என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி
    X
    ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி

    தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இன்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விடியற்காலை கொலுக்காட்சியில் குருமகா சன்னிதானம் அருளாசி வழங்குகிறார்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவின் போது ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

    இன்று இரவு 10 மணியளவில் பட்டணப்பிர–வேசம் நிகழ்ச்சி தொடங்கு–கிறது. தொடர்ந்து விடியற்காலை 4 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில்  தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியை சுமார் 70 பேர் சிவிகை பல்லக்கில் தூக்கிசெல்வர்.

    அப்போது ஆதீனத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டின் முன்பு வண்ணக் கோலமிட்டு ஆதீனகர்த்தருக்கு பூரணகும்ப மரியாதைடன் தீபாராதனை காட்டி வழிபடுவர். அப்போது ஆதீனகர்த்தர் பக்தர்களுக்கு 5 ரூபாய் காசுகளை வழங்கி ஆசி வழங்குவார். 

    பின்னர் ஆதீன மடத்திற்கு சென்றபிறகு சிறப்பு அலங்காரத்தில் குருமகா சன்னிதானம் கொலுக்காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்தநிலையில் மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த மாதம் 27-ந்் தேதி பல்லக்கு தூக்கும் (பட்டணபிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.பாலாஜி தடைவிதித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், அ.தி.மு.க, பாஜ, பாமக, இந்துமக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிகொள்வதாக கடந்த 7ம் தேதி ஆர்.டி.ஓ பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால்  பட்டணபிரவேசம் நிகழ்ச்சி பிரபலமானதால் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு பட்டணபிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பட்டணபிரவேச நிகழ்ச்சிக்கு முறையான பாதுகாப்பு அளிப்பதற்காக டி.ஐ.ஜி. தலைமையில் 2
     எஸ்.பி.க்கள், 6 டி.எஸ்.பிக்கள், 4 ஏ.டி.எஸ்.பிகள், 24 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் இன்று தருமபுரம் ஆதீனம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

    ஆதீன நுழைவுவாயில் பகுதியில் பேரிகார்டுகள் போட்டு விஐபி பாஸ் வைத்திருக்கக்கூடிய வாகனங்களை மட்டுமே ஆதீனத்திற்கு அனுமதிக்க உள்ளனர். மற்றவர்கள் வரும் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    ஆதீன திருமடத்தில் நான்கு வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் அனைத்து சாலைகளிலும் பேரிகார்டுகள் போட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் இன்று இரவு பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மிக விழா. இதில் எந்த அரசியலும் நுழையாத அளவிற்கு தருமபுரம் ஆதீனம் தனது பாதையை அமைத்துள்ளது. 
    இதில் அனைத்து சிவனடியார்களும் கலந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×