என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலை முன்பு கருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை நீக்கியதை கண்டித்து சி.ஐ.டி.யூ. மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். 

    செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சீனி.மணி, மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் குத்தாலம் தாலுகா கருப்பூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சுமைதூக்கும் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கியதை கண்டித்தும், பணியிலிருந்து நீக்கப்பட்ட சுமைத்தூக்கும் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கருப்பூர் கிளை பொறுப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    கொள்ளிடம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    கொள்ளிடம்:

    கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சி வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி ராஜகுமாரி. இவரது கூரை வீடு தீயில் எரிந்து நாசமடைந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். 

    தொடர்ந்து அரசின் நிவாரண உதவியுடன், தனது சொந்த செலவிலும் நிதிஉதவி வழங்கினார். அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், சீர்காழி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், ஊராட்சிதலைவர் வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர்.
    ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரே‌ஷன் கடை அதிகாரி கடையை பூட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்து காளி ஊராட்சியில் ரே‌ஷன் கடையில் பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ரே‌ஷன் கடைகளிலிருந்து நல்ல அரிசியை இருசக்கர வாகனத்தில் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக கள்ள சந்தை மார்க்கெட்டில் விற்பதாகவும், தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    காளி ஊராட்சி ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரே‌ஷன் கடை அதிகாரி கடையை பூட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் உடன்படாததால் பல மணி நேரத்திற்கு மேலாக காளி - மணல்மேடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் மேல் அதிகாரிகளிடம் பேசி தரமுள்ள அரசி வழங்குவதற்கான நடவடிக்கையும், கள்ள சந்தையில் விற்கப்படும் அரிசியை தடுக்க முயற்சி செய்வதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 100 நாள் வேலை முறைகேடுகளை கண்டித்தும், ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்தும் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளதால் மாவட்ட கலெக்டர், காளி ஊராட்சியை தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மயிலாடுதுறை அடுத்து காளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை தராமல் மாதத்தில் ஒரு வாரம் மட்டும் பணி கொடுத்துவிட்டு மீதம் 3 வாரங்களில் கொடுக்காமல் மறுத்து வருவதாக வேலை செய்யும் மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரியிடம் மக்கள் கேட்டபோது 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் இப்பொழுது வேலை இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆனால் ஒரு மாத காலமாக வேலை நடைபெற்றததாக அனைவரின் பெயரில் பில் போடப்பட்டு பணம் எடுத்ததாக கூறி பொதுமக்கள் காளி ஊராட்சி, ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். வேலை தர நடவடிக்கை எடுப்பதாக உத்தரவு அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 100 நாள் வேலையில் ஊதியம் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய தாலுகா அலுவலக வளாகம் சீர்காழி நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய தாலுகா அலுவலக வளாகம் சீர்காழி நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் இங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இணைய சேவை குறைபாட்டால் ஒரு கணினி மட்டுமே இயங்குவதால் நாள் முழுவதும் காத்திருந்தாலும் பணிகள் முடிவடையாத நிலை உள்ளது. சில நேரங்களில் 3 நாட்கள் அலைந்துதான் ஆதார் சேவை மற்றும் திருத்தங்களை செய்ய முடிகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வரும் முதியோர், மகளிர் கடும் அவதியடைகின்றனர். சமூக இடைவெளியின்றியும் முக கவசம் இன்றியும் கூட்டமாக நிற்கின்றனர். கடும் வெயிலில் திறந்த வெளியில் காத்து கிடக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி கூடுதல் ஆதார் மையங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம் அருகே கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர், திருமயிலாடி கிராமத்தில் சூதாட்ட கிளப் இயங்கி வருவதாக புகார்கள் வந்தது. நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் புத்தூர் திருமயிலாடியில் செயல்பட்டு வந்த சூதாட்ட கிளப்பில் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய கடலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 24), சீர்காழி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அங்கு சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சேர்கள், ஸ்டூல்கள், டேபிள்கள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்துரு, மண்டகண்டன் மற்றும் பறிமுதல் செய்த பொருட்களை தனிப்படை போலீசார் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கேசவன், சேலம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், காட்டுமன்னார்குடி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மயிலாடுதுறையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு, வீடாக சோதனை சுகாதார துணை இயக்குனர் தலைமையில் நடந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் டெங்கு கொசு பரவாமல் தடுக்க ஒருவார கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரில் டெங்கு கொசுக்களால் பாதிக்கப்படும் பகுதி என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பிரதாப் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு மற்றும் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று சோதனை செய்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த பணி 60 களப்பணியாளர்களுடன் தொடங்கியது. நாளொன்றுக்கு 6 வார்டுகள் வீதம் ஒரு வார காலத்திற்குள் நகரம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், பிளாஸ்டிக் கப்புகள் டயர்கள், தேங்காய் ஓடுகள், பிரிட்ஜ் எந்திரத்தின் பின்புறம் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மாடிகளில் தண்ணீர் வழிந்தோடும் பகுதிகளில் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு கொசு உற்பத்தியாவது தடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மேலும் டெங்கு கொசு மருந்து அழிக்கப்பட்டதுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது நகர் நல அலுவலர் மலர்மன்னன், சுகாதார ஆய்வாளர் பிச்சமுத்து, களப்பணி உதவியாளர் கணேசன், பூச்சியியல் வல்லுனர் சிங்காரவேலு மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.
    ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி மற்றும் ஆனதாண்டவபுரம் ஊராட்சி பாவாநகர் இணைப்பு சாலையின் குறுக்கே ரெயில்வே பாதை செல்கிறது. இந்த சாலையில் ரெயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் வகையில் சதுர வடிவில் சிமெண்டு சிலாப்புகள் வைக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த சாலையில் ஜல்லி கற்கள் மற்றும் சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் இந்த சாலையை கடந்து செல்பவர்கள் அந்த சிமெண்டு சிலாப்புகளில் மோதி கால் இடறி கீழே விழும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக ரெயில் செல்லும் நேரத்தில் கேட் மூடப்படுவதால் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

    ரெயில்வே கேட் திறந்தவுடன் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து பலர் கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே ரெயில்வே பாதையை கடக்கும் பகுதியில் நீடூர்- ஆனதாண்டவபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
    மகாகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை 2-வது புதுத்தெருவில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்தன. இதனை கண்ட அந்தபகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி அண்ணா நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் காளிதாஸ் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாசனை கைது செய்த மயிலாடுதுறை போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மயிலாடுதுறையில் மருத்துவமனை மேலாளரிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பாங்க் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் மருத்துவமனை வாசல் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அன்றைய தினம் பகல் நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த அந்த மர்ம நபர் மருத்துவமனை மேலாளர், வைத்தீஸ்வரன் கோவில் வடக்கு வீதியை சேர்ந்த நவீன்குமார் (வயது 26) என்பவரின் சட்டைப்பையில் இருந்து ரூ.200-ஐ திருடி சென்றுள்ளார். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக நவீன்குமார் கொடுத்த புகாரின்பேரில் கண்காணிப்பு கேமராக்களில் இருந்த பதிவுகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்த மர்ம நபரும், மருத்துவமனை மேலாளரிடம் ரூ.200-ஐ திருடி சென்ற நபரும் ஒரே நபர்தான் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக மயிலாடுதுறை திருமஞ்சன வீதி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த முகமது நயினா மகன் முகமது மைதீன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    மழை காலம் என்பதால் காக்க வைக்காமல் உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு 800 நெல் மூட்டைகள் வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக குறைந்த அளவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 250 முதல் 500 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை அடுக்கி விற்பனை செய்வதற்காக காத்து கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த கனமழையால் மணல்மேட்டில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெற உள்ள நிலையில் விரைவில் கூடுதல் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்யக் கூடாது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குண்டும், குழியுமான வள்ளுவக்குடி-ஆதமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வள்ளுவக்குடி, பத்தக்குடி, கொட்டாமேடு, ஆதமங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக வள்ளுவக்குடி முதல் ஆதமங்கலம் வரை உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களுக்கு அவசர காலத்திற்கு ஆட்டோ, கார், வேன், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர மறுப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான வள்ளுவக்குடி-ஆதமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழியில் காரில் கடத்தி வரப்பட்ட 1,250 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே கோவில்பத்து சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சீர்காழியில் இருந்து கோவில்பத்து நோக்கி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 6 சாக்கு மூட்டைகளில் 1,250 பாண்டி சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து, கார் டிரைவர் உள்பட2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலையூர் செல்லும் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கார் டிரைவர் தமிழ் (வயது 39) என்பதும், உடன் வந்தவர் திருத்துறைப்பூண்டி இடும்பவனம் மங்கலநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சூரியமூர்த்தி (29) என்பதும், இவர்கள் 2 பேரும் சாராய பாக்கெட்டுகளை காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார், காரில் சாராயம் கடத்தி வந்த டிரைவர் தமிழ் மற்றும் சூரியமூர்த்தி ஆகியோரையும், பறிமுதல் செய்த 1,250 சாராய பாக்ெகட்டுகள், கார் ஆகியவற்றை சீர்காழி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் தமிழ் உள்பட 2 பேரை கைது செய்து, சாராய பாக்கெட்டுகள் யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கார், சாராய பாக்கெட்டுகள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
    ×