என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாணவர் ரோ‌ஷன் தான் தயாரித்த சிறிய ரக காரை இயக்கியதையும், பழமையான மோட்டார் சைக்கிள்களையும் காணலாம்
    X
    மாணவர் ரோ‌ஷன் தான் தயாரித்த சிறிய ரக காரை இயக்கியதையும், பழமையான மோட்டார் சைக்கிள்களையும் காணலாம்

    ஊட்டியில் அசத்தல்- ஸ்கூட்டர் என்ஜின் மூலம் சிறிய ரக கார் தயாரித்த கல்லூரி மாணவர்

    பழமையான வாகனங்களை விற்காமல் பாதுகாப்பாக வைத்து வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று டிப்ளமோ என்ஜினீயரிங் மாணவர் ரோ‌ஷன் கூறினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவர் அந்த பகுதியில் பூட்டு கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மகன் ரோ‌ஷன்(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே பழமையான கார், மோட்டார் சைக்கிள்கள் சேகரிக்கும் பழக்கம் உடையவர்.

    2-ம் உலகப்போரில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், இந்தியாவில் உள்ள ஸ்கூட்டர் ஆகியவைகளை சேகரித்து வைத்துள்ளார். மினியேச்சர் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் இவர் அதனை தனது வீட்டில் அலங்கரித்து வைத்துள்ளார்.

    அவர் இருசக்கர வாகன என்ஜினை கொண்டு ஒரு சிறிய கார் தயாரித்துள்ளார். இது தவிர தான் கற்ற கல்வி மூலம் ஒரு புதிய மோட்டார் சைக்கிளையும் தயாரித்துள்ளார்.

    பெரிய கார்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த சிறிய காரில் உள்ளது. இருவர் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சிறிய ரக காரை அவர் வடிவமைத்துள்ளார். இதில் அடிக்கடி நகர் வலம் வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

    மாணவர் தயாரித்த சிறிய அளவிலான மோட்டார் சைக்கிள், கனரக வாகனம், கார் ஆகியவற்றை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    இதுகுறித்து ரோ‌ஷன் கூறியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த பழங்கால அணிவகுப்பில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அப்போது ஒரு காரை இயக்கி புகைப்படம் எடுத்து கொள்ள அனுமதி கேட்டபோது, அனுமதி மறுத்து விட்டனர்.

    இதையடுத்து பழமையான மோட்டார் சைக்கிள்களை சேகரிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதன்படி இங்கிலாந்து நாட்டில் 1946-ம் ஆண்டில் தயாரித்த ஆர்டி மோட்டார் சைக்கிள், ஜப்பானில் 1985-ம் ஆண்டு தயாரித்த ஆர்டி350 மோட்டார் சைக்கிள், செக்கோஸ்லோவியா நாட்டில் தயாரித்த ஜாவா மற்றும் மோட்டார் சைக்கிளுடன் தனியே அமரும் வகையில் இணைக்கப்பட்ட லேம்பி 150 வகை உள்பட 12 மோட்டார் சைக்கிள்கள் சேகரித்து உள்ளேன்.

    மகாத்மா காந்தி காலத்தில் பயன்படுத்தப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள் இயக்கும் 3 சைக்கிள்களை சேகரித்து புதுமையாக வைத்துள்ளேன். மோட்டார் சைக்கிளின் 2 என்ஜின்களை கொண்டு சிறிய கார் தயாரித்தேன். அந்த கார் பெட்ரோல் மூலம் இயங்குகிறது.

    பழமையான வாகனங்களை விற்காமல் பாதுகாப்பாக வைத்து வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×