search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலி
    X
    புலி

    நீலகிரியில் 8 நாட்களுக்கு பிறகு கண்காணிப்பு கேமராவில் சிக்கிய டி-23 புலி உருவம்

    வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி இறந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது.

    பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி-23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    இதற்காக வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மசினகுடியில் இருந்து தப்பிய புலி, சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வனத்துறையினர் கண்ணில் படாமலும், அவர்களிடம் பிடிபடாமலும் புலி தொடர்ந்து போக்கு காட்டியது. அதன்பிறகு 8 நாட்களாக புலி கண்காணிப்பு கேமராவில் கூட பதிவாகாமல் இருந்தது. இதனால் புலி உயிருடன் உள்ளதா? அல்லது வேறு எந்த பகுதிக்காவது தப்பிச் சென்றதா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்தநிலையில் இன்று காலை வனத்துறையினர் தாங்கள் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஓம்பெட்டா என்ற இடத்தில் இருந்த கேமராவில் டி-23 புலியின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த வனப்பகுதியை புலி ஆவேசத்துடன் கடந்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

    இதனால் ஓம்பெட்டா பகுதியில் புலி பதுங்கி இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். அங்கிருந்து அந்த புலி தேவன் எஸ்டேட், மேல்பீல்டு பகுதிக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதி மக்கள் உஷாராக இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் புலியை பிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்று 18-வது நாளாக புலியை தேடும் பணி தொடர்கிறது.

    Next Story
    ×