என் மலர்
நீலகிரி
- திறந்தவெளியை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது.
- 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது.
கூடலூர்,
நாடு முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் பொருட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் வீடுகள் தோறும் கழிப்பறைகள் கட்ட தலா ரூ.15 ஆயிரம் நிதி ஒதுக்கியது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்திட்டம் மக்களை முழுமையாக சென்றடையாத கிராமங்களும் உள்ளது. கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி சட்டப்பிரிவு-17 வகை நிலத்தின் கீழ் வருவதால் மக்களுக்கு தேவையான அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை. ஆத்தூர் கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கிராமத்தில் வசிக்கும் மக்கள் வெளியிடங்கள், கிராமங்களுக்கு உடனடியாக செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இதேபோல் தொலைபேசி அலைவரிசை சேவையும் எட்டாக்கனியாகவே உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் வாரத்துக்கு ஒருமுறை பல கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து காந்திநகர் என்ற இடத்திற்கு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து வாகனத்தில் கூடலூருக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். அடர்ந்த வனம் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் ஆத்தூர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 10 வீடுகளில் மட்டுமே கழிப்பறை வசதி உள்ளது. ஆனால் மீதமுள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இதுதவிர மகளிர் மட்டும் பயன்படுத்தும் வகையில் பேரூராட்சி மூலம் பொதுகழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர் இதனால் பெண்கள் பொதுகழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஆண்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. அப்பகுதியில் ஓடும் ஆற்றின் கரையோரம் திறந்தவெளியை இயற்கை உபாதை கழிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பறை கட்டி தர வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் ஓடும் ஆற்றின் நீரையே கூடலூர் பகுதி மக்களுக்கு குடிநீராகவும் வழங்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆத்தூர் பகுதி கிராம மக்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- தொடர் மழையால் உழவுப்பணி தொடக்கம்
- ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டை இயற்கை உரம் தேவைப்படுகிறது.
அரவேனு :
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது.
மலைக்காய்கறிகள்
விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இது தவிர இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். இதன் மூலம் அதிக விளைச்சல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
தற்போது கோழிக்கழிவு இயற்கை உரங்களை, உழவு செய்த விளைநிலங்களில் மண்ணுடன் கலந்து இடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி கோத்தகிரி பகுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:-
கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்ததால் நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டு உள்ளது. எனவே மீண்டும் மலைக்காய்கறிகளை சாகுபடி செய்ய தொடங்கி உள்ளோம். மண்ணின் வளத்தை பாதுகாப்பதற்காக ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் காய்கறி விளைச்சல் வெகுவாக அதிகரிக்கிறது.
40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உரத்தை விளைநிலத்திற்கு கொண்டு சேர்க்க ரூ.200 செலவாகிறது.
ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 மூட்டை இயற்கை உரம் தேவைப்படுகிறது. விளைநிலத்தைத் தயார் செய்து பீட்ரூட் பயிரிட உள்ளேன். ஒரு ஏக்கர் நிலத்தில் பி.ஜே. புரோ ரக விதைகளை பயிரிட 3 கிலோ தேவைப்படும். 300 கிராம் கொண்ட விதை பாக்கெட்டுகள் ரூ.1,050 முதல் ரூ.1,700 வரை தரத்திற்கு தக்கவாறு கிடைக்கிறது.
ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்ய ரூ.5 ஆயிரம் செலவாகிறது.
பீட்ரூட் விதைகளை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சி, மீண்டும் ஒருமுறை சாண உரத்தை போட்டு நன்கு பராமரித்து வந்தால் சுமார் 70 முதல் 80 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.
- நீலகிரி மாவட்டத்தில் 62 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் மண்சரிவும் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நீரில் மூழ்கி விவசாய பயிர்களும் நாசமாகி உள்ளன.
பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அதிகாரிகளும் அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டியில் உள்ள கோடப்பமந்து கால்வாயினை தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலரும், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை 91 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட மண் சரிவு, வீடுகள் சேதம், மரங்கள் சாய்வது போன்ற பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறை, மின்துறை, வனத் துறை அமைச்சா்கள் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது.
கோடப்பமந்து கால்வாய் தூா்வாரப்பட்டு இருந்தாலும், மழை அதிகமாக பெய்யும்போது சில நேரங்களில் கால்வாயில் இருந்து தண்ணீா் வெளியேறுகிறது. நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறைகளிடம் இது தொடா்பாக முழு விவரங்கள் பெறப்பட்டு நிரந்தர தீா்வு ஏற்படுத்த அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி கன மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் தயாா் செய்து மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்குப் பருமழையினால் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கான நிவாரணங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 62 வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.
கன மழையினால் ஒரு நபா் உயிரிழந்துள்ளாா். அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
- பின்னர் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
- தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஊட்டி:
கூடலூரில் இருந்து பாடந்தொரை வழியாக தேவர்சோலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது பாடந்தொரை அரசு பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் ஊட்டியில் இருந்து காய்கறி, பழக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு பந்தலூர் தாலுகா குந்தலாடிக்கு சென்றபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. விலக்கலாடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நடைபாதை மூழ்கியது.
- அத்திசால் பகுதியில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
ஊட்டி:
பந்தலூர் தாலுகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. விலக்கலாடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நடைபாதை மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகரில் மின்கம்பங்கள் சாய்ந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா அத்திசால் பகுதியில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இந்தநிலையில் சேரம்பாடி பள்ளிகுன்னுவில் மண்சரிவு ஏற்பட்டது.
மேலும் விநாயகர் கோவில் அருகே மண்சரிவால் ஓட்டல் சேதமடைந்தது. தொடர் மழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மேடான பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
மீண்டும் மண்சரிவு ஏற்பட்டால் கீழ்பகுதியில் உள்ள கடைகள் இடியும் நிலை காணப்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட துறையினர் அந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உயர் கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2022 நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது.
- ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி நாட்டின் சிறந்த 10 பார்மசி கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.
ஊட்டி:
உயர் கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2022 நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கல்வித் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறைகளின் மந்திரி ஸ்ரீ தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
இதில் ஜெ.எஸ் எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்), மைசூரு 34-வது இடம்பெற்று இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி தேசிய அளவில் 6-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி நாட்டின் சிறந்த 10 பார்மசி கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.
மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான மைசூரு ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி, மைசூரு ஜெ.எஸ்.எஸ். பல் மருத்துவ கல்லூரி, மைசூரு ஜெ.எஸ்.எஸ்.மருத்துவ கல்லூரி ஆகியவை முறையே 8-வது, 12-வது மற்றும் 34-வது இடங்களை தத்தமது பிரிவுகளில் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி. தனபால் மற்றும் கல்லூரியின் தேசிய தரவரிசை அலுவலக அதிகாரி முனைவர் கே.பி.அருண் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.
இந்த விருதினை பெற உறுதுணையாக இருந்த நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெகத்குரு சிவராத்ரி தேசிகேந்திர சுவாமிகள், இணை வேந்தர் முனைவர் பி.சுரேஷ், துணை வேந்தர் மருத்துவர் சுரீந்தர் சிங், பதிவாளர் மருத்துவர் பி.மஞ்சுநாத், மற்றும் அனைத்து அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் நன்றி தெரிவித்தார்.
- நீலகிரி மாவட்டத்தில் மழையால் வெள்ள சேதங்கள் ஏற்பட்டது.
- 19 மற்றும் 20-ந் தேதிகளில் கூடலூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ராசா எம்.பி. பார்வையிடுகிறார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அறிந்திடவும் தி.மு.க துணை பொதுசெயலாளரும், நீலகிரி எம்.பியுமான ராசா நாளை நீலகிரிக்கு வருகிறார்.
19 மற்றும் 20-ந் தேதிகளில் கூடலூர் மற்றும் ஊட்டி பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
நீலகிரி எம்.பியின் நிகழ்ச்சிகள் முறைப்படுத்திட கழக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், இளங்கோ, திராவிடமணி, செந்தில், முன்னாள் நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம், பரமேஷ்குமார், நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், சேகரன், ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, பரமசிவன், சிவானந்த ராஜா, காமராஜ், நெல்லை கண்ணன், சுஜேஷ், முன்னாள் வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், சதக்கத்துல்லா, வெங்கடேஷ், மோகன்குமார் ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், துணை தலைவர் வாசிம் ராஜா, ஊட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் மாயன், பேரூர் செயலாளர்கள் சின்னவர், பிரகாஷ், கலியமூர்த்தி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
- பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தேயிலை விலை வீழ்ச்சிக்கு தீர்வு காணவும், குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகளிடம் கேட்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஊர்த்தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட சிறுவிவசாயிகள் சங்கம் சார்பில் கோத்தகிரி அருகே கேர்கம்பை கிராமத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார். கேர்கம்பை ஊர்த்தலைவர் நஞ்சாகவுடர் அனைவரையும் வரவேற்றார்.தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது.
கூட்டத்தில் ஊட்டியில் அணிக்கொரை கிராமத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகளை ஒன்று திரட்டி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் உண்ணாவிரதம் நடத்தும் தேதியை தீர்மானிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் நீலகிரியில் உள்ள சிறு குறு விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மக்கள் பிரதான தொழிலாக விவசாய தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.
- தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தின் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது தெங்குமரஹடா மற்றும் அல்லிமாயார் கிராமங்கள். இந்த கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இங்குள்ள மக்கள் பிரதான தொழிலாக விவசாய தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கு மேட்டுப்பாளையம்- சத்தியமங்கலம் சாலை வழியாக சென்று மாயார் ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பகுதிக்கு என்று ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் பகுதிக்கு தான் வர வேண்டும்.
தற்போது மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தெங்குமரஹடா பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும், வேலை மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பவானிசாகர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் யாரும் பரிசல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் அத்தியவாசிய பொருட்கள் வாங்குவதற்காக பரிசல்களில் பயணம் செய்து பவானி சாகர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோத்தகிரிக்கு பரிசலில் சென்ற 3 பேர் ஆற்று வெள்ளத்தில் பரிசலுடன் சிறிது தூரம் அடித்து செல்லப்பட்டனர். இருப்பினும் பரிசல் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு அவர்களை காப்பாற்றினார்.
சாதாரண நாட்களில் இந்த பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்கு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் மழை போன்ற காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட ஆபத்தான பயணத்தையே மேற்கொள்ள வேண்டிய சூழல் அந்த பகுதி மக்களுக்கு உள்ளது.
எனவே தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊட்டி:
கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினமும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் ஏராளமாக இயக்கப்படுகிறது. இவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கடத்தப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. தமிழ்நாட்டில் குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் தொரப்பள்ளி சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காய்கறி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று கூடலூர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையே வேறு சில மூட்டைகளும் இருப்பது தெரியவந்தது. கைது இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தனர்.
அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 600 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே வெள்ளேரியை சேர்ந்த சாஜர் (வயது 38) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சாஜரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.






