search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.6.85 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள்
    X

    அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.6.85 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள்

    • 1,508 மாணவிகளுக்கு ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 680 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • முதல் மதிப்பெண் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி. மதியழகன், ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர், ரூ.37 ஆயிரம் கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது மாவட்டத்தில் உள்ள 111 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 14,216 பேருக்கு ரூ.6 கோடியே 85 லட்சத்து 36 ஆயிரத்து 860 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 1,508 மாணவிகளுக்கு ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 680 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்க நல்ல சூழ்நிலை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் கல்வியாண்டில் படித்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள 3 மாணவிகளுக்கும், 10-ம் மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 7 மாணவ மாணவிகள் என மொத்தம் 10 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×