என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    போச்சம்பள்ளி அருகே, சாலையில் குத்தாட்டம் போட்டு, தி.மு.க.வை சேர்ந்த பெண்கள் ஓட்டு சேகரித்தனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த நாகோஜனஹள்ளி டவுன் பஞ்சாயத்தில் என். தட்டக்கல்லில் பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் ஓட்டு சேகரித்தனர்.

    அப்போது மத்தூர் ஒன்றிய சேர்மன் மற்றும் சில பெண்கள் நாகரசம்பட்டி, காவேரிப்பட்டணம் சாலையில் குத்தாட்டம் போட்டு பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தனர். நடனம் ஆடி வித்தியாசமான முறையில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
    தேன்கனிக்கோட்டையில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்தவர் மாதேஷ். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். 

    இந்த நிலையில் பட்டியலில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆடு காணாததை கண்டு அதிர்ச்சி அடைந் தார். இரவு மர்ம நபர்கள் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து மாதேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தேன்கனி கோட்டை அண்ணாநகரை சேர்ந்த சுப்பிரமணி மகன் கார்த்திக் (வயது22), வெங்கடேஷ் மகன் ரஞ்சித் குமார் (21) ஆகிய இருவரும் சேர்ந்து ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். 

    கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
    சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காததால் வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை அருகே நிலிவங்கா பகுதியில் ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உங்கட்டியை சேர்ந்த சிவா (வயது25), பொன்னாகரம் சேர்ந்த கூலி தொழிலாளி நரசிம்மா (25) ஆகிய நண்பர்களான இருவரும் நேற்றுமுன்தினம் நேற்று முன்தினம் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

    அப்போது சாப்பிட்ட பின்பு சிவா, நரசிமாவிடம் சாப்பிட்டதற்கு பணம் கொடு என்றார். இதனால் இருவருக்கும் தகராறு எற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மா அருகிள் இருந்த பாட்டிலை எடுத்து சிவாவை தாக்கினார். 

    இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    இது குறித்து பேரிகை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நரசிம்மாவை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரியில் காலணி கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி தலைமறைவான வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் காலணி கடை உரிமையாளரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மோகன் ராவ் காலனியைச் சேர்ந்தவர் பைசு. இவர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே காலணிகள் (செருப்பு) விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி இவரது கடைக்கு கிருஷ்ணகிரி கிருஷ்ணசாமி, கோவில் கீழ் மாடதெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரூகேஸ்வரன் (வயது20) என்பவர் காலணி எடுப்பதற்காக வந்தார்.

    அவர் கடையில் ரூ.1,500 மதிப்புள்ள காலணியை வாங்கி சென்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் கடைக்கு வந்த அந்த நபர் தனக்கு அந்த காலணி வேண்டாம். அதற்கான தொகையை திரும்ப தாருங்கள் என்று கூறினார். 

    அப்போது கடை உரிமையாளர் பைசு, மாற்று காலணி தருவதாகவும், பணத்தை திரும்ப தர இயலாது என கூறினார். இதனால் பைசு, ரூகேஸ்வரன் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த நேரம்  ரூகேஸ்வரனை பைசுவின் நண்பர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காவல் துறையினர் 2 தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று பைசு கடையை திறக்க வந்தார். அப்போது  ரூகேஸ்வரன் கையில் அரிவாளுடன் அங்கு காத்தி ருந்தார். அவர் பைசுவின் முதுகில் அரிவாளால் வெட்டினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பைசு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால்  ரூகேஸ்வரன் விடாமல் அவரை துரத்தி சென்று தோள்பட்டை, கை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதை அங்கிருந்தவர்கள் கவனித்து பைசுவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது பற்றி தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.  இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் வெளியே வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பைசுவை, ரூகேஸ்வரன் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை போலீசார் சேகரித்தனர். 

    இதையடுத்து பைசுவை அரிவாளால் வெட்டிய ரூகேஸ்வரன் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது-. அதனால் அவரை பிடிக்க  சென்னைக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 66 வாக்குச்சாவடிகளை பதற்றமானதாக கண்காணிக்கப்படுகிறது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றமான 66 வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், காவேரிப்பட்டணம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகள் உட்பட 8 நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    171 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், தற்போது 170 பதவிகளுக்கு 827 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 957 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 424 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 66 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி ஓசூர் மாநகராட்சியில் 47, கிருஷ்ணகிரி நகராட்சியில் 12, பேரூராட்சிகளில் நாகோஜனஹள்ளி 4, ஊத்தங்கரையில் 3  பதற்றமான வாக்குச் சாவடிகள் ஆகும். பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
    தெலங்கானா மாநிலத்தில் நடந்த போட்டியில் ஒசூரை சேர்ந்த பந்தயப்புறாக்கள் சாதனை செய்து முதல் 3 பரிசுகளை தட்டிச் சென்றன.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பொம்மாண்ட பள்ளியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(38), இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கடந்த 9 ஆண்டுகளாக பந்தயப் புறாக்களை வளர்த்து, போட்டிகளில் கலந்து கொள்ள செய்துள்ளார். இவரது புறாக்கள்,  பல்வேறு போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளன.

    இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் தெலங்கானா மாநிலம், அதிலாபாத்தில் நடந்த போட்டியில், சதீஷ்குமாரின் 9 புறாக்கள் கலந்துகொண்டன. அதில் 3 புறாக்கள், முதல் 3 பரிசுகளை தட்டிச்சென்றன. 

    நேற்று முன்தினம் பந்தயம் தொடங்கி காலை 6.57 மணிக்கு புறாக்களை பறக்கவிட்ட நிலையில், அதிலாபாத் -ஓசூர் இடையேயான 800 கி.மீ.தொலைவை  முதல் புறா 13 மணி 48 நிமிடத்திலும், 2-வது புறா 14 மணி 463 நிமிடத்திலும், 3-வது புறா 15 மணி 34 நிமிடத்திலும் வான்வெளியில் பறந்து நேற்று காலை 8.42 மணியளவில் ஓசூர் வந்தடைந்தன.

    காரில் எடுத்து சென்ற ரூ.2.66 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பாலக்கோடு& காவேரிப்பட்டணம் சாலையில் பன்னிஹள்ளி அருகே சென்ற காரை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த தோட்டக்கலை துறை உதவி பொறியாளர் ராமசாமி, சிறப்பு சப்& இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கண்ணையன் உள்ளிட்ட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 500 எடுத்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் எலுமிச்சனஹள்ளி பகுதியை சேர்ந்த சிவக்குமார்(வயது 43) என்பதும்அவரது மனைவி தனியார் வங்கியில் பணிபுரிவதாகவும், மாங்காய் வியாபாரத்துக்காக எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார். 

    இருப்பினும் உரிய ஆவணமின்றி எடுத்து சென்றதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைத்தனர்.
    டிப்பர் லாரி மோதிய விபத்தில் பஸ்&4 கார்கள் சேதமானது. தப்பியோடிய லாரி டிரைவருக்கு போலீசார் வலை வீச்சு தேடி வருகிறார்கள்.
    ஒசூர்:

    ஓசூர் சிப்காட் 2-ல் இயங்கி வரும்  தனியார் கம்பெனியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பேருந்து,  நேற்று மாலை கிருஷ்ணகிரி&ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சீதாராம் மேடு அருகே வந்து கொண்டிருந்தது. 

    அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி அதிவேகமாக லாரியை ஒட்டி வந்து வலதுபுறமாக திரும்பினார்.  இதில் பேருந்தின் இடது புறம் சேதம் அடைந்தது.    

    இதையடுத்து டிப்பர் லாரி டிரைவர்  ஹேண்ட் பிரேக் போடாததால், லாரி பின்புறமாக சென்று, பின்னால் வந்து கொண்டிருந்த 4 கார்கள் மீது மோதியது. மேலும் பேருந்தின் மீது மீண்டும் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. 

    இதனால் நான்கு கார்களும், பேருந்தும் சேதம் அடைந்தது மட்டுமன்றி பேருந்தில் இருந்த 2 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 

    இதுகுறித்து பேருந்து ஒட்டுனர் முத்து அளித்த புகாரின் பேரில், ஓசூர் அட்கோ  போலீசார் வழக்குபதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    இரிடியம் இருப்பதாக செம்புக் குடத்தை விற்க முயன்ற தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - நல்லூர் சாலையில் உள்ள வாஸ்து சாலா நகரை சேர்ந்த ஸ்ரீதேவி - சிவசங்கர் தம்பதிகள், கடந்த 5-&ந்தேதி வீட்டில் காரில் வந்த 3 நபர்கள் 1 லட்சம் ரூபாய் பணம், ஐந்தரை சவரன் தங்க நகை மற்றும் செல்போன்களை திருடிச் சென்றதாக, ஓசூர் அட்கோ போலீசில் புகார் அளித்திருந்தனர்.

    அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சப்-&இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையில் தனிப்படை  அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். 

    இந்த நிலையில், நேற்று, ஓசூரில் போலீசாரின் வாகன சோதனையின்போது, 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சிவசங்கர்  தம்பதியர், தங்களது வீட்டில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியம் இருப்பதாக தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (39)  என்பவருக்கு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, அரூரை சேர்ந்த வல்லரசு (23), இளையபிரபு (39), ஆகியோர் பன்னீர் செல்வம் மூலம், ஸ்ரீதேவி தம்பதியர் இரிடியம் என வைத்திருந்த செம்புக்குடத்தை பறித்து சென்றதாகவும், இதனை நகை, பணம் திருடியதாக திசை திருப்பி தம்பதிகள் புகார் அளித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.  

    மிகைப்படுத்தி தவறான புகார் அளித்த தம்பதிகளை கைது செய்த போலீசார், மேலும், இரிடியம் தொடர்பாக வியாபாரம் பேசிய பன்னீர்செல்வம் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த செம்புக்குடத்தை பறிமுதல் செய்தனர். 

    மேலும் இதில் சம்பந்தப் பட்டு தலைமறைவாகியுள்ள, அரூர் பகுதியை சேர்ந்த விஜயபிரபாகரன், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து, ஒசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி யளித்த போது,”இரிடியம் எனக்கூறி திரிபவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இல்லாத ஒன்றை தவறாக சித்தரிப்பவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
    கிருஷ்ணகிரியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை செந்தில் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்த 9ம் தேதி கோ பூஜை, கணபதி ஹோமத்துடன்  தொடங்கியது. 

    அன்று மாலை கங்கா பூஜை, வாஸ்து பூஜை, கும்பாலங்காரம், அங்குரார்ப்பணம், முதல் காலத்வார பூஜை, வேதிகார்ச்சனை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு மங்களாரத்தி, பிரசாத விநியோகம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தது. இரண்டாம் நாளான 10ம் தேதி காலை மங்கல வாத்தியம், வேத பாராயணம், இரண்டாம் காலய வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.

     தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அன்று மாலை மங்கல இசை, வேதபாராயணம், மூன்றாம் கால வேதிகார்ச்சனை, மூன்றாம் கால யாக பூஜை, அஸ்த்ர ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தீபாராதனை, பிரசாத விநியோகம் சுவாமிக்கு மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று (11ம் தேதி) காலை 5 மணிக்கு மங்கல இசை, வேதபாராயணம், நான்காம் கால வேதிகார்ச்சனை, நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விமான கலச புறப்பாடு நிகழ்ச்சியும், பின்னர் கோபுர கலச கும்பாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது. 

    அதைத் தொடர்ந்து மூலாலய கும்ப புறப்பாடு மற்றும் கலசாபிஷேகம், பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தத்வார்ச்சனை, விசேஷ பூஜை, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவினையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை தர்மபுரி பாலாஜி சர்மாவின் முழு முதற்கடவுள் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
    கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 170 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தி.மு.க 30, அ.தி.மு.க 33, பா.ஜ.க 28, நாம் தமிழர் கட்சி 18, பா.ம.க 11, அ.ம.மு.க 4, காங்கிரஸ் 3, எஸ்.டி.பி.ஐ 3, ம.நீ.ம 2 ஆகிய கட்சிகளை சேர்ந்த 129 வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 41 பேர் என மொத்தம் 170 பேர் களத்தில் உள்ளனர். 

    அவர்கள் அனைவருக்கும் பெயர், கட்சி சின்னம், சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட சின்னம் உள்ளிட்டவைகளை வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது. கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான முருகேசன் தலைமையில், நடந்து வரும் பணிகளை, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் பார்வையிட்டார். 

    மண்டல அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் கூறுகையில், கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 66 ஓட்டுச்சாவடிகளுக்கான, 80 கன்ட்ரோல் யூனிட், மற்றும் பேலட் யூனிட் பிரித்து வைக்கப்பட்டு அதில் வேட்பாளர் பெயர் சின்னம் ஒட்டும் பணி நடைபெற்றது. பின்னர் அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    இது தேர்தல் நடைபெறும் வருகிற 19ந் தேதிக்கு முதல் நாள் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் என்றார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக சுவாமிக்கு ஸ்ரீ விநாயகர் வழிபாடு, புன்யாக வாசனம், ஸ்ரீ மஹா கணபதி, மஹாலட்சுமி, அதித்யாதி, நவகிரக ஹோமங்கள் செய்து தீர்த்தக் குடம், முளை பாரிகை ஊர்வலம் நடைபெற்றது. 

    அதனை தொடர்ந்து வெள்ளி கிழமை அதிகாலை பூர்வாங்க பூஜைகள் இரண்டாம் காலம் யாகம், ஸ்பர்ஸாஹீதி, நாடி சந்தனம், மூல மந்திரம், மாலா மந்தர ஹோமம், உள்ளிட்ட சிறப் பூஜைகளுடன் புரோகிதர் களால் சுவாமியின் கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அத்துடன் சுவாமியை அலங்கரித்தும் தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயக பெருமான் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் செட்டியார்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இவ்விழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழானை தொடர்ந்து சுவாமிக்கு 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும் என்று விழாவில் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
    ×