என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருவாரூர் அருகே இடப்பிரச்சினையால் சகோதரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே மேல எருக்காட்டூரைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 65). இவர் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் அன்பழகன் (61). 

    இருவரும் எருக்காட்டூரில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்குள் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் அசோகன் தனக்கு சொந்தமான இடத்தில் இரும்பு முள்வேலி வைத்துள்ளார். அதனை அன்பழகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு வந்து சேதப்படுத்தியுள்ளார். 

    இதில் இரு தரப்புக்கும் தகராறு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அசோகன் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதுபோல் அன்பழகனும் புகார் அளித்துள்ளார்.

    அவர்களது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோகன் கொடுத்த புகாரின் பேரில் அன்பழகன் உள்ளிட்ட 12 பேர் மீதும், அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் அசோகன் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    அசோகன் புகாரின் பேரில் அன்பழகன் (61), வீரக்குமார் (52), ராஜசேகர் (56), ராபர்ட் (26), முருகுபாண்டி (22), கண்ணப்பன் (35), ராமன் (22), ஐயப்பன் (41) முனியாண்டி (76), குணா (48) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

    மேலும் ராகுல்காந்தி, பசுபதி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். அன்பழகன் புகாரின் பேரில் அசோகன் (65), ரமேஷ் (50) ஆகிய இருவரை கைது செய்தனர். முருகேசன், ராஜா, ரேணுகாதேவி, ஹேமா, சுதர்சன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் சுரங்கபாதை அமைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    அந்த வழியில் செண்பகராயநல்லூர் சனிசந்தை - மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்லவேண்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின் 
    உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்லவேண்டியுள்ளது. 

    எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப் பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து கரியாப்பட்டினம் ரயில் நிலையம் அருகே செல்வராஜ் எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராஜ், காங்கிரஸ் கருணாநிதி, பஞ். தலைவர் கல்யாணி, முன்னாள் தலைவர் ராஜசிம்மன், மாவட்ட கவுன்சிலர் சோழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய மூன்று வட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். 

    மாநிலச் செயற்குழு உறுப்பினர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் மாநிலச் செயற்குழு நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மாநில முடிவின்படி நாகை கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு மருத்துவக கல்லூரி ஆகியவற்றில் வளாக கிளைகள் ஏற்படுத்துவது. 

    ஊரக வளர்ச்சித்துறை மகளிர் திட்டத்தில் உதவி திட்ட அலுவலர்களாக பணிபுரிபவர்களுக்கு, ஒப்பந்த நீட்டிப்பு செய்யவில்லை.

    இதே நிலை ஏனைய மாவட்டங்களில் இருக்கும்போது, அங்கெல்லாம் ஊதியம் 
    வழங்கப்பட்டு விட்டது என்பது தெரிந்தும், நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து பேசியும், உதவித் திட்ட அலுவலர்கள் 3 பேருக்கு பணிசெய்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை 4 மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருப்பதற்கு கண்டனத்தை தெரிவிப்பது.

    மாநில மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் கலெக்டர் உடனடியாக தலையிட்டு உதவி திட்ட அலுவலர்கள் அனைவருக்கும் பணி செய்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். 

    தவறும்பட்சத்தில் மார்ச் 15-ந்தேதி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

    மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங் சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சித்திரா நன்றி கூறினார்.
    நாகை அருகே கடற்கரை பகுதியில் 5 ஏக்கரில் மாப்பிள்ளை சம்பா சாகுபடி செய்து பட்டதாரி இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த 
    விழுந்தமாவடி சேர்ந்தவர் வேதையன் இவரது மகன் 
    அலைஅருண். எம்.பி.ஏ பட்டதாரி.

    இவருக்கு காமேஸ்வரம் ஊராட்சி தாண்டவமூர்த்திகாடு 
    கடலோர பகுதியில் 5 ஏக்கர் நிலம் உள்ளது. சுனாமியால் 
    அப்பகுதியில் கடல்நீர் உட்புகுந்து உவர் நிலமாக இருந்த 
    நிலையில் சென்ற ஆண்டு நவீன ரக நெல்லை சோதனை 
    முறையில் சாகுபடி செய்துள்ளார்.

    சரிவர விளைச்சல் இல்லாத நிலையில் தனது தாத்தா 
    ஆலோசனைப்படி பாரம்பரிய நாட்டுரகமான 180 நாட்கள் கொண்ட 
    வெள்ளம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியதும் ஆளுயர 7 அடி வரை 
    வளரக் கூடிய மாப்பிள்ளை சம்பா சாகுபடியை உரம், பூச்சிக்கொல்லி 
    மருந்து தெளிக்காமல் எந்தவித ரசாயனமும் கலக்காமல் 
    இயற்கையான முறையில் 5 ஏக்கரில் சோதனை முறையில் 
    சாகுபடி செய்தார். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.

    விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அலைஅருண் கூறியதாவது:-

    பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, 
    பனங்காட்டு குடவாழை, நேபாள சீரகசம்பா, வெள்ளைப் பொன்னி, கொத்தமல்லி சம்பா, பிசினி, சீரக சம்பா, அறுபதாம் குறுவை, குழியடிச்சான்.கருப்பு கவுனிஉள்ளிட்ட நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டுமென என்பதற்காகவும் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து வருவதாகவும்.அடுத்த ஆண்டு பல்வேறுநெல் ரகங்களை 
    சாகுபடி செய்ய உள்ளதாகவும், இது தனக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 

    தமிழக அரசு ஊக்குவித்து மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகளும் 
    பாரம்பரிய நெல் ரகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 
    மேன்மைப்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்த வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் 12-வது வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்றனர்.

    கல்லூரியில் நடைபெற்ற போஸ்டர் மேக்கிங் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.

    இதில் சான்றிதழ் பெற்ற மாணவர் கெ.பிரணேஷை கல்லூரியின் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ். பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ராமபாலன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் வே.சிவராமகிருஷணன், பைன் ஆர்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் சி.மல்லிகா, முனைவர் கார்த்திக், முனைவர் வி. சிவராமன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
    திருமருகல் அருகே நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூர் அரசு கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதற்கு முன்னாள் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். 

    இதில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் முறையை ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    அரசு அறிவித்தபடி நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும், வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்யபடுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

    தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இங்கர்சால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், மேலப்பூதனூர் கிராம நிர்வாக அலுவலர் வீரகுமார், கீழத்தஞ்சாவூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமருகல்-கங்களாஞ்சேரி சாலையில் 
    சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேதாரண்யத்தில் இல்லம் தேடி கல்வி மைய மாணவர்களுக்கு மாறுவேட போட்டி
    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் வீட்டிலிருந்தே கல்வி கற்க தமிழக அரசு இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கியுள்ளது. 

    இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக குடியரசு தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் அடுத்த வடமழை ரஸ்தாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டடது. 

    மாறுவேடப்போட்டி, திருக்குறள் போட்டி, ஓவிய போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசுகளை இல்லம் தேடி கல்வி மையத்தின் ஆசிரியை கோகிலா வழங்கினார். 

    இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
    கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாட்கள் நடைபெறுகிறது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி துவங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. 

    கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை 242 வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்வது வழக்கம். 

    அவ்வாறு வரும் பறவைகள் காலில் வளையம் இடப்பட்டு 
    பறவைகள் செல்லும் தூரம் வந்து செல்லும் நாடு குறித்து கணக்கிடப்படுகிறது.

    பறவைகள் வந்து செல்லும் இந்த சீசன் காலத்தில் ஜனவரி கடைசி வாரத்தில் பறவை கணக்கெடுக்கும் பணி கோடியக்கரை வனத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது. 

    வழக்கம் போல இந்த ஆண்டு நாளை, நாளை மறுநாள் இரு தினங்களிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. 

    இதில் ஏ. வி.சி கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வளர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் மித்ரா 
    குழுவினர் கலந்து கொள்கின்றனர். 

    இன்று காலை பறவைகள் இனம் கண்டறிய பயிற்சி வகுப்புகளும், தொடர்ந்து மாலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

    மறுநாள் 29-ந் தேதி காலை முதன்மை தலைமை வனஉயிரிக் காப்பாளர் சென்னை சேகர் குமார் நிரோஜ் திருச்சி மண்டல தலைமை வனப்பாது காவலர் சதிஷ் மற்றும் நாகை வனஉயிரினக் காப்பாளர் யோகேஸ்குமார் மீனா ஆகியோர் கணக்கெடுக்கும் பணியில் கலந்து கொள்கிறார்கள் என கோடிக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தெரிவித்துள்ளார்.
    வேதாரண்யத்தில் உப்புசத்தியா கிரக கட்டிடத்தில் புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு போராடிய வேதாரண்யம் பகுதி தியாகிகள் சர்தார் வேதரத்தினம், நாவிதர் வைரப்பன், நாகநாத தேசிகர், வீரபத்திரன், மாரிமுத்து, சுப்பையா பிள்ளை, ஐ.என்.ஏ. தியாகி பெரியசாமி, செம்போடை கணேசன் ஆகியோர் புகைப்பட கண்காட்சி திறப்புவிழா நடைபெற்றது.

    கண்காட்சியை முன்னாள் எம்.பி. பி.வி ராஜேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் நிர்வாகி வேதரத்தினம், உப்பு உற்பத்தியாளர் கேடிலியப்பன், உப்பள தொழிலாளர்கள் சங்க 
    துணைத் தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன் உள்பட 
    பலர் கலந்து கொண்டனர்.
    165 ஆண்டுகள் பழமையான நாகை தலைமை அஞ்சல் நிலையம் வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் 1857&ம் ஆண்டு டச்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டது. 

    அப்போது கலையரங்கம் ஆக திகழ்ந்த இடம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் 
    1933-ம் ஆண்டில் நாகப்பட்டினம் தலைமை தலைமை அஞ்சல் நிலையம் 
    ஆக மாற்றப்பட்டது.

    165 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகை தலைமை தபால் நிலைய கட்டிடம் விளக்குகளால் ஜொலித்து காணப்படுகிறது. 

    165 ஆண்டு காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் நாகை தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

    தேசியக்கொடியின் வண்ணத்தில் தலைமை தபால் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜொலிக்கிறது.
    வேதாரண்யத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் இந்து முன்னணி சார்பில் அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதற்கு மாவட்ட செயலாளர் வேதபிரசாத் தலைமை தாங்கினார்.
     
    இதில் அகில பாரத மீனவர் பேரவை அமைப்பாளர் வந்தியத்தேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர தலைவர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை நகராட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சீட்டு கேட்கவில்லை என்று ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான 
    ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

    நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். 

    நேர்காணலுக்கு பின்பு ஓ.எஸ் மணியன் எம்.எல்.ஏ. கூறுகையில்:-

    நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டுகளில் கூட போட்டியிடுவதற்கு பா.ஜனதா கட்சியினர் அ.தி.மு.க.வை நாடவில்லை.
    ஆகவே 36 வார்டுகளிலும் அதிமுக நேரடியாக களம் காண இருப்பதாக தெரிவித்தார். 

    தொடர்ந்து அ.தி.மு.க.வை விமர்சித்துப் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த நயினார் நாகேந்திரனருக்கு கண்டனம் தெரிவித்தார்.
    ×