என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
    குன்னூர்:

    குமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த 23 பேர் ஒரு வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர்கள் நேற்று மாலை அவர்கள் வேனில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    வேன் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வந்து கொண்டு இருந்தது. பர்லியாரை அடுத்துள்ள கோழிக்கரை பகுதியில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டோரம் உள்ள 50 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இதனால் வேனில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அலறினார்கள். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

    ஹென்றி பிலிப், மரியகொரட்டி, ஹெலன்மேரி, சசிரேகா, சூசன் பீட்டர், பாபியானால், ஜெயா, அமுதா, பிரான்சிஸ்கான், லதா, பத்மா, ஆக்னஸ், அனி, ஷாலினி, அபிதா, ரீகன் ஆகியோர் காயம் அடைந்திருந்தனர்.

    அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்திருந்ததால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து நடந்த இடத்தில் சாலைப்பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு கற்கள் கொட்டப்பட்டிருந்தது. வேன் பள்ளத்தில் விழுந்து உருண்டதும் அந்த கற்கள் தடுத்து நிறுத்தின. இல்லாவிட்டால் அடுத்துள்ள 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக வேனில் இருந்தவர்கள் காயத்துடன் தப்பினர்.



    கரடியை கூண்டுவைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சமீபகாலமாக  கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.  குறிப்பாக தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும்  சர்வசாதாரணமாக உலவி வருவதால் பொதுமக்கள்  அச்சம்  அடைந்துள்ளனர்.

    குன்னூர் அருகே உள்ள நான்சச்  தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது பள்ளியின் வகுப்பறை மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்திருந்தது. இதையடுத்து, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அதிகாலை நேரத்தில் கரடி ஒன்று பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் உள்ள மேஜைகள் மற்றும் கதவுகளை சேதப்படுத்தியுள்ளது. மேலும் சமையல் அறைக்குள் புகுந்து, அங்கிருந்த உணவுபொருட்களை தின்று, தூக்கி வீசி எறிந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மக்கள் கூறுகையில், கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த கரடியை கூண்டுவைத்து  பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டியில் பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் மழை குறைந்து, உறைபனி கொட்ட தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக நீர்ப்பனி பெய்து வந்த போதும் குளிரின் தாக்கம் கடுமையாகவே இருந்தது. 

    தற்போது சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் நிலவக் கூடிய சிதோஷ்ண நிலையை அனுபவிக்க மக்கள் குடும் பம், குடும்பமாக குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில்  வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டமாகவே காணப் பட்டது. அவ்வப்போது சாரலும் பெய்தது.

    இந்த நிலையில், நேற்று இரவு ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. 

    ஊட்டியில்  அடுத்த மாதம் கோடை பருவ சீசன் தொடங்கவுள்ள நிலையில் இந்த மாதத்தில் சம்மர் ஷவாஸ் எனப்படும் பெருமழையை விவசாயி களும், மக்களும் எதிர் பார்த்து காத்திருந்தனர். தற்போது பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி:
      
    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட் டுள்ள சூழலிலும், விடுமுறை நாட்கள் என்பதாலும், சமவெளிப் பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பத்தாலும் தமிழகம் மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களிலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற நாள்களைவிட வார விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது
     
    ஊட்டியில் வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் ஊட்டிக்கு சுமார் 40,000 பேரும், ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் 31,000 பேரும் வருகை தந்துள்ளனர். 

    ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 8,000 சுற்றுலா  பயணிகள் வந்திருந்த நிலையில், நேற்று  இது 13,000 ஆக அதிகரித்திருந்தது. அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 3,000 பேரும், நேற்று  3,500 பேரும் வருகை தந்திருந்தனர்.  குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 1,500 பேர்  வந்திருந்த நிலையில் நேற்று  இது 2,000 ஆக அதிகரித்திருந்தது.
     
    அதேபோல, ஊட்டி படகு இல்லத்துக்கு சனிக்கிழமை சுமார்  5,000 பேரும், நேற்று 8,000 பேரும் வந்திருந்தனர். பைக்காரா படகு இல்லத்துக்கு சனிக்கிழமை 2,500 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 4,000 ஆக அதிகரித் திருந்தது. 

    இவற்றைத்தவிர பைக்காரா அருவி, அவலாஞ்சி, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது.  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிறகு பகுதிகள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கார், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சோலூர் பொக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் ஊட்டி, கூடலூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக தேர்த்திருவிழா எளிமையான முறையில் கொண்டு நடைபெற்றது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 5-ந் தேதி அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றல் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் கங்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    சிகர நிகழ்ச்சியான மாரியம்மன் திருத்தேர்விழா இன்று இரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று தேதை வடம் பிடித்து இழுக்கிறார்கள். இதனையொட்டி இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்கேயே தங்கி இரவில் நடக்கும் தேர்த்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    ஊட்டி மற்றும் மாவட்டத்தின் பிறகு பகுதிகள் மற்றும் கேரள, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கார், பஸ்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்களின் வசதிக்காக ஊட்டியில் இருந்து கல்லட்டி வழியாக 6 சிறப்பு பஸ்களும், கூடலூரில் இருந்து 5 சிறப்பு பஸ்களும் இயகப்பட்டன. இந்த பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    தேரோட்ட நிகழ்ச்சி முடிந்ததும் நாளை காலை 8.45 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது. நடக்கிறது.

    ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி டேன் டீ தொழிற்சங்கம் சார்பில் குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    டேன் டீ தோட்டத் தொழி லாளர்களின் குறைந்தபட்ச ஊதிய இறுதி அரசாணையை உடனடியாக வெளியிட்டு 1-7-2021 முதல் ஊதிய உயர்வு கிடைக்க வழிவகை செய்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி டேன் டீ தொழிற்சங்கம் சார்பில் குன்னூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     
    தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தாங்கள் வாங்கி வந்த தின கூலியான ரூ.  340 போதாது என பல ஆண்டுகளாகப் போராடி வந்தனர்.

     இந்நிலையில் புதிய ஊதியத்தை தமிழக அரசு  நிர்ணயித்துள்ளதாகவும், அந்த  ஊதியத்தின்  இறுதி அரசாணை வெளியிடப் படாததால் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியம் என்ன என்பதை அரசாணை மூலம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், எல்.பி.எப், சி.ஐ.டி.யூ ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் குன்னூர் புளூஹில்ஸ்லிருந்து  கண்டனப்  பேரணியும், வி.பி. தெருவில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில்  டேன் டீ தொழிலா ளர்கள் 100&க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    இதேபோல் கோத்தகிரி டேன்டீயில் பணிபுரிந்து வரும் 120க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காமராஜர் சதுக்கத்தில் திரண்டு, கண்டன கோஷங்கள் எழுப்பிய வாறு, போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதில் ஒய்வூதிய நிலுவைத் தொகை மற்றும் பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விடுததனர்.
    தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.
    ஊட்டி:
      
    தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவித்துள்ளார்.
     
    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

    தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு ஆற்றியவர் களுக்காக பசுமை சாம்பியன் விருது வழங்கப்படவுள்ளது.  இதில் தமிழகத்தில் 100 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு வருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
     
    பசுமை சாம்பியன் விருதுக்கு தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நல சங்கங்கள், உள்ளாட்சிஅமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியோர் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்கள்.

    இவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான துறைகளில் ஆற் றிய சிறப்பான பங்களிப்பு கணக்கில் கொள்ளப்பட்டு அவர்கள் பசுமை சாம்பியன் விருதுக்காக மதிப்பீடு செய்யப்படுவர்.

    இவ்விருதுக்கு விண்ணப் பிப்போர் சுற்றுச் சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய பசுமைப் பொருள்கள் மற்றும் பசுமை தொழிற்நுட்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நீடித்த நிலையான வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, காலநிலை மாற்றம் தவிர்ப்பு, காற்று மாசு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சூழலியல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும்.
     
    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படும்.

    நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் 2 விருது கள் வழங்கப்பட வுள்ளன. விண்ணப்பங்களை மார்ச் 15&ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதகையிலுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 13 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை தலா 2 வார்டிலும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சுயேச்சை தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றது. 

    மேலும் சுயேச்சை கவுன்சிலர் காங்கிரசில் இணைந்ததால், தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இதனால் நெல்லி யாளம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருந்தது.

    இந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் சிவகாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் ஒருமனதாக சிவகாமி தேர்வு செய்யப்பட்டார். 

    இவர் பழங்குடியின பெண் ஆவார். இதையடுத்து துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் நாகராஜ் போட்டியிட்டார். அவரை எதிர்த்தும் யாரும் போட்டியிடா ததால், ஒரு மனதாக தேர்வானார். அவர்களுக்கு ஆணையாளர் அப்துல் ஹாரீஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

    நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கான தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக 9-வது வார்டு கவுன்சிலர் வள்ளி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த 17-வது வார்டு கவுன்சிலர் பொன்னி களம் இறங்கினார். இதில் 10 வாக்குகள் பெற்று வள்ளி வெற்றி பெற்றார். துணைத்தலைவராக காங்கிரசை சேர்ந்த யுனெஸ் பாபு 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து வருவாய்த் துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சேரிங்கிராஸ் பகுதி கார்டன் சாலை மற்றும் கோத்தகிரி சாலை பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சோதனையின் போது, 12 கடைகளில் இருந்து 9.25 கிலோ தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக 12 கடைகளிடம் இருந்து ரூ.19 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் நீலமேகம் உள்பட அத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தூதூர்மட்டம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி ஒரு மாவோயிஸ்டு கும்பல் வந்தது. அவர்கள் பழங்குடியின மக்களிடம் மூளை சலவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வகையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை ஓட்டியதோடு மட்டுமில்லாமல், தங்களை மாவோயிஸ்டு இயக்கத்தில் இணைத்து கொண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும் என அவர்களை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றிய விவரம் அறிந்ததும் கொலக்கொம்பை போலீசார், அந்த கிராமத்திற்கு சென்று விசாரித்து, 7 மாவோயிஸ்டுகளை தேடி வந்தனர். 

    இந்த நிலையில் நெடுகல்கம்பை கிராமத்திற்கு வந்து சென்ற வழக்கில் டேனிஸ், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீமதி ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பரில் கேரள மாநிலத்தில், நெடுகல் கம்பை பகுதிக்கு வந்து சென்றதாக கர்நாடகாவை சேர்ந்த சாவித்திரியை போலீசார் கைது செய்தனர்.


    பின்னர் அவரை கேரள மாநிலம் திருச்சூர் வையூர் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சாவித்திரியை போலீசார் கோர்ட்டில்  ஆஜர்படுத்துவதற்காக  கேரளாவில் இருந்து ஊட்டிக்கு அழைத்து வந்தனர்.

    கோர்ட்டில் நீதிபதி இல்லாததால் அவரை போலீசார் அழைத்து சென்றனர். இன்று அவரை மீண்டும்  கோர்ட்டில் ஆஜர்படுத்து ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வருகின்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தூதூர்மட்டம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    தேயிலை தோட்ட பகுதியை வனமாக மாற்றுவதால் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா, சேரங்கோடு பகுதியில்   அரசு தேயிலைத் தோட்டத்தின் பல பகுதிகள் வனமாக மாற்றப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது தொழிலாளர்கள் கூறும்போது, தேயிலை தோட்ட பகுதியை வனமாக மாற்றுவதால் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை. அரசு அறிவித்த குறைந்தபட்ச கூலியும் வழங்கப்படுவதில்லை. அதற்கு குறைவாகவே வழங்கப்படுகிறது. 

    எனவே, உடனடியாக குறைந்தபட்ச கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொழிலாளர்களின் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டார். அவருடன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு,கூடலூர் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தற்போது தி.மு.க. கூட்டணியில் 27 கவுன்சிலர்கள் உள்ளனர்
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 294 வார்டு கவுன்சிலர்களும் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

    ஊட்டி நகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் தி.மு.க. 20 இடத்திலும், காங்கிரஸ் 6 இடத்திலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 

    இவர்கள் அனைவரும் ஊட்டி நகர்மன்ற  கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கவுன் சிலர்களாக பதவியேற்றனர்.அவர்களுக்கு கமிஷனர் காந்திராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆணையரின் நேர்முக உதவியாளர் பிரான்சிஸ் சேவியர் வரவேற்றார். மேலாளர் மரிய லூவிஸ் நன்றி கூறினார்.

    தி.மு.க கூட்டணியில் த.மு.மு.கவுக்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவரும் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சுயேட்சையாக போட்டியிட்டு சென்ற 3 பேரும் தி.மு.க.வில் இணைந்தனர். 

    இதனால் ஊட்டி நகராட்சியில் தி.மு.க.வின் பலம் 23 ஆக உயர்ந்தது. தற்போது தி.மு.க. கூட்டணியில் 27 கவுன்சிலர்கள் உள்ளனர். 23 பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இருப்பதால் நகராட்சி தலைவர் பதவி, அந்த கட்சியே சேர்ந்தவரே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
    ×