என் மலர்
நீலகிரி
- வகுப்பறையில் உள்ள 2 பீரோக்கள், மாணவா்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும், புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது.
- கரடியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட கடசோலை பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். நேற்று காலை மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல பள்ளிக்கு வந்தனர்.அப்போது பள்ளியின் வகுப்பறை மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்திருந்தது. இதையடுத்து, அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதிகாலை நேரத்தில் கரடி ஒன்று பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் உள்ள 2 பீரோக்கள், மாணவா்கள் அமரும் இருக்கைகளை உடைத்தும், புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது. உணவு ஏதும் கிடைக்காததால் கரடி மீண்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்துக்கு சென்று மறைந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், கரடி நடமாட்டம் இந்த பகுதியில் அதிகரித்துள்ளது. இந்த கரடியை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விவசாயிகளின் 21 ஆடுகளை தாக்கி கொன்றது.
- அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினா் சாா்பில் தெரிவித்தனர்.
ஊட்டி,
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மீனங்காடி, பீனாட்சி, அம்பலவயல், நென்மேனி, அதன் சுற்றுவட்டாரம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக புலி, உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.மேலும் விவசாயிகளின் 21 ஆடுகளை தாக்கி கொன்றது.புலியின் நடமாட்டம் காரணமாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனா். வனத்துறையினரும் புலியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா். மேலும், புலி நடமாடும் பகுதிகளில் கூண்டுகளை வைத்தனா். இந்நிலையில், அம்பலவயல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட வன அலுவலா் சஜினா, கால்நடை மருத்துவா் அருண் சக்கரியா மற்றும் வனத் துறையினா் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பத்தேரியிலுள்ள காப்பகத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு புலியின் உடல்நலம் குறித்து பரிசோதித்த பின் அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினா் சாா்பில் தெரிவித்தனர்.
- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிப்பறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.
- மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. கழிப்பறை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது.
ஊட்டி:
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மன்குளம் பகுதியில் சமீபத்தில் ஒரே அறைக்குள் 2 கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவே உடனடியாக அந்த கழிப்பிடங்களை மாநகராட்சி நிர்வாகம் மாற்றி அமைத்தது.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள் இதேபோன்ற ஒரு சம்பவம் நீலகிரி மாவட்டத்திலும் தற்போது நிகழ்ந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா பஜாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிப்பறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இடம் என்பதால் அந்த பொது கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அதன்பேரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிப்பறையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. கழிப்பறை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது.
பணி முடிந்ததால் அந்த பகுதியினர் ஆர்வத்துடன் கழிப்பறையை காண சென்றனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே அறையில் 2 பேர் அமரும் வகையில் கழிப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது. கதவு எதுவும் இன்றி 2 கழிப்பிடத்துக்கு மத்தியில் சிறு தடுப்புச்சுவர் மட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனை சிலர் செல்போனில் படம் பிடித்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. முறையான திட்டமிடுதல் இன்றி மத்திய அரசின் பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர். ஒரே இடத்தில் 2 கழிப்பிடம் கட்டிய காண்டிராக்டர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எதிர்ப்பு காரணமாக கழிப்பிடத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் நெல்லியாளம் நகராட்சி ஈடுபட்டு உள்ளது.
- ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.
- மருத்துவ ஊழியர் மற்றும் டிரைவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
குன்னூர்,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் லோரா என்பவர், குன்னூர் அருகே ட்ரூக் எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்து தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேகா குமாரி (வயது 22). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ரேகா குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசர சேவைக்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வந்தது. அப்போது ரேகா குமாரிக்கு பிரசவ வலி அதிகமாக இருந்ததால், வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் பிரசவம் பார்த்ததில், ரேகா குமாரிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து தாய், 2 குழந்தைகள் பத்திரமாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர். கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் மற்றும் டிரைவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
- கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி தவிட்டுமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
அப்போது மணிகண்டன் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் மணிகண்டனிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ரூ.1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பாலகொலா விளையாட்டு மைதானத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 81 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 73 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-
81 பேருக்கு வீட்டு மனைப்பட்டா நீலகிரியில் அனுபோக சான்று ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது விவசாயிகளின் நலன் கருதி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பட்டா வழங்குவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு திட்டம் மூலம் பட்டா வழங்கப்படுகிறது. பாலகொலாவில் மட்டும் 81 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பேருக்கு முதியோர் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பில் தோட்டக்கலை சார்ந்த மானியத்துடன் கூடிய நுண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 81 பேருக்கு ரூ.56.70 லட்சம் செலவில் வீட்டுமனை பட்டா, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 10 பேருக்கு ரூ.37.72 லட்சம் கடனுதவிகள் உள்பட மொத்தம் 213 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இதில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் மகாவீர் சித்ரன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார் பாலகொலா ஊராட்சி தலைவர் கலைசெல்வி , ஊராட்சி செயலர் கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- அபராத தொகை கட்ட முடியாமல் திணறி வந்தனர்.
- 100 -க்கும் மேற்பட்ட டிரைவர்கள் இதில் பங்கேற்றனர்.
கோத்தகிரி,
நாடு முழுவதும் கடந்த மாதம் புதிய போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து விதி மீறல்களுக்கும் அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் வாடகை வாகனம் ஓட்டும் ஆட்டோ, கார், லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அபராத தொகை கட்ட முடியாமல் திணறி வந்தனர்.
இந்த புதிய வாகன சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக நீலமலை அனைத்து தொழிலாளர்கள் சங்கம், வாகன பிரிவு மற்றும் கோத்தகிரி வட்டார வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கோத்தகிரி காமராஜர் சதுக்கம் முதல் கோத்தகிரி மார்க்கெட் திடல் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 100 -க்கும் மேற்பட்ட டிரைவர்கள் இதில் பங்கேற்றனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவும், புதிதாக போடப்பட்ட வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போக்குவரத்து அபராத தொகையை குறைக்க வேண்டும் என்பன போன்று கோஷங்கள் எழுப்பினர்.
- ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
- டேபிள், சோ்கள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக இங்குள்ள நகரப் பகுதியில் சுற்றி வரும் காட்டெருமைகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் குன்னூா் ஜிம்கானா கிளப் சாலை பகுதியில் உள்ள தனியாா் பங்களா வளாகத்துக்குள் நுழைந்த காட்டெருமை அங்கு வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த டேபிள், சோ்கள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தியது.
இதனால், அங்கிருந்த ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா். இந்த காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- நீலகிரி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா்.
ஊட்டி,
குரூப் 1 தோ்வில் ஆள்மாறாட்டம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (தொகுதி 1) பதவிக்கான நேரடி நியமன எழுத்துத் தோ்வு நாளை மறுநாள் (19-ந் தேதி) நடைபெறவுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் 3 மையங்கள், புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. சி.எம்.எம். மேல்நிலைப் பள்ளி, பெத்லேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 6 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.
இத் தோ்வில் 1,472 போ் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா். தோ்வைக் கண்காணிக்க துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்வுக் கூடங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கொண்டு செல்ல துணை தாசில்தார் நிலையில் 3 நடமாடும் குழு, தோ்வுக் கூடங்களில் தோ்வைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்கள் தலைமையில் கண்காணிப்பாளா்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் 6 மேற்பாா்வை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், தோ்வு எழுத வரும் மாற்றுத் திறனாளிகள் எவரேனும் இருப்பின் அவா்களுக்கு கீழ் தளத்தில் தோ்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வு எழுத வரும் பாா்வையற்றோா் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு அறை ஒவ்வொரு மையத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாா்வையற்றோா் தோ்வு எழுத வேண்டி உடன் வரும் எழுத்தாளா் அனுமதிக்க ப்பட்டுள்ளனா். பாா்வையற்றோருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.
தோ்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோ்வுக் கூடங்களுக்குள் கைப்பேசி, கால்குலேட்டா், எலக்ட்ரானிக் கை கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
- சான்றுகளை வழங்கினர்.
- புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
கோத்தகிரி,
நீலகிரி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. முகாமை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி தொடங்கி வைத்தார். இதில் பொது டாக்டர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், கண், மன நல டாக்டர்கள், எலும்பு, மூட்டு சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் சதவீதத்தை சோதனை செய்து, அதற்கான சான்றுகளை வழங்கினர். முகாமில் புதிய பழங்குடியின மாற்றுத்திறனாளிகள் 20 பேர் உள்பட மொத்தம் 37 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 72 மாற்றுத்திறனாளிகளுக்கு பழைய அடையாள அட்டைகளுக்கு பதிலாக, புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமில் மாற்றுத்திறனாளிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
- செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்பு மற்றும் பின்பு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுவது வழக்கம். நடப்பாண்டில் பருவ மழைக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதையொட்டி வன ஊழியர்களுக்கு தெப்பக்காடு முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. வனச்சரகர்கள் மனோகரன், விஜயன், மனோஜ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். முகாமில் வன விலங்குகளை நேரில் காணுதல், கால் தடயங்கள் மற்றும் எச்சங்களை கொண்டு கணக்கெடுப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜி.பி.எஸ். மற்றும் தொலைநோக்கு கருவிகள் கொண்டு கணக்கெடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- 99 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
- முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 99 மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 27 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கான காசோலைகள், வருவாய்த்துறை சார்பில் 2 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 5 பேருக்கு விதவை ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணை, 4 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் அம்ரித் வழங்கினார். கூட்டத்தில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சம்சுதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) மணிகண்டன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






