என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    ரெயில் சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் சலுகைகளை மீண்டும் வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் அருள்மணி, தாமரைச்செல்வி, ராமச்சந்திரன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரெயில் பெட்டிகளை அனைத்து ரெயில்களிலும் உடனே இணைக்க வேண்டும்.

    ரெயில் நிலைய பிளாட்பார டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் நிர்வாகிகள் ஆனந்தராஜ், சண்முகம், கமலநாதன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ கைவிட வலியுறுத்தி அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பொறியாளர் சங்க பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சரவணகுமார், கலைச்செல்வன், முரளிதாஸ், பாரதி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021-ஐ மத்திய அரசு உடனே கைவிட வேண்டும், மின்சார துறையை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட அனைத்து மின் வாரிய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொறியாளர் சங்க நிர்வாகி அசோக்குமார் நன்றி கூறினார்.
    சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட தத்தங்குடி கிராமத்தில் பழைய ஓ.என்.ஜி.சி திடல் அருகில் அனுமதி இன்றி அதே கிராமத்தை சேர்ந்த சக்தி வீரன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றி சென்றுள்ளனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தி சீர்காழி தாசில்தார் சண்முகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சண்முகம் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சக்திவீரனை தேடி வருகின்றனர்.

    மணல்மேடு அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிவந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே பட்டவர்த்தி பகுதியில் வாகன சோதனையில் மணல்மேடு போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது நான்கு மூட்டைகளில் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் மணல் அள்ளி வந்த இளந்தோப்பு மெயின் ரோட்டை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    மணல்மேடு அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரின் மனைவி மதுபாலா (வயது24) இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மதுபாலா வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுபாலாவின் தந்தை மணி கொடுத்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மதுபாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் மேல் விசாரணை நடத்த உதவி கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
    திருவாலங்காட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு, திருவாவடுதுறை, மாம்புள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தபகுதியில் விளைவிக்கபடும் நெல்லை ஆண்டுதோறும் திருவாலங்காட்டில் திறக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

    ஆனால் இந்த ஆண்டு அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திருவாலங்காட்டில் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர். மழையில் இருந்து நெல்லை பாதுகாக்க தார்பாய்கள் எடுத்துவந்து மூடி வைத்துள்ளனர்..

    20 நாட்களுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைக்கு முடிவு கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று நெல்லை டிராக்டரில் ஏற்றிவந்து மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவாலங்காடு கடைத்தெருவில் சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், தாய்மார்கள் தாமாக முன்வந்து தாய்ப்பால் தானம் வழங்கலாம் என்று கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை வழங்கி கலெக்டர் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், உலக தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து 6 மாத காலம் தாய்ப்பால் வழங்குவதால், குழந்தைக்கும், தாய்க்கும் நல்ல உடல் ஆரோக்கியம் பெறும். அந்த காலகட்டத்தில் தாய்மார்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக குழந்தைகளை ஒவ்வொரு தாய்மார்களும் பாதுகாப்பாக கவனித்து கொள்ள வேண்டும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் இருப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் அதிகம் சுரக்கக்கூடிய தாய்மார்கள் தாமாக முன்வந்து தாய்ப்பால் தானம் வழங்கலாம். இதன் மூலம் தாய்ப்பால் குறைவாக உள்ள தாய்மார்களின் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்படும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே உலக தாய்ப்பால் வார விழாவின் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் அவசியத்தை தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜசேகரன் மற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
    மின்வாரிய செயற்பொறியாளர் மீது பாலியல் குற்றம் சாட்டிய பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க மகளிர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொறுப்பாளரும் மின்வாரிய உதவி கணக்கு அலுவலருமான விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கணக்கீட்டு மேற்பார்வையாளர் சுதா, இளமின் பொறியாளர் கீதா, கணக்கீட்டாளர் துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் மீது அவதூறாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மின்வாரிய பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த பெண்ணுக்கு துணை போகும் ஊழியர்கள் மற்றும் சங்கத்தை சேர்ந்த ஒரு சிலரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த பிரீத்தி சரவணகுமார், வணிக ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வி, தீபா, வருவாய் மேற்பார்வையாளர் ஜான்சிராணி, துப்புரவு பணியாளர் விக்னேஷ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பொறையாறு அருகே ஓடும் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 பயணிகளுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    பொறையாறு:

    புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பி.ஆர்.டி.சி. பஸ் நேற்று காலை மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செந்தில்(வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக பரசுராமன்(46) இருந்தார்.

    பொறையாறு ராஜீவ்புரம் அருகில் பஸ் சென்றபோது பஸ்சின் முன்பகுதியில் புகை வருவதை கண்டு டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். அப்போது புகை பெருமளவில் வந்ததால் பஸ்சில் இருந்த 20 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் பஸ்சை விட்டு அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தி்ல் பஸ்சின் என்ஜின் பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனாலும் பஸ்சின் முன்பகுதி மள மளவென எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு நிலைய அலுவலர் மொகிசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இருந்தபோதிலும் பஸ்சின் முன்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. பஸ்சின் எலெக்ட்ரிக்கல் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    இதுகுறித்்து தகவல் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் மற்றும் புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக காரைக்கால் பணிமனை மேலாளர் குழந்தைவேலு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதுகுறித்து பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேதமடைந்த பஸ் காரைக்கால் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த தீவிபத்து, பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    மயிலாடுதுறையில் சீர்காழி சுகாதார ஆய்வாளரை காரில் கடத்தி தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). இவர் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந் தேதி மன்னார்குடியில் இருந்து சீர்காழிக்கு ராஜேந்திரன் பஸ்சில் சென்றுள்ளார். மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இறங்கி சீர்காழி பஸ் ஏற சென்ற ராஜேந்திரனை மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி சென்றனர்.

    அப்போது கூச்சலிட முயன்ற ராஜேந்திரனை தொடையில் கத்தியால் குத்தி உள்ளனர். தொடர்ந்து கடத்தப்பட்ட ராஜேந்திரனை அடித்து தாக்கிய மர்ம கும்பல் பின்னர் அவரை மன்னார்குடி அருகில் விட்டுச் சென்று விட்டனர். காயமடைந்த ராஜேந்திரன், மன்னார்குடியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜேந்திரனுக்கும் அவரது உறவினர் இளங்கோவனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இளங்கோவன் தனது கூட்டாளியான விக்கி என்கிற விக்னேஷ் மூலம் கூலிப்படையினரை நியமித்து ராஜேந்திரனை கடத்தி தாக்கியது தெரியவந்தது.

    இதையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பகோணம் கீழகொட்டையூர் ராஜேந்திரன் மகன் ராகுல் (வயது 22), திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணவாசல் பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் கார்த்திகேயன் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன், விக்கி என்கிற விக்னேஷ், பரத், விஷ்ணுராம் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சீர்காழி தபால் நிலையத்தில் ஆதார் அட்டை எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனவே கூடுதல் ஆதார்சேவை மையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    புதிய குடும்ப அட்டை, பாஸ்போர்ட், பள்ளிச் சான்று, வருமானச் சான்று, இறப்புச் சான்று, மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம், வாரிசு சான்று, சாதி சான்று, கல்வி சான்று, கல்வி உதவித்தொகை சான்று, வருமான வரி மற்றும் அரசு சலுகைகள் பெற வேண்டும் என்றால் கட்டாயம் ஆதார் அட்டை வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில் சீர்காழி நகராட்சி வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி, சீர்காழி ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி தலைமை தபால் நிலையம், பழைய தாசில்தார் அலுவலக வளாகம், சீர்காழி நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய 3 இடங்களில் ஆதார் சேவை மையங்களில் ஆதார் அட்டை எடுக்க வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இந்த சேவை மையங்களில் இணையதள பிரச்சினையால் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

    சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் அட்டை எடுக்க அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் வரிசையில் நின்று டோக்கன் வாங்கி செல்கின்றனர். 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை எடுக்க காலை முதலே பொதுமக்கள் நீண்ட வாரிசையில் காத்திருப்பதால் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.. அதிகாலையிலேயே வந்து டோக்கன் வாங்க சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி தாலுகா பகுதியில் அரசு சார்பில் 3 இடங்களில் செயல்படும் ஆதார் சேவை மையம் முறையாக செயல்படாததால் சீர்காழி பகுதி பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு கூடுதலாக ஆதார் சேவை மையங்களை திறக்க வேண்டும். மேலும் ஆதார் மையங்களில் தவறுகள் நடக்காதவாறு கண்காணிக்க வேண்டும.் தவறு செய்யும் பணியாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    சீர்காழியில், ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்தார்.
    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சீர்காழி ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி கலெக்டர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கடைவீதி வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் செல்வகுமார், பாஸ்கரன், சாமிசெழியன், சுசீந்திரன், கண்ணன், சிவசண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
    ×