என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி திரும்ப வேண்டும்.
    • மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர்,

    ஓசூரில், தமிழக மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், பல்வேறு தொழிற்சங்கத்தினர், கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • யோகாவின் சிறப்புகள், அதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
    • தொடர்ந்து பல்வேறு யோகாசன நிலைகளை செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

    கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். பதஞ்சலி யோகா சமிதி அமைப்பின் மாநில தலைவர் யோகாச்சார்யா பரஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் யோகாவின் சிறப்புகள், அதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து பல்வேறு யோகாசன நிலைகளை செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பதஞ்சலி யோகா சமிதியின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், யோகா ஆசிரியர் சுமித்ரா, பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
    • மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நடைமுறைகளை நேரில் பார்த்து பல்வேறு விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜுஜுவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், ஓசூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

    மாணவர்கள் வரலாற்று ஆய்வுகள் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக பழமை வாய்ந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு களப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அந்த வகையில், மாநகராட்சி கல்விக் குழு தலைவர் ஸ்ரீதரன் ஏற்பாட்டின் பேரில், ஜுஜுவாடி அரசு மேல்நிலைப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நடைமுறைகளை நேரில் பார்த்து பல்வேறு விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

    முன்னதாக மாணவ மாணவிகளை, மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் வரவேற்று அவர்களுக்கு மாநகராட்சி செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.

    அப்போது, மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் ரவி, நாகராஜ் உள்ளிட்ட கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர், இது தொடர்பாக பள்ளி ஆசிரியை சுவர்ணா நிருபர்களிடம் கூறுகையில், குடிமையியல் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு தேர்தல் நடத்துவது மற்றும் அது தொடர்பான பணிகள் குறித்து இடம்பெற்றுள்ளது.

    இந்தப் பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து நேரிலும் பார்த்து அறிந்து கொள்ளும் விதமாக இந்த களப்பயணம் அமைந்தது என கூறினார்.

    • இரு வழி சாலையை நான்குவழி சாலையாக அகலபடுத்தும் பணிக்கு கெலமங்கலத்தில் பூமிபூஜை நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அத்திப்பள்ளி சாலை இருதாளம் முதல் மஞ்சளகிரி வரை ஒசூர் சாலையில் 11 கி.மீ நீளத்துக்கு ரூ.78 கோடி மதிப்பில் முதல்-அமைச்சர் சாலை விரிவாக்கம் திட்டத்தில் இரு வழி சாலையை நான்குவழி சாலையாக அகலபடுத்தும் பணிக்கு கெலமங்கலத்தில் பூமிபூஜை நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை தேன்கனிக்கோட்டை கோட்ட பொறியாளர் திருமால்செல்வன், கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், திம் ஜேப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன், ஒப்பந்ததாரர் சேகர், தளி ஒன்றிய கவுன்சிலர் பிரசாந், முன்னால் கவுன்சிலர் நாகராஜ், நகர செயலாளர் மது குமார், துணைசெயலாளர் குருராஜ், மகளீர் அணி மஞ்சுளா, சீனிவாசன், உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானபேர்கள் கலந்து கொண்டார்கள்.

    • ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்கள் நட வேண்டும்.
    • சாலை யோர மரங்களால் வெயிலின் தாக்கம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டம் கெலமங்கலம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக 200 ஆண்டு பழமைவாய்ந்த ஆலமரம் அகற்றப்பட்டுள்ளது.

    ஓசூரில் இருந்து ராயக்கோட்டை வழியாக தருமபுரி அதியமான் கோட்டை செல்லும் சாலை மற்றும் கெலமங்கலம் - ராயக் கோட்டை சாலை ஆகியவை விரி வாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

    இதனால், சாலையோர புளியமரங்கள் உட்பட பல்வேறு வகையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சாலையோர புளிய மரங்களை ஏலம் எடுத்து, புளியை பறித்து தனிநபர்கள் விற்பனை செய்து வந்த நிலையில், அந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் புளியின் தேவை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே, கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் உள்ள ஜெக்கேரி அருகே, 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய ஆலமரம் சாலை விரிவாக்க பணிக்காக வெட் டப்பட்டுள்ளது.

    இந்த மரத்தில் நூற் றுக்கணக்கான விழுதுகள் மற்றும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக இருந்தது. இவற்றை வெட்டியுள்ளது பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது. இதேபோல், பல ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

    ஒரு மரத்தை வெட்டினால், 10 மரங்கள் நட வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதுபோல் எங்கு நட்டுள்ளது என்பது தெரியவில்லை.

    கெலமங்கலம் - ராயக்கோட்டை மற்றும் ஒசூர் - தருமபுரி சாலையில் செல்லும் போது, சாலையோர மரங்களால் வெயிலின் தாக்கம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பயணித்தனர்.

    இந்த மரங்கள் வெட்டப்பட்டுவிட்டதால், இச்சாலைகள் பசுமையை இழந்து நிற்பதாக, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

    • விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    • ராமரெட்டி என்ற விவசாயி சுமார் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்.

    ஓசூர்:

    கடந்த ஒரு மாதகாலமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள சில விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக அதிக வருமானம் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஓசூர் பகுதியில் விவசாயிகள் இரவு பகலாக தொடர்ந்து தோட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் விவசாயிகள் தக்காளி தோட்டத்திற்கு முள்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் ஓசூர் அருகே தாசிரிப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமரெட்டி என்ற விவசாயி சுமார் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார்.

    தற்போது தக்காளி திருட்டு நடைபெறுவதால் அவர் தக்காளி விற்பனை செய்து கிடைத்த லாபத்தில் ரூ.1½ லட்சத்தில் தோட்டத்தை சுற்றிலும் கருங்கல் தூண் நட்டு, இரும்பு வேலி அமைத்து தக்காளி தோட்டத்தை பாதுகாத்து வருகிறார். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புமணி (வயது21). இவர் ஓசூரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் விருதுநகர் மாவட்டம் சொக்கநாதபுதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22) என்பவர் உடன் பணியாற்றி வருகிறார்.

    இதன்காரணமாக இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அன்புமணி கடந்த 28-ந் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதாக நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த செல்வகுமாருக்கும், அன்புமணிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அன்புமணியை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடனே மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அன்புமணி மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    • எங்கள் கிராமத்தில் செல்போன் இல்லாத வீடுகள் இல்லை. ஆனால், சிக்னல் கிடைப்பதில்லை.
    • எங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றால் 1 கிமீ தூரம் காப்புக்காடு வழியாகச் சென்று உயரமான மலைக்குன்று பகுதியில் நின்று பேச வேண்டும்.

    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் சிகரமாகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தோட்ட கணவாய், மேட்டுப்பாளையம், கே.கொத்தூர், பூதிமூட்லு, சிகரமானப்பள்ளி மற்றும் கொங்கனப்பள்ளி கிராமங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வனத்தையொட்டியுள்ள இக்கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைப்பதில்லை.

    குறிப்பாக கொங்கனப்பள்ளி கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இக்கிராமங்கள் வனத்தையொட்டி இருப்பதால், அடிக்கடி கிராமத்துக்குள் வன விலங்குகள் புகுந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.

    இது போன்ற அவசர நேரத்தில் வனத்துறையைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையிருந்து வருகிறது. இதையடுத்து, தங்கள் பகுதிக்கு செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து பி.எஸ்.என்.எல் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக கொங்கனப்பள்ளி கிராம மக்கள் கூறியதாவது:-

    எங்கள் கிராமத்தில் செல்போன் இல்லாத வீடுகள் இல்லை. ஆனால், சிக்னல் கிடைப்பதில்லை. இதனால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் அழைக்க முடிவதில்லை.

    மேலும், எங்கள் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஊருக்குள் வன விலங்குகள் வந்தால், வனத்துறைக்கும் தகவல் அளிக்க முடியாது. இதனால், விடிய, விடிய அச்சத்துடனும் இருந்து வருகிறோம்.

    எங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றால் 1 கிமீ தூரம் காப்புக்காடு வழியாகச் சென்று உயரமான மலைக்குன்று பகுதியில் நின்று பேச வேண்டும்.

    இதேபோல, இங்குள்ள ரேஷன் கடையில் பயோ-மெட்ரிக்கும் செயல்படாது. இதனால், பழைய முறையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வருகிறோம்.

    தற்போது, கொங்கனப்பள்ளி - கே.கொத்தூர் இடையே பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடப்பதால் மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.

    இது தொடர்பாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கூறும்போது, இங்கு 130 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்றவுடன் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை.
    • பள்ளி அருகேயுள்ள பள்ளத்தை மூட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.kris

    ஓசூர்,

    தமிழக எல்லையில் ஓசூர் அருகே ஜுஜுவாடி யில் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் தமிழக எல்லை பகுதியில் உள்ள கிராம மாணவ, மாணவிகள் என 1,720 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

    பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலையிருந்து வருவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதுதொடர்பாக பெற்றோர் சிலர் கூறுகையில், ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை. இருக்கும் கழிப்பறையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. விளையாட்டு மைதானமும் இல்லை. உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. பள்ளிக்கு சுற்றுச்சுவரும் இல்லை.

    மேலும், பள்ளி வளாகத்தையொட்டி அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில் 10 அடி பள்ளம் உள்ளது. பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் ஒரு கழிப்பறையில் அடிக்கடி பாம்பு வருவதால், அது எப்போதும் மூடப்பட்டு, காட்சிப் பொருளாக இருந்து வருகிறது.

    இதனால், திறந்தவெளியில் உள்ள பள்ளம் பகுதியை மாணவர்கள் சிறுநீர் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

    இப்பள்ளி மாநில எல்லையில் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் இருக்கும் கழிப்பறையைப் பராமரித்து முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டவும், பள்ளி வளாகத்தில் இருக்கும் இடத்தை சீரமைத்து விளையாட்டு மைதானம் அமைக்கவும், உடற்கல்வி ஆசிரியரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் பள்ளியில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து விட்டு, பள்ளிக்கு அருகேயுள்ள பகுதியில் சுற்றி வருகின்றனர். பள்ளி அருகேயுள்ள பள்ளத்தை மூட வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

    கரடும், முரடுமான பகுதியை விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தும் நிலையுள்ளது. 3 உடற்கல்வி ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் மட்டுமே உள்ளார். இதனால், மாணவர்கள் முறையான விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள முடியவில்லை என கூறினர்.

    இப்பள்ளிக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் நேற்று நடைபெற்றது.
    • அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தொடங்கி வைத்து, வீரர், வீராங்கனையரை வாழ்த்தினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டிகளை, அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் தொடங்கி வைத்து, வீரர், வீராங்கனையரை வாழ்த்தினார்.

    மேலும் இதில், மாவட்ட கால் பந்து கழக தலைவர் சையத் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில், 8 முதல் 18 வயது வரையிலான 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர்.

    • மதுரை மாநாட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
    • புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஓசூர்,

    ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மதுரையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட அவை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.

    ஓசூர் தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் அமைச்சர் நகர்மன்ற உறுப்பின ருமான பி.ஆர்.வாசுதேவன் வரவேற்றார். இதில், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகரும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாள ருமான மு.தம்பிதுரை எம்.பி. மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

    பின்னர், தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது, அவர் கூறியதாவது:

    கடந்த காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மதுரையில் மாநாடு நடத்தி தமிழகத்தில் எப்படி திருப்புமுனையை உருவாக்கினார்களோ, அதே போல நடைபெறவுள்ள மதுரை மாநாட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அ.தி.மு.க எப்போதும் துணை நிற்கும். தமிழ்நாட்டில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.மதன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி. ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட பலர் பேசினர். முடிவில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு நன்றி கூறினார்.

    • இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம் கரி வேடம், ஆகியவைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இந்நிகழ்ச்சிகளை மேல் மக்கான் சின்ன மக்கான், கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் மேல் மக்கான் சின்ன மக்கான் மொகரம் திருவிழா கடந்த 150 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மேல் மக்கான் முதல் நாள் நிகழ்ச்சியாக குண்டம் நிகழ்ச்சியும், இன்னிசை கச்சேரி மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிறைவு நாளான நேற்று மாலை 5 மணி அளவில் மேல் மக்கான் அல்லா சாமியும், கீழ் மக்கான் அல்லா சாமியும், தேசிசெட்டி தெருவில் கூடின. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து சாமியை வழிபட்டனர்.

    மேலும் அல்லாஹ்வின் மீது மிளகு, முத்து கொட்டை, உப்பு அல்லா சாமி மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் அல்லாசாமி முன்பு இஸ்லாமிய இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம் கரி வேடம், ஆகியவைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சிகளை மேல் மக்கான் சின்ன மக்கான், கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் நகர செயலாளர் பாபு, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சாஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் பாலாஜி ரமணன் தலைமையில் காவேரிப்பட்டணம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

    ×