என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவர் அந்த பகுதியில் பூட்டு கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மகன் ரோஷன்(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே பழமையான கார், மோட்டார் சைக்கிள்கள் சேகரிக்கும் பழக்கம் உடையவர்.
2-ம் உலகப்போரில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர் ஆகியவைகளை சேகரித்து வைத்துள்ளார். மினியேச்சர் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் இவர் அதனை தனது வீட்டில் அலங்கரித்து வைத்துள்ளார்.
அவர் இருசக்கர வாகன என்ஜினை கொண்டு ஒரு சிறிய கார் தயாரித்துள்ளார். இது தவிர தான் கற்ற கல்வி மூலம் ஒரு புதிய மோட்டார் சைக்கிளையும் தயாரித்துள்ளார்.
பெரிய கார்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த சிறிய காரில் உள்ளது. இருவர் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சிறிய ரக காரை அவர் வடிவமைத்துள்ளார். இதில் அடிக்கடி நகர் வலம் வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
மாணவர் தயாரித்த சிறிய அளவிலான மோட்டார் சைக்கிள், கனரக வாகனம், கார் ஆகியவற்றை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து ரோஷன் கூறியதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த பழங்கால அணிவகுப்பில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது ஒரு காரை இயக்கி புகைப்படம் எடுத்து கொள்ள அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்து விட்டனர்.
இதையடுத்து பழமையான மோட்டார் சைக்கிள்களை சேகரிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதன்படி இங்கிலாந்து நாட்டில் 1946-ம் ஆண்டில் தயாரித்த ஆர்டி மோட்டார் சைக்கிள், ஜப்பானில் 1985-ம் ஆண்டு தயாரித்த ஆர்டி350 மோட்டார் சைக்கிள், செக்கோஸ்லோவியா நாட்டில் தயாரித்த ஜாவா மற்றும் மோட்டார் சைக்கிளுடன் தனியே அமரும் வகையில் இணைக்கப்பட்ட லேம்பி 150 வகை உள்பட 12 மோட்டார் சைக்கிள்கள் சேகரித்து உள்ளேன்.
மகாத்மா காந்தி காலத்தில் பயன்படுத்தப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் இயக்கும் 3 சைக்கிள்களை சேகரித்து புதுமையாக வைத்துள்ளேன். மோட்டார் சைக்கிளின் 2 என்ஜின்களை கொண்டு சிறிய கார் தயாரித்தேன். அந்த கார் பெட்ரோல் மூலம் இயங்குகிறது.
பழமையான வாகனங்களை விற்காமல் பாதுகாப்பாக வைத்து வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
பகல் நேரங்களில் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் நடமாடும் கரடிகள் இரவு வேளைகளில் உணவு தேடி குடியிருப்புகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று குந்தா தாலுகா அலுவலகம் அருகே உள்ள மாணிக்கம் என்பவரது டீக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடி ஒன்று கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சமையல் எண்ணை மற்றும் உணவு பொருட்களை சூறையாடியது.
மேலும் அடுப்பையும் உடைத்து தள்ளிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் வழக்கம் போல் டீ கடையை திறக்க சென்ற மாணிக்கம் கடையின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் கரடியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் கொட்டரகண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மலைபிரதேசமான ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. ஊரடங்கு தளர்வுக்குபின் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு அனுமதியுடன் நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சினிமா படம் இங்கு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை.
இந்த நிலையில் 1 வருடத்திற்கு பிறகு நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் நேற்று சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.
‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ், நடிகர் முகேன்ராவ், நடிகை ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் காட்சிகள் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் படமாக்கப்பட்டது.
இதற்காக மைதானத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டன. மைதானத்தில் அமைக்கப்பட்ட கல்லறை காட்சியில் முகேன் ராவ் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகளும், அங்கு அவர் காரில் வருவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.
பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடப்பதை அறிந்த அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் திரண்டு படக்காட்சிகளை கண்டு ரசித்தனர். மேலும் நடிகர் முகேன் ராவுடன் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, பெயரிடப்படாத திரைப்படம் இயற்கை காட்சிகள் நிறைந்த ஊட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. ஊட்டி, கோத்தகிரியில் சில நாட்கள் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.






