என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீதம் மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக்கல்லூரி 75வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை புரிந்த தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் மாணவ மாணவிகளிடம் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் திருப்பனந்தாள் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் பேசினர்.

    பின்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், பேசுகையில் கூறியதாவது,

    புதுச்சேரி மாநிலத்தில் 50 சதவீதம் மக்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பதாகவும், மாணவ மாணவிகள் வீட்டிலேயே இருப்பதால் அனைவரும் ஆன்லைன் கல்வியை கற்க முடியவில்லை, ஆசிரியர்கள் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ள வேண்டும், 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கிறார்கள்.

    ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள். விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேகதாது பிரச்சனை பற்றி நான் ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை, ஆனால் காவிரி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அவர்களுக்கு உரிய பங்கை காவிரி நீரை பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், திருக்கடையூர் கோயில் நிர்வாகிகள், பா.ஜனதா கட்சி வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன், ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் அகோரம், நாஞ்சில் பாலு, நகர செயலாளர் மோடி கண்ணன், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு தற்போது 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 36 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 20 ஆயிரத்து 493 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 296 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 269 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    சீர்காழி அருகே சைக்கிளில் சென்ற முதியவர் கார் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே மேலச்சாலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 70). விவசாயியான இவர், நேற்று மாலை சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில் ஆர்ச் எதிரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராமல் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த முதியவர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விரைந்து வந்து, எத்திராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொள்ளிடம் அருகே மகளிர் குழு கடன் பிரச்சினையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ஜான் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவர் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் கிறிஸ்துவ தெருவில் தனது மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வந்தார்.

    இதே தெருவைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் மனைவி பிலோமினாமேரி (42) ஒரு மகளிர் குழுவில் தலைவியாக இருந்து வருகிறார். இந்த குழுவில் ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியும் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தக் குழு மூலம் பெற்ற கடன் தொகையை ஜோஸ்பின் மேரிக்கு முழுமையாக கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு கிறிஸ்தவ தெருவில் வீட்டு முன்பு பெண்களுக்குள் ஒருவரை ஒருவர் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆரோக்கியதாஸ் தனது மனைவிக்கு ஆதரவாக ஜான் மனைவி ஜோஸ்பின் மேரியை திட்டினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜான், ஆரோக்கியதாசை தட்டிக் கேட்டார். இதில் ஜானுக்கும் ஆரோக்கியதாசுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் ஜானின் கழுத்தைப் பிடித்து அடித்து கீழே தள்ளியதில் ஜான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அருகே ரெயிலில் அடிபட்டு பெண் உயிரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் அடுத்த கன்னியாக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜய் மனைவி விஜயா (30). இவர் கணவரைப் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு விஜயா உடல் சிதறி இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விஜயா தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை நடத்துகின்றனர்.
    தரங்கம்பாடி அருகே மீன்வளத்துறை அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி ஆகிய மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும். அதனை மறுக்கும் பட்சத்தில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 விதிகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 14 மீனவ கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதாக அறிவித்திருந்தார். அதன் பேரில் மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு போலீசார், சீர்காழி தாலுகா பழையாறு முதல் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி வரையிலான 26 மீனவ கிராமங்களிலும் சுழற்சி முறையில் இரவு, பகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    நேற்று 9-வது நாளாக தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள படகுகள், வலைகள், என்ஜின்கள் குறித்து மீன்வளத்துறை மற்றும் கடலோர அமலாக்க பிரிவினர் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். தகவல் அறிந்து கடற்கரை பகுதியில் திரண்ட புதுப்பேட்டை மீனவர்கள், அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    தங்கள் அனுமதியின்றியும், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அனுமதி இன்றியும் தங்களது படகு மற்றும் வலைகளை ஆய்வு செய்யக்கூடாது என அதிகாரிகளிடம், மீனவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து மாவட்ட தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார், புதுப்பேட்டைக்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், அனுமதியின்றி ஆய்வு செய்வதால் தங்களுடைய மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து இன்று(அதாவது நேற்று) மாலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அதுவரையில் மாவட்டத்தில் எந்த கிராமத்திலும் ஆய்வு செய்யக்கூடாது என்று கூறி அதிகாரிகளை திரும்பிச் செல்ல வலியுறுத்தினர்.

    மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து அதிகாரிகள் தங்களது ஆய்வை தொடர முடியாமல் திரும்பிச் சென்றனர். இதனால் தரங்கம்பாடி கடற்கரை கிராமங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
    எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்ட மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர்களின் தொலை பேசிகளை ஒட்டுக்கேட்ட மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி அருண்குமார் வரவேற்று பேசினார்.

    போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் கே.பி.எஸ்.எம். கனிவண்ணன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்களின் தொலை பேசிகளை ஒட்டுக்ேகட்ட மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகுமார், செல்வம், பாலகுமாரன், சகஜானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சீர்காழி அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சுமதி (வயது38) சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆதம்நகரில் வசித்து வந்தவர் கணபதி (வயது 38). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மனைவி இறந்து விட்டதால், குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்துள்ளார். அவர், தனது மனைவி குமாரி மற்றும் குழந்தைகளுடன் ஒரு ‌வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினமும் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டின் ஒரு அறையில் கணபதி தூங்க சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மற்றொரு அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். இதையடுத்து குமாரி, கணவரை அவர் தூங்கிய அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்கிட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குமாரி கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை அவதூறாக பேசிய பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்து மதத்தையும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் அணி பிரிவு தலைவர் வக்கீல் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் மோடி கண்ணன் வரவேற்று பேசினார். இதில் வாயு சித்த ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்து மதத்தையும், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்தும், அவர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விசுவ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், பா.ஜ.க. தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில்பாலு, பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம.சிவசங்கர், மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ரா, பட்டியலணி மாவட்ட செயலாளர் ஈழவேந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எழிலரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய தலைவர் சுந்தரவடிவேல் நன்றி கூறினார்.

    பங்கு சந்தையில் பங்குகளை பட்டியலிடும் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மயிலாடுதுறை கிளை தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ராமானுஜம் முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

    இதில் பொருளாளர் ஜெகனாத், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி.யின் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடும் முடிவை திரும்பப்பெற வேண்டும். ஆன்லைன் பாலிசி விற்பனையை கைவிட வேண்டும். பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் கொரோனா முன்பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வழங்கிய கொரோனா முன்பண தொகையை நிவாரண தொகையாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில், இணை செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை எல்.ஐ.சி. மயிலாடுதுறை கிளையின் முதுநிலை கிளை மேலாளரிடம் வழங்கினர்.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி குத்தாலத்தில் ம.தி.மு.க.வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    குத்தாலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. பெட்ரோல் விலை ரூ.100-க்கு மேலும், டீசல் விலை ரூ.98-க்கு மேலும் உயர்ந்துள்ளதை கண்டித்து குத்தாலம் துணை அஞ்சலகத்தில் ம.தி.மு.க. மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை அஞ்சலக பெட்டியில் பொட்டு, மாவட்ட செயலாளர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் அழகிரி, குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வாசு, குத்தாலம் பேரூர் செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் சுவாமிநாதன், பேரூர் துணை செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் வர்த்தக சங்க தலைவர் தங்கப்பன் செய்திருந்தார்.

    ×