search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாடுதுறை கொலை"

    • முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது31). கூலி தொழிலாளியான இவர் முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளராக இருந்தவர்.

    கண்ணனுக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு இலை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சிறையில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆகி வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு கண்ணன் பீடா வாங்குவதற்காக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார்.

    அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்து வந்த சிலர் கலைஞர் காலனி பகுதி வந்தவுடன், அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து சரமாரியாக கண்ணனை வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த ராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவான பதிவுகளை கைப்பற்றினர். இதில் 12 பேர் கும்பல் கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் 12 பேர் அடங்கிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×