என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை வடக்கு பொய்கைநல்லூரில் கார் மோதி குழந்தை பலியானது
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த மணிமாறன்&சிவகங்கா தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 

    இவர்களுக்கு சர்வின் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 19.10.22 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மணிமாறன் இறந்தார். 

    இதனால் சிவகங்கா குழந்தையுடன் தனது தாய் வீடான வேளாங்கண்ணி மாத்தாங்காடு சக்தி விநாயகர்கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தார்

    சம்பவத்தன்று சர்வின் தனது பாட்டி மகேஸ்வரிடம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சாலையை கடக்க ஓடியபோது அவ்வழியே சென்ற கார் சர்வின் மீது மோதியது. 

    இதில் குழந்தை படுகாயமடைந்தது. உடன் சர்வீனை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்து5 மாதங்களில் ஒன்றரை வயது மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வேதாரண்யத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.பி. கண்டன உரை நிகழ்த்தினார். நாகை மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக வந்த நெல் கதிர்கள் தண்ணீரில் பெருத்த சேதம் அடைந்ததற்கு விவசாயிகள் இழப்பீடு கிடைத்திடும் வகையில் பயிர் காப்பீட்டுத் தொகை உடன் கிடைத்திடவும், 100 நாள் வேலை பணியை காலை 8 என்பதை மாற்றி 10 மணிக்கு வேலை துவங்கிடவும், தொடர்ந்து கூட்டு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள். 

    எனவே உடன் கூட்டு குடிநீர் கிடைத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ராஜாஜி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    நாகூர் கீழப்பட்டினச்சேரி சிராமத்தில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனிடம் முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
    நாகப்பட்டினம்:

    மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை சந்தித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

    குறிப்பாக, நாகப்பட்டினம் நாகூர் கீழப்பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்து மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதால், கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, நம்பியார் நகர் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியினையும், சாமந்தான் பேட்டை தூண்டில் வளைவுடன் கூடிய சிறு துறைமுகப் பணியினையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். 

    திருமருகல், அம்பல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்திட வேண்டும், திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி மற்றும் பாக்கம் கோட்டூர் ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
    வேளாங்கண்ணி பேராலயத்தில் தவக்கால சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 2&ந்தேதி சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தவக்காலம் துவங்கியது. தவக்காலத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறும்.

    நேற்று 2-வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை பக்தர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர். 

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கோடியக்காட்டில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கோடியக்கரையில் சுமார் 2250 எக்டரில் காடு அமைந்துள்ளது. 

    இந்த காடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த காட்டில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இதில் புள்ளிமான், வெளிமான், முயல், காட்டுபன்றி, நரி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. 

    இந்த காட்டில் இயற்கை யாகவே விடத்துவரை, பாலா, நாவல், அரசு, ஆலமரம் பூவரசு, உதியன், புங்கன் போன்ற ஏராளமான மர வகைகள் உள்ளன. 

    மேலும் 156 வகையான மூலிகைச் செடிகளும் மற்றும் பல்வேறுபட்ட முள் செடிகளும் வளர்ந்துள்ளன.

    இந்த காட்டில் மான்கள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து புல்வெளியில் மேய்வதற்கு அதிகமான இடங்கள் இருந்தும் கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் நரிகள், நாய்கள் போன்ற விலங்குகள் அந்தக் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்து மேய வரும் மான்களை வேட்டையாடுகிறது. 

    இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் காட்டில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடிவெடுத்தது. அதன்படி எந்திரங்கள் மூலமாகவும், ஆட்கள் மூலமாகவும் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 


    இந்த கருவேல மரங்களை அகற்றி விட்டால் வனவிலங்குகள் பாதுகாப்பாகவும், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமலும் சுதந்திரமாக சுற்றித் திரிய வாய்ப்புண்டு. சுற்றுலாப் பயணிகளும் காட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு செல்லும்போது இயற்கையாக சுற்றி திரியும் மான்களை கண்டு ரசிக்க முடியும்.

    இதற்கான ஏற்பாடுகளை நாகப்பட்டினம் மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா உத்தரவின்படி வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் மேற்பார்வை யிட்டு பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
    திருமருகல் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே திருப்புகலூர் ஊராட்சி நெய்குன்னம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை நடத்தினர். 

    அதில் உள்ள மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருப்புகலூர் ஊராட்சி அண்ணாநகர் மெயின் ரோட்டை சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) என்பதும், காரைக்காலில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் நன்னிலத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    திட்டச்சேரி அருகே நெல் லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் புலனாய்வு துறை டி.ஜி.பி உத்தரவுப்படி திருச்சி சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி சுதர்சனம் மேற்பார்வையில் நாகை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் செந்தில்குமார், ரீனா அடங்கிய குழுவினர் திட்டச்சேரி அருகே பனங்குடி மெயின் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்குகளுக்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் மட்டும் நெல் மூட்டைகளை கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையில், நெல் மூட்டைக்கள் ஏற்றப்படும் இடம், இறக்கப்படும் இடம், நெல் சாகுபடி குறித்த விவரங்கள் ஆகியவை கொண்ட டிரான்சீட் படிவம் உள்ளதா, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். 

    இதன் மூலம் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    திருமருகல் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சி தனியார் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆதலையூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார். 

    வட்டார மருத்துவ அலுவலர் மணிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார், ஏனங்குடி மருத்துவ அலுவலர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    இதில் ஏனங்குடி, ஆதலையூர், கேதாரிமங்கலம் பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

    இதில் அப்பள்ளியின் தாளாளர் ஜாஹிர் உசேன், பள்ளி அறங்காவலர் மைதீன் அப்துல் காதர், முதன்மை நிர்வாகி தமிமுல் அன்சாரி, பள்ளி தலைமை ஆசிரியர் நேருஜி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    விசைப்படகில் உரிய ஆவணங்கள் இன்றி கடலில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களிடம் கப்பல் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் 
    சேர்ந்தவர் கலைவாணன் இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10-ம் தேதி கலைவாணன், ராஜி, கவியரசன், செங்குட்டுவன் உள்ளிட்ட 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    திருமுல்லைவாசல் கிழக்கே 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய இந்திய கப்பல் படையினர் மீனவர்களின் படகையும் ஆவணங்களையும் சோதனை செய்தனர், உரிய ஆவணங்கள் இன்றி கடலுக்கு மீன்பிடிக்க தொழிலுக்கு வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து படகுடன் 9 மீனவர்களையும் நாகை துறைமுகம் அழைத்து வந்தனர், அங்கு மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீஸ்£ர் விசாரணை மேற்கொண்டதில் கலைவாணன் நாகை அக்கரைப்பேட்டை மணிகண்டனிடமிருந்து படகு வாங்கியதும் பெயர் மாற்றம் செய்யப்படதாததும் தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் அடையாள அட்டை மற்றும் படகின் ஆவண நகலை கொடுத்தனர். பின்பு அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய பின்பு அவர்களை விடுவித்தனர். 

    அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் இல்லாமல் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு நாளை மீன்வளத்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
    கத்தரிப்புலத்தில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கத்தரிப்புலம் கிராமத்தில் கோவில் குத்தகை வடக்கில் உள்ள வடகாடு சாலை கடந்த பத்தாண்டு காலமாக மண் சாலையாக இருந்து வருகிறது. 

    இந்த சாலையில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் பல விபத்துகளுக்கு ஆளாகி வருகிறார்கள். பலமுறை அரசுக்கு இந்த சாலையை சீரமைத்து வடிகால் வசதி செய்து தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ஆனால் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மேற்படி சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் ஒன்றியக்குழு தலைவருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
    நாகை அருகே கருவேலங்கடை அசகண்டவீரன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது-.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் பழமை வாய்ந்த அண்ணாட்சி அம்மன், அக்கம்பிளவாய் சமேத அசகண்டவீரன் கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7&ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கணபதி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. 

    தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹீதியும், தொடர்ந்து கடத்தை சுமந்து வலம் வந்து அசகண்ட வீரன் கோவில் கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
    நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    ராகவேந்திரர் அவதரித்த தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். 

    இதன்படி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ராகவேந்திர அஷ்டாஷர ஹோமம், மகா அபிஷேகமும் நடந்தது.

    தொடர்ந்து ராகவேந்திரர் அலங்கரிக்கப்பட்டும், மாஞ்சாலி அம்மனுக்கு 50, 100,200,500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டும், மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ×