என் மலர்
கிருஷ்ணகிரி
- பஸ் ஏறி கல்லூரி வருவதற்கு, 3 முதல், 4 மணி நேரம் ஆகிறது.
- இரவு பஸ்சை தவறவிட்டால் ஆட்டோவில் செல்ல, 200 ரூபாய் ஆகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் வாணியம்பாடி, ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பீமகுளம், நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகில் உள்ள பனைமரியாளம், கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நாங்கள் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சேர்ந்துள்ளோம்.
ஒவ்வொருவரும் சுமார், 60 கிலோ மீட்டர் முதல், 120 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து கிருஷ்ணகிரி கல்லூரிக்கு தினமும் வந்து செல்கிறோம். எங்கள் கிராம பகுதிகளில் இருந்து பஸ் ஏறி வருவதற்கு, 3 முதல், 4 மணி நேரம் ஆகிறது.
தினமும் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல இரவு 10 மணி ஆகிறது. மேலும் எங்கள் கிராமத்திற்கு செல்லும் இரவு பஸ்சை தவறவிட்டால் ஆட்டோவில் செல்ல, 200 ரூபாய் ஆகிறது.
எங்களுக்கு கிருஷ்ணகிரியில் விடுதி வசதி கோரி மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்தன.
- ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி, 41-வது வார்டுப்பட்ட ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு எல். ஐ.ஜி குடியிருப்பு பகுதியில், மேல் தளத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தனியார் கம்பெனி ஊழியர் கதிரேசன் (50) இவரது மனைவி சம்சாத். வழக்கம் போல கதிரேசன் வேலைக்கு சென்று விட அவரது மனைவி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் தீ பிடித்தன. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர். மேலும், இது குறித்து கதிரேசனுக்கும், ஓசூர் தீயணைப்புத் துறையி னருக்கும் தகவல் அளித்து உள்ளனர்.
தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டிவி, பிரிட்ஜ், சுய உதவிக் குழுவில் வாங்கி வைத்திருந்த ரூ. 68,000/- ரொக்கப்பணம், துணிமணிகள் மற்றும் வீட்டிலிருந்த ஏராளமான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமானதால் வாழ்வாதாரம் இன்றி தவித்த அந்த குடும்பத்தினருக்கு, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா, ராஜி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கிற சங்கர், வட்ட செயலாளர் கும்மி என்ற ஹேமகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர்.
இந்த தீ விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 1,508 மாணவிகளுக்கு ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 680 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
- முதல் மதிப்பெண் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி. மதியழகன், ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர், ரூ.37 ஆயிரம் கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மாவட்டத்தில் உள்ள 111 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 14,216 பேருக்கு ரூ.6 கோடியே 85 லட்சத்து 36 ஆயிரத்து 860 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 1,508 மாணவிகளுக்கு ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 680 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்க நல்ல சூழ்நிலை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் கல்வியாண்டில் படித்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள 3 மாணவிகளுக்கும், 10-ம் மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 7 மாணவ மாணவிகள் என மொத்தம் 10 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், விபசாரம் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.
- தலைமறைவாகி விட்ட ஸ்பா உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு 'ஸ்பா'வில், பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவதாக, ஓசூர் அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில், விபசாரம் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்பா மேலாளர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்ஷாத் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட ஸ்பா உரிமையாளர் ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வி.எஸ்.எல். லிமிடெட் எனும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.
- சந்தோஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பு கதறி அழுதனர்.
கிருஷ்ணகிரி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் இடிந்து விழுந்த விபத்தில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த போகனப்பள்ளி வி.ஐ.பி. நகரை சேர்ந்த இளங்கோவன்-ஜெயலட்சுமி தம்பதியின் மகன் சந்தோஷ். இவருக்கு திருமணமாகி ரூபி என்ற மனைவியும், அத்விக் என்ற மகனும், அனமித்ரா என்ற மகளும் உள்ளனர்.
இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வி.எஸ்.எல். லிமிடெட் எனும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது ராட்சத கிரேன் இடிந்து விழுந்த விபத்தில் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சந்தோஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பு கதறி அழுதனர்.
சந்தோஷின் உடல் இன்று இரவு விமானம் மூலம் கிருஷ்ணகிரிக்கு எடுத்து வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.
- பட்டாசு குடோன் வெடிவிபத்தில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
- நியமனம் செய்யப்பட்டுள்ள 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ந் தேதி காலை பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக கவர்னர் ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமரும், முதல்-அமைச்சரும் விபத்தில் பலியானவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக நீது விசாரணை நடத்திட (கிரிமினல் ப்ரொசீஜர் கோட் 21-ன்படி) சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக குருபரப்பள்ளி சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தியை நியமித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு உத்தரவிட்டுள்ளார்.
நியமனம் செய்யப்பட்டுள்ள 30 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து நடந்த இடத்தின் அருகில் வசிக்கக்கூடிய குடியிருப்புவாசிகளிடமும், கடைகளின் உரிமையாளர்களிடமும் விபத்து குறித்து கேட்டறிந்து அதை எழுத்துபூர்வமாக பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை கலெக்டரிடம் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.
- காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன்.
- புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீ விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோன் விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் விபத்து குறித்து கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்த அந்தோணி ஆரோக்கியராஜ் (வயது30) என்பவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நான் பழையபேட்டை நேதாஜி சாலையில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வாட்டர் கம்பெனி வைத்து தொழில் செய்து வருகிறேன். எனக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 29-ந்தேதி அன்று எனது வாட்டர் கம்பெனியில் இருந்த போது டமார் என்று பெரிய அளவில் சத்தம் கேட்டது. நான் சென்று பார்த்த போது அருகில் ராஜேஸ்வரி நடத்தி வந்த ஓட்டல் கடையின் சுவர் இடிந்து விழுந்து விட்டது.
நானும், அருகில் இருந்த முருகேசன், எனது மாமா அந்தோணி ஆரோக்கியராஜ் ஆகியோர் தொலைவில் நின்று பார்த்த போது ராஜேஸ்வரியின் ஓட்டல் கடை அருகில் இருந்த கடைகள், ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தது. மேலும் பட்டாசு கடையில் வெடிகள் வெடித்து புகை மண்டலமாக இருந்தது.
ஒரே அலறல் சத்தம் கேட்டது. கடைகள் வரிசையாக இடிந்து தரைமட்டம் ஆகி விட்டது.
இதில் இம்ரான், இப்ராஹிம் கலிவுல்லா, ருத்திகா, ருத்தேஷ், ரவி, ராஜேஸ்வரி, சிவராஜ், ஜேம்ஸ், சரசு ஆகிய 9 பேர் இறந்தது தெரிய வந்தது.
இது பற்றி விசாரித்த போது ராஜேஸ்வரி நடத்தி வந்த ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் பட்டாசு கடைக்கு தீ பரவி பட்டாசுகள் வெடித்து கடைகள் சேதமடைந்து அனைத்து கடைகளும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீ விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- அந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர ஸ்ரீ ராம் சேனா செயலாளராக இருந்தவர் மோகன்பாபு (வயது25). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஓசூர் சொப்பட்டியை சேர்ந்த ரவுடி திலக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வந்த திலக் கடந்த மே மாதம் 12-ந் தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன்பாபு கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக அவரது தந்தை திம்மராயப்பா (54), மத்திகிரி ரவுடி சசிக்குமார் (24) என்பவர் உதவியுடன் திலக்கை கொலை செய்தது தெரிய வந்தது.
அந்த கொலையில் திம்மராயப்பா, சொப்பட்டி சிவக்குமார் (23), தின்னூர் வெங்கடேஷ் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சசிக்குமார் சங்ககிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி சசிக்குமார் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, ரவுடி சசிக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சரயு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள சசிக்குமாரிடம் வழங்கப்பட்டது, இதையடுத்து ரவுடி சசிக்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
- இரும்பு ராடை பிடுங்கி திருப்பி ரமேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 பேரும் காயமடைந்தனர்.
- ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அம்மாசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பெத்ததாளாபள்ளியைச் சேர்ந்த அ ம்மாசி (வயது34). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று வடுகம்பட்டியில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவரது செல்போன் திடீரென்று காணவில்லை.
இதுகுறித்து அந்த தாபா ஓட்டல் உரிமையாளரான தாசிரிபள்ளியை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அம்மாசி கூறினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து அம்மாசியை தாக்கியுள்ளார். உடனே அவரும் அந்த இரும்பு ராடை பிடுங்கி திருப்பி ரமேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் 2 பேரும் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மாசி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர் அம்மாசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விடிந்து பார்த்ததும் அந்த மொபட்டை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.
- இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தேவர்முக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கவுரிராஜன் (வயது40). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி இருந்தார். விடிந்து பார்த்ததும் அந்த மொபட்டை மர்ம நபர் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து கவுரிராஜன் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கும்பரனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (25) என்பவர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர்.
- மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.
- கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பொன்மலை நகரைச் சேர்ந்தவர் சரண் (வயது22). கூலித்தொழிலாளி.
ஜெகதேவி எம்.ஜி.ஆர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை பார்ப்பதற்காக சரண் நேற்று கோவிலுக்கு வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), ஆனந்த் (20), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் திருவிழாவிற்கு வந்தனர்.
அப்போது 3 பேரும் சேர்ந்து சரணிடம் ஒலிபெருக்கியில் சினிமா பாடல் போடுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து சரணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை பார்த்த சரண் தரப்பினரைச் சேர்ந்த நவீன்குமார் (24), வேலாயுதம் (24), சந்தோஷ் குமார் (25), சூர்யா (21), பத்மநாபன் (21), ரவி, சந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரும் சேர்ந்து மணிகண்டன் தரப்பினரை திருப்பி தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போர்களமாக காட்சியளித்தது.
இதுகுறித்து சரண் பர்கூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், ஆனந்த், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோன்று மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.
கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் பதியும்போது, தொழிலாளர்களுக்கான அடையாள விண்ணப்பத்துடன், ஒரு நோட்டும் கொடுக்கப்பட வேண்டும்.
- தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு கேட்டுள்ளோம்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டில் இயங்கி வரும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தக (ESI) அலுவலகத்தில் தங்களின் குடும்பங்கள் பற்றிய விபரங்களை பதிய வேண்டும். இப்படி பதிவதன் மூலம் தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உடல் நலக்குறைவு ஏற்படின், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற முடியும்.
இதற்காக போச்சம்பள்ளி சந்தூர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தை தினமும் காலை முதல் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பதிவதர்காக வருகின்றனர்.
இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் பதியும்போது, தொழிலாளர்களுக்கான அடையாள விண்ணப்பத்துடன், ஒரு நோட்டும் கொடுக்கப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் லாங் சைஸ் பைன்டிங் அட்டை போட்ட நோட்டு வாங்கிக்கொண்டிருந்த அலுவலக ஊழியர்கள், தற்போது கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு வேண்டுமென கூறுவதாகவும், மார்கெட்டிலேயே இல்லாத கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டுக்கு நாங்கள் எங்கு போவது என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அவர்கள் கேட்டும் நோக்கு கிடைக்காமல் தொழிலாளர்கள் தினமும் கடை கடையாய் திரிந்தும் நோட்டு கிடைக்காமல் அலுவலகத்தின் முன்பு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தொழிலாளர் ஒருவர் கூறுகையில், நாங்கள் எங்கள் பகுதியில் கிடைக்கும் ஒரு நோட்டை வாங்கி வந்தால் அதை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
பல மணி நேரம் காத்திருந்து உள்ளே சென்று திருப்பப்படுவதால் மிகுந்த மன வேதனை அடைகிறோம்.
மேலும் ஏதோ ஒரு நோட்டை பெற்று க்கொள்ளாமல், கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு மட்டுமே வேண்டுமென கூறி தொழிலாளர்களை அலைகழிக்க வைக்கின்றனர் என தெரிவித்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி இ.எஸ்.ஐ. மருத்துவர் முனுசாமியிடம் கேட்டபோது, போச்சம்பள்ளி சிப்காட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் எங்கள் அலுவலகத்தில் புதிய நோட்டு கொடுத்து பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுநாள வரை லாங் சைஸ் நோட்டு வாங்கிக ்கொண்டிருந்தோம்.
ஆனால் தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு கேட்டுள்ளோம். 25 ஆயிரம் நோட்டுகளை வைக்கக்கூடிய போதுமான கட்டிடத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தேர்வு செய்யாத காரணத்தால், போதிய இடம் இல்லாத காரணத்தால் கிங் சைஸ் அட்டை போட்ட நோட்டு பெறுகிறோம் என தெரிவித்தார்.
நீங்கள் கேட்கும் நோட்டு கிடைக்காமல் தொழிலாளர்கள் அலைகழிக்கப்படுவது குறித்த கேட்டதற்கு, இனி வரும் காலங்களில் லாங் சைஸ் நோட்டு மற்றும் கிங் சைஸ் நோட்டு என அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.






