என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் காலணி கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: தலைமறைவான வாலிபரை பிடிக்க தனிப்படை அமைப்பு

    கிருஷ்ணகிரியில் காலணி கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி தலைமறைவான வாலிபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் காலணி கடை உரிமையாளரை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மோகன் ராவ் காலனியைச் சேர்ந்தவர் பைசு. இவர் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே காலணிகள் (செருப்பு) விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி இவரது கடைக்கு கிருஷ்ணகிரி கிருஷ்ணசாமி, கோவில் கீழ் மாடதெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரூகேஸ்வரன் (வயது20) என்பவர் காலணி எடுப்பதற்காக வந்தார்.

    அவர் கடையில் ரூ.1,500 மதிப்புள்ள காலணியை வாங்கி சென்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் கடைக்கு வந்த அந்த நபர் தனக்கு அந்த காலணி வேண்டாம். அதற்கான தொகையை திரும்ப தாருங்கள் என்று கூறினார். 

    அப்போது கடை உரிமையாளர் பைசு, மாற்று காலணி தருவதாகவும், பணத்தை திரும்ப தர இயலாது என கூறினார். இதனால் பைசு, ரூகேஸ்வரன் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த நேரம்  ரூகேஸ்வரனை பைசுவின் நண்பர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து காவல் துறையினர் 2 தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று பைசு கடையை திறக்க வந்தார். அப்போது  ரூகேஸ்வரன் கையில் அரிவாளுடன் அங்கு காத்தி ருந்தார். அவர் பைசுவின் முதுகில் அரிவாளால் வெட்டினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பைசு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால்  ரூகேஸ்வரன் விடாமல் அவரை துரத்தி சென்று தோள்பட்டை, கை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதை அங்கிருந்தவர்கள் கவனித்து பைசுவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது பற்றி தகவல் அறிந்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.  இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் வெளியே வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பைசுவை, ரூகேஸ்வரன் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளை போலீசார் சேகரித்தனர். 

    இதையடுத்து பைசுவை அரிவாளால் வெட்டிய ரூகேஸ்வரன் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது-. அதனால் அவரை பிடிக்க  சென்னைக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர்.
    Next Story
    ×