என் மலர்
மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோயிலில் மாணவர்களுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள முத்துராஜம் மெட்ரிக் பள்ளியில் 4வயது முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.
போட்டிக்கு பள்ளி முதல்வர் ஜேக்கப்ஞா னசெல்வன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த தியாகராஜன், மதன்,விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் சிவசங்கர் போட்டிகளை தொடங்கிவைத்தார்.
நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில் நான்கு வயது குழந்தைகள் முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இயற்கை ஓவியங்கள், உதவும் கரங்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஓவியங்கள் வரைந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
வைத்தீஸ்வரன்கோயிலில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சீர்காழி:
வைத்தீஸ்வர ன்கோயிலில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற தலைப்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் செயலாளர் அன்புச்செழியன்தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள்பிரபாகரன், சசிக்குமார், செல்லசேது ரவிக்குமார், மலர்விழி, நகர செயலாளர் சுப்பராயன், பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெ க்சாண்டர் வரவேற்றார்.
கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, ராமலிங்கம் எம்.பி. ஆகியோர் திமுக அரசின் சாதனைகள் குறித்து பேசினர். , மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. பேசுகையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 4 ஆண்டுகளாக வழங்கப்படாத தாலிக்கு தங்கம் வழங்கும் நலத்திட்ட உதவியை தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற உடன் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டத்தை ஒரே ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்க ப்படாத இலவச மின்சார இணைப்பு ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட ஓராண்டில் பல்வேறு சாதனை திட்டங்களை தி.மு.க அரசு செயல்படுத்தியுள்ளது என்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், வீட்டு உபயோகபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருஇந்த ளூர், மேலஆராயத்தெரு ஸ்ரீ மேல முத்து மாரியம்மன் கோயிலின் 78-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த வாரம் பூச்சொரித லுடன் காப்பு கட்டி விழா துவங்கியது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு தெருவாசிகளால்அபிஷேக ஆராதனைகள் செய்து வந்தனர். ஸ்ரீ காத்தவராய சுவாமி கழுகு ஏறுதலும், திருக்கல்யாண வைபோ கமும் நடைபெற்றது.
16-ம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழா காவிரிகரை யிலிருந்து மங்கலவாத்திய ங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டுஆலயம் வந்தடைந்தது. முத்து மாரியம்மன் காத்தவராய சுவாமி எழுந்துகாட்சிதர ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்ட த்தில் சக்திகரகம் இறங்கியது.
தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். காவடி எடுத்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி ஆனந்த நடனமாடி கோவிலை சுற்றி வந்தனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்கார த்தில் எழுந்தருளிமகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகர்மன்ற உறுப்பினர் மார்க்கெட் கணேசன், முன்னாள் கவுன்சிலர் ரகு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விடியற்காலை கொலுக்காட்சியில் குருமகா சன்னிதானம் அருளாசி வழங்குகிறார்.
குத்தாலம்:
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவின் போது ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
இன்று இரவு 10 மணியளவில் பட்டணப்பிர–வேசம் நிகழ்ச்சி தொடங்கு–கிறது. தொடர்ந்து விடியற்காலை 4 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை சுமார் 70 பேர் சிவிகை பல்லக்கில் தூக்கிசெல்வர்.
அப்போது ஆதீனத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு ஆதீனகர்த்தருக்கு பூரணகும்ப மரியாதைடன் தீபாராதனை காட்டி வழிபடுவர். அப்போது ஆதீனகர்த்தர் பக்தர்களுக்கு 5 ரூபாய் காசுகளை வழங்கி ஆசி வழங்குவார்.
பின்னர் ஆதீன மடத்திற்கு சென்றபிறகு சிறப்பு அலங்காரத்தில் குருமகா சன்னிதானம் கொலுக்காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தநிலையில் மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த மாதம் 27-ந்் தேதி பல்லக்கு தூக்கும் (பட்டணபிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.பாலாஜி தடைவிதித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், அ.தி.மு.க, பாஜ, பாமக, இந்துமக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிகொள்வதாக கடந்த 7ம் தேதி ஆர்.டி.ஓ பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி பிரபலமானதால் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு பட்டணபிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பட்டணபிரவேச நிகழ்ச்சிக்கு முறையான பாதுகாப்பு அளிப்பதற்காக டி.ஐ.ஜி. தலைமையில் 2
எஸ்.பி.க்கள், 6 டி.எஸ்.பிக்கள், 4 ஏ.டி.எஸ்.பிகள், 24 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் இன்று தருமபுரம் ஆதீனம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆதீன நுழைவுவாயில் பகுதியில் பேரிகார்டுகள் போட்டு விஐபி பாஸ் வைத்திருக்கக்கூடிய வாகனங்களை மட்டுமே ஆதீனத்திற்கு அனுமதிக்க உள்ளனர். மற்றவர்கள் வரும் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதீன திருமடத்தில் நான்கு வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் பேரிகார்டுகள் போட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மிக விழா. இதில் எந்த அரசியலும் நுழையாத அளவிற்கு தருமபுரம் ஆதீனம் தனது பாதையை அமைத்துள்ளது.
இதில் அனைத்து சிவனடியார்களும் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
சீர்காழி:
சீர்காழி ஒன்றியம் விளந்திடசமுத்திரம் ஊராட்சி ஜெயேந்திரர்நகர் உள்ளது.சிதம்பரம் செல்லும் பிரதான சாலை அருகேயுள்ள இந்த நகரில் பலகுடியிருப்புகள் உள்ளன.மேலும் இப்பகுதியை கடந்துதான் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனை கடந்துதான் மக்கள் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கிநிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீர்காழி அருகே குவாரியிலிருந்து இரவில் மணல் அள்ளி சென்ற லாரிகளை கிராமமக்கள் சிறைபிடித்தனர்
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு குன்னம் மற்றும் பாலூரான்படுகை பகுதிகளில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு ஆன்லைன் புக்கிங் முறையில் லாரிகளுக்கு தினந்தோறும் மணல் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. நீண்ட கோரிக்கைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக டிராக்டர்களிலும் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டு அள்ளப்படுகிறது.
இதனிடையே மாலை 6 மணிவரை மட்டும் குவாரிகளிலிருந்து மணல் எடுத்து செல்ல வேண்டும் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிவரை மணல் லாரிகள் மணல் எடுத்து சென்று வருவதால் சென்னியநல்லூர் பகுதி கிராமமக்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குவாரியிலிருந்து மணல் ஏற்றி சென்ற லாரிகளை பாஜக ஒன்றிய தலைவர் நேதாஜி தலைமையில் கிராமமக்கள் சிலர் சிறைபிடித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் லாரி ஓட்டுனர்களிடம் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மணல் ஏற்றி செல்லக்கூடாது என அறிவுறுத்தி விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணிநேரம் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை அருகே தனியார் பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஈச்சங்குடி கிராமம் கடலியில் வசந்த முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெளிநாடுகளைச் சேர்ந்த 9 பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவ -மாணவிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இதில் கல்லூரியின் நிர்வாகி பாலமுருகு, நாகை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், துணை முதல்வர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் தேவிகா வேந்தன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே புற்றடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அகர ஆதனூர் கிராமத்தில் புற்றடி மாரியம்மன் கோயில் உள்ளது.
கோவிலின் பூரண பரம்பரை அறங்காவலர் தம்பி.பாலவேலாயுதம் குடும்பத்தினர் முன்னிலையில் 86-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 6 ந்தேதி பூச்சொரிதலுடன் காப்பு கட்டி விழா துவங்கியது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு கிராமவாசிகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. 16ம்நாள் திருவிழா–வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு பெரிய குளக்கரையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் புறப்பட்டு வந்தடைந்தது.
ஆலயம் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியது. தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அளவு காவடி எடுத்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடி கோவிலை சுற்றி வந்தனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மொழையூர் பஞ்சாயத்து, காளிங்கராயர் ஓடையை சேர்ந்தவர் பாலையா மகன் சுரேஷ் (வயது 27). பெயிண்டர். அய்யா பிள்ளை மகன் மணிகண்டன் (26).
மயிலாடுதுறையில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது சோழசக்கர நல்லூர் மெயின் ரோடு என்ற இடத்தில் சென்றபோது மயிலாடுதுறை- சென்னை அரசு பேருந்து இவர்கள் மீது மோதியதில் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த மயிலாடு துறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களை அரசு பெரியார் மருத்து வமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்-சிவஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணீற்று–மையம்மை உடனாகிய சிவலோக தியாகேசர் சுவாமி கோயில் உள்ளது.
இக்கோவிலில் தனி சன்னதியில், தோத்திரபூர்ணா பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.
இக்கோவிலில் அன்றைய காலத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய இந்த ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் செய்விக்கப்பட்டது.
பின்னர் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது.நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து வழிபாடு செய்தனர்.
அதிகாலை சிவ ஜோதிதரிசனம் நடைபெற்றது. ஸ்ரீ மத் சட்டநாததம்பிரான் சுவாமிகள் அருள்பிரசாதம் வழங்கினார்.
மயிலாடுதுறையில் நடந்த தி.மு.க.வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பங்கேற்றார்.
தரங்கம்பாடி:
தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மயிலாடுதுறை அருகே பட்டமங்களம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள், நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் ஞானஇராம நாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தி.மு.க உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினருமான பொன். முத்துராமலிங்கம் மற்றும் தலைமை கழக பேச்சாளர் துறையூர்.துரைபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசுகையில் கூறியதாவது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தங்கமணி முதல் எடப்பாடி வரை கொண்டு சேர்க்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் யாருக்காக திட்டம் உருவாக்கப்பட்டதோ அவர்களிடம் அந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு போய் சேர்த்துள்ளார்.
பாஜகவின் அண்ணாமலை பொய் மான் கரடி. வெகுசீக்கிரம் அது நிறுபனம் ஆகும். மத்திய அரசின் பல்வேறு நெருக்கடியிலும் தமிழக முதல்வர் தந்திரமாக ஆட்சி சக்கரத்தை சுழற்றிக் கொண்டு இருக்கிறார் என கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவி, துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சாந்தி ராமலிங்கம், துணை அமைப்பாளர் டெய்சி, செம்பனார்கோவில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவரும், பட்டமங்களம் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வமணி நன்றி கூறினார்.






