என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாசல் ஊராட்சியில் 2 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாசல் ஊராட்சியில் 2 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் திருமுல்லைவாசல், ராதாநல்லூர், வழுதலைகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார். இதேபோல் தொடுவாய் மீனவ கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஏராளமான மீனவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். முகாமில் சுகாதார ஆய்வாளர் கருணாகரன் மற்றும் கிராம செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் 48 மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
    சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
    திருவெண்காடு:

    சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமிற்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் சுஜிதா தலைமை தாங்கினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். ஆய்வக தொழில்நுட்ப ஆய்வாளர் கல்யாணசுந்தரம், பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மனோஜ்குமார், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 210 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

    இதேபோல திருக்கடையூர் அருகே டி.மணல்மேட்டில் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி துரைராஜன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர்கள் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டக்டர் கார்த்திக்சந்திரகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனர். இதில் செவிலியர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை மருத்துவமனை அருகில் மெயின் ரோட்டில் நிறுத்தி விட்டு் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் அக்கம் பக்கம் தேடி பார்த்தார். அப்போது ரவிச்சந்திரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை ஒருவர் தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இதனை கண்ட ரவிச்சந்திரன் ‘திருடன், திருடன்' என கூச்சலிட்டார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்ற அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிபட்டவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் மயிலாடுதுறை கூறைநாடு வடக்கு சாலியர் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேசன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், வெங்கடேசனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    குத்தாலம் அருகே 40 அடியில் கிடைத்த நிலத்தடிநீர் மட்டம் குறைந்து இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியானதுடன் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் 2002 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இரண்டு எண்ணெய் கிணறுகளை அமைத்து எரிவாயு எடுத்தது. இதனால் அப்பகுதியில் 40 அடியில் கிடைத்த நிலத்தடிநீர் மட்டம் குறைந்து இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியானதுடன் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்நிலையில், அஞ்சார் வார்த்தலை கிராமத்தில் உள்ள 2 பழைய எண்ணெய் கிணறுகளையும் சுத்தம் செய்வதாக கூறி ஒ.என்.ஜி.சி நிறுவனம் புதிய பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிக்காக அங்கு ஏராளமாக ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டுள்ளதையும், புதிய கிணறு அமைக்க விடப்படும் கழிவுநீர் தேக்கும் குளமும் வெட்டப்பட்டுள்ளதையும் பார்க்கும்போது அங்கு புதிதாக ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அப்பகுதியில் இருந்து வெளியேற்றக்கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

    ஏற்கனவே அஞ்சார் வார்த்தலை கிராமத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் கிணறுகளை சுத்தம் செய்வதாக கூறி சட்டத்திற்கு புறம்பாக ஷேல் மீத்தேன் கிணறு அமைப்பதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்தகோரி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அரசு மருத்துவத்துறை மூலம் செலுத்தப்படுகிறது.
    மயிலாடுதுறை:

    கொரோனா வைரஸ் பரவல் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அரசு மருத்துவத்துறை மூலம் செலுத்தப்படுகிறது.

    அதன்படி மயிலாடுதுறையில் இன்று (சனிக்கிழமை) பெரியார் அரசு மருத்துவமனையிலும், சீர்காழி அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதேபோல மயிலாடுதுறை ஒன்றியத்தில் காளி, மணல்மேடு, வில்லியநல்லூர், இளந்தோப்பு, முருகமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருவிழுந்தூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டையிலும், ஐவநல்லூர் ஆகிய ஊராட்சியிலும், குத்தாலம் ஒன்றியத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கிளியனூர், கோமல், தேரழுந்தூர் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஆக்கூர் ஆரம்பப்பள்ளியிலும், சீர்காழி ஒன்றியத்தில் திருவெண்காடு, மங்கைமடம், காத்திருப்பு ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஒன்றியத்தில் அரசூர், தொடுவாய், கூழையாறு, பழையாறு ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படும். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரெயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதேபோல கூறைநாடு புனுகீஸ்வரர் சன்னதி திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும். 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வருபவர்கள் முதல் டோஸ் செலுத்தியதற்கான குறிப்பு சீட்டு மற்றும் ஆதார் கார்டுகளை எடுத்து வர வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சீர்காழி:

    சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஆணையர்கள் அருண்மொழி, கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ஜீவா வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    நடராஜன் (அ.தி.மு.க):- சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு 15-வது நிதிக்குழு தொகை எவ்வளவு வந்துள்ளது என்பதை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் கட்சி பாகுபாடு பார்க்காமல் தலைவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் சரிசமமாக வளர்ச்சி பணிகளை ஒதுக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற்று கடந்த ஒன்றரை வருடம் ஆகிறது. ஆனால் எங்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே வளர்ச்சி பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதியை எங்கள் பகுதிக்கு உட்பட்ட மூன்று ஊராட்சிகளில் எந்த ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது என்பது தெரியவில்லை. மற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் தகராறு செய்கின்றனர். திருநகரி கூனகரம்பை வாய்க்காலில் பாலம் மட்டும் கட்டப்பட்டு இணைப்பு சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட இணைப்பு சாலையை விரைந்து முடிக்க வேண்டும். மங்கைமடம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் செயல்படுத்த வேண்டும் என்றார்.

    ஜான்சிராணி (சுயேச்சை):- திருவெண்காடு ஜீவா நகர் அருகில் சாலையின் மையப்பகுதியில் உள்ள மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க வேண்டும். வேளாண்மை துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் தொலைபேசி எண்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும்.

    அறிவழகன் (தி.மு.க):- ராதாநல்லூர் ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும். மேலும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஆணையர்கள் கூறுகையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு 15-வது நிதிக்குழு மூலம் ரூ.80 லட்சம் வந்துள்ளது. மங்கைமடம் ஊராட்சியில் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கூனகரம்பை வாய்க்காலில் இணைப்பு சாலையில் விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தலைவர் கமலஜோதி தேவேந்திரன்:- அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்சி பாகுபாடு பார்க்காமல் வளர்ச்சி நிதியில் ஒதுக்கப்படும் உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி ஆதாரத்திற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    முன்னதாக கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், தாரா, சிவக்குமார், மேலாளர்கள் சசிகுமார், சுதாகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளநிலை உதவியாளர் சரவணன் நன்றி கூறினார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் அருகே உள்ள சின்ன கொக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அக்கரைகொக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (30) என்பவர் குடிபோதையில் செங்கல் சூளைக்கு சென்று அங்கிருந்த மரக்கழிவுகளை எடுத்துள்ளார். அதனை கணேசன் தட்டிக்கேட்டார். இதில் ரஞ்சித்குமார் ஆத்திரம் அடைந்து கணேசனை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக தொழிலாளி ரவி (50) ஓடிவந்து தடுக்க முயன்ற போது அவரையும் ரஞ்சித்குமார் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    18 வயது நிரம்பிய மற்றும் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் நேற்று ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு, மகேந்திரப்பள்ளி, திருமுல்லைவாசல் அகர எலத்தூர் ஆகிய 4 இடங்களில் வட்டார சுகாதார துறை சார்பில், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. மருத்துவ குழுவினர்கள் மூன்று குழுக்களாக சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். 18 வயது நிரம்பிய மற்றும் அனைத்து வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் நேற்று ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று நடந்த மூன்று முகாம்களிலும் 700 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாம்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
    குத்தாலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதிகளில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது திருமணஞ்சேரி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    மணல்மேடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேட்டை அடுத்த வடவஞ்சார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலையரசன்( வயது 33). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டவரான கலையரசன் நேற்று தனது வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியில் திடீரென கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கலையரசன் உடலை மீட்டனர். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழியில் தீயில் கூரை வீடு எரிந்து நாசமாகியது. இதில் ரூ.5 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
    சீர்காழி:

    சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வன் மகன் வீரமணி (வயது 32). எவர் சில்வர் பாத்திரம் வியாபாரியான இவர், தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

    இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், உணவு பொருட்கள், உடை, வியாபாரத்திற்கு வைத்திருந்த எவர்சில்வர் பாத்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் பொன்னியின் செல்வன், கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி, சீர்காழி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது

    கொரோனா ஊரடங்கு எதிரொலியால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலுக்கு உரமாக்கும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு, தென்னலக்குடி, புதுத்துறை, திருவாலி மண்டபம், திருச்சம்பள்ளி, திருவெண்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் கோடைகால பயிரான தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டது.

    3 மாத கால பயிரான தர்பூசணி மழையின் காரணமாக இந்த ஆண்டு தாமதமாக சாகுபடி செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் வெளி மாநில தர்பூசணியை கொள்முதல் செய்து விற்பனையை தொடர்ந்தனர்.

    காலதாமதமாக தொடங்கிய தர்பூசணி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் கொரோனா தொற்று 2-வது அலை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஓரு மாதம் கடந்தும் தொடரும் ஊரடங்கால் தர்பூசணி விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யவில்லை.

    உள்ளூர் விற்பனையாளர் முதல் வெளி மாவட்ட விற்பனையாளர்களும் தர்பூசணி கொள்முதல் செய்ய முன்வராததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். தற்போதைய நிலையில் ஆள் வைத்து பறித்தால் கூலி கொடுக்கக்கூட முடியாத நிலை ஏற்படும் என்பதால் பலர் தர்பூசணி பழங்களை அறுவடை செய்யாமலே விட்டனர்.

    இந்த நிலையில் மேட்டூர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் சாகுபடி பணிக்கு தயாரான சில விவசாயிகள் விளைந்த தர்பூசணி பழங்கள் மற்றும் கொடிகளை டிராக்டர் கொண்டு உழுது வயலுக்கே மீண்டும் உரமாக்கி வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கு தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளின் மூன்று மாத உழைப்பின் பலனை அவர்களின் வயலுக்கே உரமாக்கியது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.

    எனவே அரசு பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×