என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலி
    X
    புலி

    ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தீவிரம்

    தொரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள கார்குடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலி இதுவரை 4 பேரை அடித்து கொன்றது. இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கினர்.

    கடந்த 17 நாட்களாக மசினகுடி, சிங்காரா, மாயாறு, பொக்காபுரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடினர். ஆனால் புலியோ கடந்த 8 நாட்களாக வனத்துறையினரின் கண்ணில் படமாலேயே அவர்களுக்கு போக்கு காட்டி வந்தது.

    வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். அதிலும் புலியின் நடமாட்டம் சிக்கவில்லை. இந்த நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நேற்றுமுன்தினம் இரவு ஓம்பெட்டா வனப்பகுதியில் வைத்திருந்த தானியங்கி கேமராவில் ஆட்கொல்லி புலியின் உருவம் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் விரைந்து சென்று புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாக புலி அங்கிருந்து சென்று விட்டது.

    இன்று காலை வனத்துறையினர் வனப்பகுதிகளில் வைத்துள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை மடிக்கணியில் பார்த்தனர்.

    அப்போது தொரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள கார்குடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி கேமராவில் ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் குழுவுடன் தொரப்பள்ளி வனப்பகுதிக்கு சென்று 19-வது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள புதர்கள் மற்றும் தேயிலை செடிகளில் புலி பதுங்கி இருக்கிறதா? என்பதை கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    இதற்கிடையே ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட போஸ்பரா, முதுமலை ஊராட்சிக்குட்பட்ட முதுகுழி, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் தனியாக நடமாடவோ, தோட்டங்களில் தனியாக வேலை செய்யவோ வேண்டாம் என்றும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், கவனமாக இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×