என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி பணிகளை நிறுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அஞ்சார்வார்த்தலை கிராமத்தில் விவசாய நிலப்பகுதியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் 2002 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில் இரண்டு எண்ணெய் கிணறுகளை அமைத்து எரிவாயு எடுத்தது. இதனால் அப்பகுதியில் 40 அடியில் கிடைத்த நிலத்தடிநீர் மட்டம் குறைந்து இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியானதுடன் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்நிலையில், அஞ்சார் வார்த்தலை கிராமத்தில் உள்ள 2 பழைய எண்ணெய் கிணறுகளையும் சுத்தம் செய்வதாக கூறி ஒ.என்.ஜி.சி நிறுவனம் புதிய பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிக்காக அங்கு ஏராளமாக ராட்சத குழாய்கள் இறக்கப்பட்டுள்ளதையும், புதிய கிணறு அமைக்க விடப்படும் கழிவுநீர் தேக்கும் குளமும் வெட்டப்பட்டுள்ளதையும் பார்க்கும்போது அங்கு புதிதாக ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அப்பகுதியில் இருந்து வெளியேற்றக்கோரி கோஷம் எழுப்பினர்.
ஏற்கனவே அஞ்சார் வார்த்தலை கிராமத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் கிணறுகளை சுத்தம் செய்வதாக கூறி சட்டத்திற்கு புறம்பாக ஷேல் மீத்தேன் கிணறு அமைப்பதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்தகோரி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






