என் மலர்
நீலகிரி
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் தொடங்கியுள்ளதால், மக்கள் இதமான கால நிலை உள்ள ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை கொண்டாடி மகிழ சுற்றுலா தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் மாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். நேற்று காலையும், இன்றும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் கார், பஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.
ஊட்டிக்கு செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி, காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அங்கு மலர் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு வரும் மலர் செடிகளை பார்வையிட்டனர்.
மேலும் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் உள்ள அரியவகை செடிகள், மரங்களையும் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள புல் தரையில் அமர்ந்து பேசியும், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.
ஊட்டி படகு இல்லத்திற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அங்கு படகு சவாரி செய்து தங்கள் பொழுதை போக்கினர்.
அரசு ரோஜா பூங்கா, பைக்காரா மற்றும் ஊட்டி மற்றும் பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, கொடநாடு காட்சி முனை, லேம்ஸ்ராக், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தலங்களை ஒட்டிய கடைகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
கொடைக்கானலில் நேற்று முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே டோல்கேட்டில் 3 கி.மீ. தூரம்வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
அதன் பிறகும் வாகனங்கள் கடந்து செல்ல 1 மணிநேரத்திற்கும் மேலானது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானலில் விட்டுவிட்டு சாரல்மழையும் பெய்த வண்ணம் இருப்பதால் நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள் தங்கள் ஓட்டல் அறைக்கு செல்ல சிரமப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் பேக்கேஜ் விடுமுறையில் வந்திருப்பதால் அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சுற்றுலா இடங்களை பார்வையிட பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை சூரியோதம் பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டனர்.
அவர்களில் பலர் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். மேலும் படகுகள் மூலம் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்று ரசித்தனர். பகவதி அம்மன் கோவிலிலும் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். இதன் காரணமாக கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து சென்றாலும் கோடை விடுமுறையின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்புத்தாண்டு, நாளை புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
நேற்று மாலை முதலே தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
இன்று காலை ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அங்குள்ள புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தும் தங்களது பொழுதை கழித்தனர்.
இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், முதுமலை புலிகள் காப்பகம், நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமே காணப்பட்டது.
ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் படகு சவாரி செய்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதேபோல் பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
ஊட்டியில் உள்ள லாட்ஜ், காட்டேஜ்கள் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் லாட்ஜ்களிலும் அறைகள் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான லாட்ஜ்கள், விடுதிகளில் அறைகள் அனைத்தும் புக்கிங் ஆகிவிட்டது.
வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றுலாவை நம்பி வியாபாரம் செய்து வரும் தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் திடல் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வருகின்றன.
இதற்கிடையே அந்த பகுதிகளை சேர்ந்த 3 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது காட்டெருமைகள் கூட்டமாக சாலையில் உலா வந்தன. இதனால் அச்சம் அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களது பள்ளி வளாகத்திற்குள் சென்று பாதுகாப்பாக நின்று கொண்டனர்.
காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நீண்ட நேரம் கொண்டு இருந்ததால் வாகன போக்குவரத்து ஏற்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சில மணி நேரங்கள் கழித்து காட்டெருமைகள் அங்கிருந்து சென்றன. இதையடுத்து வாகன போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சாலைகளில் அடிக்கடி காட்டெருமைகள் நடமாடி வருகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே காட்டெருமைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்றனர்.
ஊட்டி:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு குட்டிகளுடன் 9 யானைகள் வந்தன.
இந்த யானைகள் கல்லாறு, பர்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக முகாமிட்டன. வனத்துறையினர் விரைந்து வந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வனத்துறைக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பையொட்டிய பகுதிகளிலேயே சுற்றி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றாக சுற்றிய காட்டு யானைகள் 3 குழுவாக பிரிந்து சின்னக்கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்தன.
இந்த நிலையில் இந்த யானைகள் அனைத்தும் மீண்டும் ஒன்று சேர்ந்து நேற்று குன்னூர் அருகே உள்ள உலிக்கல் கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் மற்றும் நீரோடை உள்ள பகுதிகளில் உலவி வருகின்றன.
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, யானைகள் மீண்டும் ஊருக்குள் வந்து விடாத வண்ணம் அந்த பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலா மையமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை சீசன் குதிரை பந்தயத்தோடுதான் தொடங்குவது வழக்கம். அதன்படி மெட்ராஸ் கிளப் சார்பில் இந்த ஆண்டுக்கான 135-வது குதிரை பந்தயம் தமிழ்புத்தாண்டான நாளை(வியாழக்கிழமை) தொடங்கி வருகிற ஜூன் மாதம் வரை 2 மாதங்கள் ஊட்டி ரேஸ்கோர்சில் நடக்கிறது.
இதற்காக பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக குதிரை பந்தயத்தில் சில போட் டிகளும் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை குதிரை பந்தய சங்கத்தின் செயலாளர் நிர்மல் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
மெட்ராஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் ஊட்டியில் இருமாதம் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குதிரை பந்தயம் தமிழ்புத்தாண்டான நாளை தொடங்கி ஜூன் மாதம் 18-ந் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த குதிரை பந்தயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600 குதிரைகள் ஊட்டிக்கு வந்துள்ளன. ஒரு பெண் பயிற்சியாளர் உள்பட 30 பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
அதேபோல, சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 ஜாக்கிகள் கலந்து கொள்கின்றன. அனைத்துப் பந்தயங்களும் காலை நேரத்தில் மட்டுமே நடைபெறும்.
நடப்பு ஆண்டில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தொடங்கி ஏப்ரல் 14, 15, 23, 24, 30 மற்றும் மே 1, 7, 8, 14, 15, 19, 20, 26, 27, ஜூன் 2, 3, 9, 10 ஆகிய நாள்கள் பந்தயங்கள் நடைபெறும். முக்கிய பந்தயங்களாக ஏப்ரல் 30-ந் தேதி பெண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 1,000 கினியாஸ் பந்தயமும், மே 1-ந் தேதி ஆண் குதிரைகள் மட்டுமே பங்கேற்கும் 2,000 கினியாஸ் பந்தயமும் நடைபெறும்.
மே 10-ந் தேதி டெர்பி ஸ்டேக்ஸ் பந்தயங்களும், மே 14-ந் தேதி டாக்டர்.எம்.ஏ.எம். ராமசாமி நினைவு கோப்பைக்கான சிறப்பு பந்தயமும் நடைபெற உள்ளது.
ஊட்டியில் நடக்கும் முக்கிய போட்டியான நீலகிரி தங்க கோப்பை போட்டி ஜூன் 2-ந் தேதி நடக்கிறது. ஊட்டி ஜாவனய்ல்ஸ் ஸ்பிரின்ட் கோப்பைக்கான போட்டி ஜூன் 6-ந் தேதி நடக்கிறது. ஜூன் 18-ந் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
மொத்தம் ரூ.5 கோடியே 35 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுதவிர மொத்தம் 18 போட்டிகள் நடக்கிறது. இம்முறை நடக்கும் இப்போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினமும் மும்பை, புனே, ஐதராபாத், மைசூர், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் நடக்கும் அனைத்து குதிரை பந்தயங்களின் நேரடி ஒளிபரப்பு ஊட்டி ரேஸ்கோர்சில் காண்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






