என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
நடுஹட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சாலை வசதி, தடுப்புச்சுவர், நடைபாதை, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி மன்றத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நடுஹட்டி பகுதியில் உள்ள அட்டவளை, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இங்கு சாலை வசதி, தடுப்புச்சுவர், நடைபாதை, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி மன்றத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் நடுஹட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் கூறியதாவது:
இந்த கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளதால் கிராமத்துக்கும், பிரதான சாலைக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலைப் பகுதியிலேயே செல்ல வேண்டி இருக்கிறது.வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் பயணிக்கவும், இறப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும் போதும் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எந்த அடிப்படை வசதியும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story






