என் மலர்
நீலகிரி
- அரசு கலைக்கல்லூரி சாலையில் இரண்டு இடத்தில் ராட்சத மரம் விழுந்தது.
- ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது.
இந்தநிலையில் ஊட்டியில் நேற்று மழை மீண்டும் வெளுத்து வாங்கியது. காலை 11 மணி முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 12 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை மழை நீடித்தது.
பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, படகு இல்லம், மத்திய பஸ் நிலையம், சேரிங் கிராஸ், ஊட்டி மார்க்கெட் பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
மழையால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியது. இதனால் ஊட்டி-காந்தள் இடையே செல்லும் நகர பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
அரசு கலைக்கல்லூரி சாலையில் இரண்டு இடத்தில் ராட்சத மரம் விழுந்தது. தீயணைப்பு துறையினர் எந்திரங்கள் உதவியுடன் மரத்தை அறுத்து பொக்லைன் மூலம் அகற்றினர்.
ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு நடந்த சாலை பணியால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்பட்டது. மேல் கோடப்பமந்து பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியது.
தொடர் மழையால் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, ஊட்டியில் 20 மி.மீ., மழை பதிவானது. இதேபோல கூடலூர் பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கனமழையால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
- புலி பிடிபட்டதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஊட்டி:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுகா, வாகேரி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புலி ஒன்றின் நடமாட்டம் இருந்தது.
அப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நாய்களை புலி அடித்து கொன்று அட்டகாசம் செய்து வந்தது. நாளுக்கு நாள் புலியின் அட்டகாசம் அதிகரிக்கவே கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்தநிலையில் அங்குள்ள ஏதன்வாலி தனியார் எஸ்டேட்டில் புலியின் நடமாட்டத்தை பார்த்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைத்தனர். நேற்று மதியம் 12 மணி அளவில் அங்கு வந்த புலி, கூண்டில் சிக்கிக்கொண்டது. பிடிபட்ட அந்த புலி 12 வயதுடைய பெண் புலி ஆகும்.
வனத்துறை மருத்துவக்குழுவினர் பெண் புலிக்கு மயக்க ஊசி போட்டு வன உயிரின சிகிச்சை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
புலி பிடிபட்டதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். புலி சிக்கிய கேரள பகுதி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஆடிமாதம் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.
கோத்தகிரி
ஆடிமாதம் அம்மனுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆடி மாத முதல் நாளான கடந்த 17-ந் தேதி தொடங்கியது. சஷ்டி நாளான காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் மகளிர் வழிபாட்டுக் குழுவினர் செய்துவருகின்றனர்.
- சப்-கலெக்டர் தகவல்
- அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .
ஊட்டி
குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம் தனியார் கல்லூரியில் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், உடனடியாக மின்சாரத் துறை, மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து ஏதாவது சம்பவங்கள் நடந்ததால் எவ்வாறு தெரிவிப்பது என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இது குறித்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறியதாவது:-
குன்னூரில் 15 இடங்கள் மற்றும் கோத்தகிரியில் 25 இடங்களில் அபாயகரமான இடங்களாக கண்டு அறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர், கன்னிமாரியம்மன் கோவில், பர்லியார் மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள கட்டபெட்டு பாரதிநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் அபாயகரமானது.
மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வடக்கிழக்கு பருவ மழை சமயத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை கண்காணிக்க குன்னுார் பகுதியில் 750 நபர்களையும், கோத்தகிரி பகுதியில் 713 நபர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாச்சியர் சிவக்குமார், கோத்தகிரி வட்டாச்சியர் காயத்திரி, அரசு அதிகாரிகள், பொது நல அமைப்புகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
- சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டி:
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிகொல்லி, பேபி நகர், மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பேபி நகரில் இருந்து செம்பக்கொல்லி வழியாக போஸ்பாராவுக்கு மண் சாலை செல்கிறது. இந்த சாலையை செம்பக்கொல்லி , தர்ப்பக்கொல்லி உள்ளிட்ட கிராம ஆதிவாசி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லை. இதனால் மண் சாலையை ஆதிவாசி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பயன்படுத்தி வருகின்றனர் . ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும் . இதனால் மண் சாலை சேறும் , சகதியுமாக காணப்படுகிறது.
எனவே அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர காலங்களில் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் தார் சாலை வசதி செய்து தர வேண்டும் என ஆதிவாசி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தேவ ர்சோலை பேரூராட்சி தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை ஆதிவாசி மக்கள் மனுக்கள் அளித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க ப்படவில்லை . இதனால் சேற்றில் நடந்து சென்று வருகின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தகவல்
- ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஊட்டி :-
நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான 2022-23-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 28-ந் தேதி வரை ஊட்டியில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், ஊட்டி கிளையில் மாணவர்கள் நேரில் சென்று ரூ.100 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
1.8.2002 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (அதிகபட்சம் வயது வரம்பில்லை) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிருக்கு இட ஒதுக்கீடும் வழங்கப்படும். இந்த பட்டய பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர், ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற முகவரிக்கு கூரியர் அல்லது பதிவு தபால் மூலமே அனுப்ப வேண்டும். 1.8.2022-ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இணைப்புகளுடன்) சமர்ப்பிக்குமாறும், இந்த பட்டய பயிற்சியானது கூட்டுறவு சங்கங்களின் பணியில் சேருவதற்கு அத்தியாவசிய பயிற்சி என்பதால் மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 2500-க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் உள்ளது.
ஊட்டி:-
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தும், பல்வேறு சாலைகளும் துண்டிக்கப்பட்டும் உள்ளது.
இதனை நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பந்தலூர் பேரிஸ் ஹால் மற்றும் கூடலூர் நர்த்தகி திருமண மண்டபத்திலும் வைத்து 2500 மேற்பட்டவர்களுக்கு அரிசி, கம்பளி, சேலை, சுமார் வேட்டி, துண்டு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சமீப காலங்களில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 8 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் வழங்கியதுடன் யானை தாக்கியும், மழையால் வீடுகள் சேதமடைந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினார்.
நடுவட்டம், கோழிபாலம் மங்குழி, தொரப்பள்ளி, தெப்பகாடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக்,மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, இளங்கோ, ராஜூ, பாண்டியராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், கூடலூர் பகுதி ஒன்றிய , நகர செயலாளர்கள் லியாகத் அலி, இளஞ்செழியன், சேகரன், சிவானந்த ராஜா, சுஜேஷ், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், பேரூர் செயலாளர்கள் சின்னவர், உதயகுமார், சுப்ரமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, சீனி, ராஜா, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, பேரூராட்சி தலைவர்கள் சித்ரா தேவி, வள்ளி, கலியமூர்த்தி, மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆலன், எல்கில் ரவி, நவ்புல், பிரதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.
- போலீசார் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றத் தொடங்கி உள்ளனர்.
ஊட்டி:
தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில், போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தக் கூடாது, அலுவலக வாகனங்களில் மட்டுமே போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்.
எனவே அனைத்து போலீசாரும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்டு அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றத் தொடங்கி உள்ளனர்.
கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் 3 கார்கள், 14 மோட்டார் சைக்கிள்களில் ஒட்டப்பட்டிருந்த போலீஸ் ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர். இதுதொடர்பான அறிக்கை போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கோத்தகிரி போலீசார் தெரிவித்தனர். இதேபோல மற்ற போலீஸ் நிலையங்களிலும் வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
- இலவசமாக வீடு கட்டி தர கோரி மனு அளித்தனர்.
- கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக, இலவசமாக வீடு கட்டி தர கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம். எங்களது வீடுகள் ஆபத்தான இடத்தில் உள்ளது. எனவே, அரசு எங்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும். தற்போது அல்லஞ்சி, பிரகாசபுரம் பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கு ரூ.1 லட்சம் முன் பணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை எங்களால் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே, எங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 139 மனுக்கள் பெறப்பட்டது.
- ஆடி மாதம் முழுவதும் ராமாயணம் வாசித்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
- மகா கணபதி ஹோமம் நடைபெற்றது
பந்தலூர்,
பந்தலூர் அருகே எருமாடு சிவன் கோவிலில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. 6 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ராமாயணம் வாசிக்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பகவதி சேவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்து சுவாமியை தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முழுவதும் ராமாயணம் வாசித்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- உடந்தையாக இருந்த புரோக்கருக்கும் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
- வாடகை கார் வாங்குவதற்காக கடன் வழங்க கோரி விண்ணப்பித்து உள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் புரிய மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் சுய தொழில் புாியும் இளைஞா்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மஞ்சூர் அருகே காத்தாடிமட்டம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வாடகை கார் வாங்குவதற்காக கடன் வழங்க கோரி ஊட்டியில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது அதற்கு கடன் வழங்க கணக்காளர் பிரபாகரன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று புரோக்கர் செல்வராஜ் மூலம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சுரேஷ் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை சுரேசிடம் கொடுத்து அனுப்பினர். அவர் கணக்காளர் பிரபாகரனிடம் லஞ்சம் கொடுத்தபோது, அங்கு ரகசியமாக கண்காணித்த போலீசார் கையும், களவுமாக பிரபாகரன், செல்வராஜ் 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. கடன் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ கணக்காளர் பிரபாகரனுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதமும், உடந்தையாக இருந்த புரோக்கர் செல்வராஜூக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். பின்னர் 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






