என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி அருகே கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் நத்தம் பகுதியில் தனியார்கலை மற்றும் அறிவியல்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை வகுப்புகள் முடிந்து பேருந்தில் செல்வதற்காக சட்டநாதபுரம் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்

    அப்போது மாணவர்க ளுக்கு இடையேமோதல் ஏற்பட்டது.இதனையடுத்து இரு பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக வெளிநபர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பதற்றமான சூழ்நிலை காண ப்பட்டது. ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் அதனை தட்டிக் கேட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து சீர்காழி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் மாணவர்களுக்கு இடை யேயான மோதலை தடுத்த னர், அப்போது மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 12 பேரை விரட்டிப் பிடித்த சீர்காழி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் சட்டநாதபுரம் கைக்காட்டி பகுதியில் பரபரப்பாக சூழ்நிலை நிலவியது.
    மயிலாடுதுறையில் நடந்த நகராட்சி கூட்டத்தில் முறைகேடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்திய தற்காக தொடரப்பட்ட வழக்கீல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடாக நகராட்சி நிதியில் இருந்து ரூ.9 லட்சம் செலுத்த நகர மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர் அபராதம் செலுத்த நடவடிக்கை எடுக்க நகரமன்றத்தில் கோரிக்கை வைத்து தி.மு.க. ம.தி.மு.க. கட்சியை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மயிலாடுதுறை நகராட்சி நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு செயல் திட்டங்களுக்கும் செலவினங்களுக்கும் ஒப்புதல் கோரப்பட்டது. இதில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட நீர்நிலைகள் குப்பைகள் கொட்டி மாசுபடுதல் நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது மற்றும் ஆக்கிரமிப்புகள் தொட ர்பாக விஜயகுமார் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2018ம் ஆண்டு தொடுத்த வழக்கில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடாக ரூ.9 லட்சம் செலுத்த ஆணையிடப்பட்டது.

    9 லட்சம் இழப்பீட்டு தொகை கட்டுவதற்கு நகராட்சிக்கூட்டத்தில் ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நகரமன்ற உறுப்பினர்கள் நிர்வாக சீர்கேட்டால் சுற்றுசூழல் பாதிப்படைந்ததற்கு அப்போதை அதிகாரிகளும், பாதாளசாக்கடையை பராமரித்த ஒப்பந்தக்கா ரர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் ஒப்புதல் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மயிலாடுதுறை நகரில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாளசாக்கடை திட்ட பணியை முறையாக பராமரிக்காத வெர்சடைல் நிறுவனத்திற்கு மீண்டும் ஒப்பந்த பணி வழங்கி காலநீட்டிப்பு செய்வதற்கு அனுமதியளிக்க எதிர்ப்பு தெரிவித்து நகரமன்ற உறுப்பினர்கள் ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசன், தி.மு.க.வை சேர்ந்த கல்யாணிரகு ஆகிய இருவர் வெளிடப்பு செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவாலங்காடு நீர் தேக்கிக்கு மேட்டூர் காவிரி நீர் வந்தடைந்தது.
    குத்தாலம்:

    மேட்டூர் அணை கடந்த 24ம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இரவு கடைமடை பகுதியான  மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் தண்ணீர்  வந்தடைந்தது. காவிரியில் முதல் கட்டமாக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நீர் தேக்கியில், தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் யோகேஷ் மற்றும் விவசாயிகள் காவிரி நீருக்கு மலர்தூவி வரவேற்பளித்தனர்.

    மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடையணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்த ஆண்டு முன்கூட்டியே மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதால் மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். காவிரி மற்றும் கிளை ஆறுகள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மத்திய மந்திரிக்கு ஆயிரம் அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
    சீர்காழி:

    சீர்காழியில் கடந்த 2 ஆண்டுகளாக 13க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்கள் நின்று செல்வதில்லை. இதனை வலியுறுத்தி அனைத்து ரெயில்களும் நின்று செல்ல பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 

    அதன்படி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஞானமணி, செயலாளர் வெங்கட்ராஜ், பொருளாளர் சத்தியநாராயணன் மற்றும் மதி, கார்த்திக் உள்ளிட்டோர் கோரிக்கைகள் அடங்கிய 2 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் எழுதப்பட்ட நிலையில் தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் முதல் கட்டமாக ஆயிரம் அட்டைகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்ணவுக்கு அனுப்பி வைத்தனர்.

    சீர்காழியில் காவலர்களுக்கு விபத்து, பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், புதுப்பட்டினம், திருவெண்காடு, வைத்தீ ஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் சீர்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக் தலைமை வகித்தார். அரசு தலைமை மருத்துவர் பானுமதி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் முன்னி வகித்தனர்.பயிற்சி முகாமில் 108 வாகனத்தில் பணி புரியும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இணைந்து முதலுதவி குறித்த செயல் விளக்கம் அளித்தனர்.

    குறிப்பாக விபத்தில் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்தவர்கள், பாம்பு கடித்து பாதிக்கப்பட்ட வர்கள், மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திடீரென சுயநினைவு இழந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தற்காப்பு முதலுதவி சிகிச்சைகள் குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இதில் சீர்காழி சரகத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் அனைத்து நிலை காவலர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் வெற்றி பெற்ற சமையல் உதவியாளரை ஒன்றியக்குழு தலைவர் பாராட்டினார்.
    சீர்காழி:

    சீர்காழி ஊராட்சி ஒன்றியம் வாணிவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்துவரும் பரகத்நிஷா மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டியில் வெற்றிபெற்று சான்றிதழ் பெற்றுள்ளார். 

    அவர் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    உடன் ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோர் இருந்தனர்.
    தரங்கம்பாடியில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் 70 வருவாய் கிராமங்களுக்கான நிர்வாக கணக்குகள் முடித்த தொடர்பான ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

    தரங்கம்பாடி தாலுக்காவில் 70 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் நிர்வாக கணக்குகள் முடித்தல் தொடர்பான ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 17 ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் 70 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை தொடர்பாக மனு அளித்துள்ளனர். 

    ஜமாபந்தி நிகழ்ச்சியானது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாளில் பயனாளிகளுக்கு முதியோர், விதவை உதவித்தொகை, 16 குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும் வழங்கி பேசினார். 427 நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை தொடர்புடைய துறைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட பரிசீலனையில் உள்ளது என ஜமாபந்தி அலுவலர் தெரிவித்தார்.

    இதில் வருவாய்க் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் இந்துமதி, நில எடுப்பு தனி வட்டாட்சியர் சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் பாபு, தலைமை நில அளவர் சங்கர், மண்டல துணை வட்டாட்சியர் சதீஷ்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயராணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் பிரகாஷ், சௌந்தரவள்ளி, கவிதா, சசிகலா, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி நகரில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என விழுதுகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் ஜுன் 13-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று விழுதுகள் இயக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விழுதுகள் இயக்கத் தலைவர் ஏ.கே.ஷரவணன் கூறும்போது:-

    சீர்காழி நகரில் ஏராளமான பள்ளிகளும், ஒரு கல்லூரியும் உள்ளது. ஏற்கனவே சாலைகள் குறுகிய அளவில் இருப்பதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு போன்றவற்றால் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நிலையில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு மட்டுமின்றி, விபத்துக்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் பள்ளி தொடங்கும் போதும், மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் நேரங்களில் சீர்காழி நகரில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்.

    அதன்படி காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை சீர்காழி சட்டை நாதபுரம் ரவுண்டானா முதல் விளந்திடசமுத்திரம் வரையும், ஈசானிய தெரு முதல் சீர்காழி பனங்காட்டான்குடி புறவழி சாலை சந்திப்பு வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.

    மேலும் தற்போது மணல் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் சித்தமல்லி மணல் குவாரியிலிருந்து ரெயில்வே ரோடு வழியாக சீர்காழி நகருக்கு வரும் மணல் லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் சீர்காழி தாடாளன்மேலவீதி, தாடாளன்வடக்குவீதி, தாடாளன்கீழவீதி வழியாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கொள்ளிட முக்கூட்டு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்றார்.
    திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு சேவையாளர்கள் 10 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
    குத்தாலம்:

    திருவாவடுதுறை ஆதீனத்தில் நேற்று நடைபெற்ற ஜென்ம நட்சத்திரத் திருநாளை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திரதானமும், சேவையாளர்களுக்கு பொற்கிழியையும் வழங்கி திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அருளாசி கூறினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மை வாய்ந்த திருவாவடுதுறை சைவ ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தில் தற்போது 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி புரிந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர விழா நேற்று ஆதீன திருமடத்தில் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி காலை ஞானமா நடராஜப்பெருமான், ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவப்பிரகாச விநாயகர் சன்னதியில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் செய்யப்பட்டு குருமகா சன்னிதானம் முன்னிலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடத்தப்பட்டது. ஹோமத்தை 24 சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தொடர்ந்து குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோமுக்தீஸ்வரர் கோவிலில் கோபூஜை, கஜபூஜை செய்ததுடன், சுவாமி அம்பாளை தரிசனம் செய்தார்.

    அதனையடுத்து ஆதீனத் திருமடம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாம், பல் சிகிச்சை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த குருமகா சன்னிதானம் நவீனமயமாக்கப்பட்ட நமச்சிவாய மூர்த்திகள் அச்சகத்தை திறந்து வைத்தார்.

    விழாவில் பல்வேறு சமுதாய சேவையில் சிறப்பாக பணியாற்றிய 10 பேருக்கு “மனிதநேய மாமணி” என்ற பட்டத்தை வழங்கி தலா ரூ.10ஆயிரம் பொற்கிழி வழங்கி அருளாசி கூறினார். மேலும், சிவனடியார்கள் 100 பேருக்கு குருமகா சன்னிதானம் வஸ்திரங்களை வழங்கினார். இதனை தொடர்ந்து மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருவருளை பெற்றனர்.

    சீர்காழியில் சீமானை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சீர்காழியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரியகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

     காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லெட்சுமனன், வட்டார தலைவர்கள் பாலகுரு, பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம், மாவட்ட நிர்வாகி விஆர்ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் உருவ பொம்மையை காங்கிரசார் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். 

    அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து உருவ பொம்மையை கைப்பற்றி அப்புறப்படுத்தி தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    மயிலாடுதுறையில் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
    தரங்கம்பாடி:

    தஞ்சை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் கண்காணிப்பு என்ஜினீயர் சீனிவாசராகவன் தலைமையிலான என்ஜினீயர்கள் குழுவினர் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். 

    மயிலாடுதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி சாலையில் பட்டமங்கலம் அருகே சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு இரு வழித்தடத்தில் இருந்து பலவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்ட பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து என்ஜினீயர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

    சாலையின் நீளம், அகலம், கட்டுமானத்தின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
    குத்தாலம் அருகே காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு நிகராக போற்றப்படும் புகழ் வாய்ந்த கால பைரவர் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

     இந்த கோவிலில் மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்ச தீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். 

    அதன்படி, இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. 

    பின்னர், பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×