட நேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரசாயன மருந்துகள், உதிரி பாகங்கள், உரங்கள் என அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமாகியது. இதுவரை 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, எப்படி தீ விபத்து ஏற்பட்டது, மீன் கசிவால் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலி இதுவரை 4 பேரை அடித்து கொன்றது. இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர்.
கடந்த 17 நாட்களாக மசினகுடி, சிங்காரா, மாயாறு, பொக்காபுரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடினர். ஆனால் புலியோ கடந்த 8 நாட்களாக வனத்துறையினரின் கண்ணில் படமாலேயே அவர்களுக்கு போக்கு காட்டி வந்தது.
வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். அதிலும் புலியின் நடமாட்டம் சிக்கவில்லை. இந்த நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் இரவு ஓம்பெட்டா வனப்பகுதியில் வைத்திருந்த தானியங்கி கேமராவில் ஆட்கொல்லி புலியின் உருவம் பதிவாகி இருந்தது.
இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாக புலி அங்கிருந்து சென்று விட்டது.
இன்று காலை வனத்துறையினர் வனப்பகுதிகளில் வைத்துள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை மடிக்கணியில் பார்த்தனர்.
அப்போது தொரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள கார்குடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
இதனை அடுத்து வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் குழுவுடன் தொரப்பள்ளி வனப்பகுதிக்கு சென்று 19-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள புதர்கள் மற்றும் தேயிலை செடிகளில் புலி பதுங்கி இருக்கிறதா? என்பதை கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட போஸ்பரா, முதுமலை ஊராட்சிக்குட்பட்ட முதுகுழி, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் தனியாக நடமாடவோ, தோட்டங்களில் தனியாக வேலை செய்யவோ வேண்டாம் என்றும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி-23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இதற்காக வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மசினகுடியில் இருந்து தப்பிய புலி, சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வனத்துறையினர் கண்ணில் படாமலும், அவர்களிடம் பிடிபடாமலும் புலி தொடர்ந்து போக்கு காட்டியது. அதன்பிறகு 8 நாட்களாக புலி கண்காணிப்பு கேமராவில் கூட பதிவாகாமல் இருந்தது. இதனால் புலி உயிருடன் உள்ளதா? அல்லது வேறு எந்த பகுதிக்காவது தப்பிச் சென்றதா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்தநிலையில் இன்று காலை வனத்துறையினர் தாங்கள் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஓம்பெட்டா என்ற இடத்தில் இருந்த கேமராவில் டி-23 புலியின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த வனப்பகுதியை புலி ஆவேசத்துடன் கடந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.
இதனால் ஓம்பெட்டா பகுதியில் புலி பதுங்கி இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். அங்கிருந்து அந்த புலி தேவன் எஸ்டேட், மேல்பீல்டு பகுதிக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதி மக்கள் உஷாராக இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் புலியை பிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று 18-வது நாளாக புலியை தேடும் பணி தொடர்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. பிற்பகலில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 9.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
ஊட்டியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடானது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாறைகளும் ரோட்டில் உருண்டு விழுந்தன.
பர்லியார் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
இதேபோல குன்னூர் பேரக்ஸ் சாலையில் அன்னை வேளாங்கண்ணி நகர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது. கே.என்.ஆர். நகர் அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் அவற்றை அகற்றும் பணி இன்று 2-வது நாளாக நடந்தது.
கனமழையால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு பகுதியில் தடுப்புச்சுவருடன் கூடிய சுமார் 50 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அதனை சாலையில் விழுந்த கட்டிட இடிபாடுகளை சீரமைக்கும் பணி நடந்தது. பேரட்டி ஊராட்சி பாரத் நகரில் மூர்த்தி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. அந்த வழியாக 2 ஜீப் டிரைவர்கள் செல்ல முயன்றனர். அப்போது மழை வெள்ளத்தில் ஜீப் சிக்கிக் கொண்டது. 2 ஜீப்களில் இருந்த 7 பேரும் தவிப்புக்கு ஆளானார்கள். தீயணைப்பு வீரர்கள் விரைந்து 7 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.
கடந்த 10-ந் தேதி கல்லார்- அடர்லி இடையே ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அந்த பணி பாதிக்கப்பட்டதால் இன்றும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலையும் பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை நிலவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பந்தலூர்-60, ஊட்டி-41, குந்தா-32, அப்பர்பவானி--44, கிண்ணக்கரை-31, கேத்தி-72.






