என் மலர்
கிருஷ்ணகிரி
- காளியப்பன் வளர்த்து வந்த மாடு, கிருஷ்ணனை முட்டியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.
சூளகிரி,
சூளகிரி அருகே சென்னப்பள்ளி அருகே உள்ள கொண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 35). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (47). இவர்க ளின் நிலம் அருகருகில் உள்ளது. கடந்த 6-ந் தேதி காளியப்பன் வளர்த்து வந்த மாடு, கிருஷ்ணனை முட்டியது.
இது தொடர்பாக பேசிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணனை காளியப்பன் கை, கல்லால் தாககினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து காளியப்பனை கைது செய்தனர்.
- குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.
- வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் (43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோன் இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் மாலை அந்த கடைக்கு பட்டாசுகள் லாரி மற்றும் பிக்அப் வேன்களில் வந்து இறங்கியது. அப்போது பட்டாசுகளை கடை, குடோன்களில் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடை, குடோனில் இருந்த 13 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களின் உடல்களை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
இந்த நிலையில் அந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் பட்டாசு கடை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இறந்த 14 பேரின் உடல்களும் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விபத்தில் கடை உரிமையாளர் நவீன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் பெங்களூரு மடிவாளா செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையிலும், சஞ்சய், சந்துரு, ராஜேஷ், பால்கபிர் ஆகிய 4 பேரும் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் நவீன் மற்றும் அவரது தந்தை ராமசாமி ரெட்டி, கட்டிட உரிமையாளர் அணில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதில் நவீன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதால் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீது கவனக்குறைவாக செயல்படுதல், விபத்து மரணத்தை ஏற்படுத்துல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டாசு கடை, குடோன் உரிமம் தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டிருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
- 5 ரோடு ரவுண்டானா அருகில் மாலைகள், பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது.
கிருஷ்ணகிரி,
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது வழக்கம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 18ம் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை (நடு சனி) முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்ப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயிலுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கோயிலுக்கு கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள வெங்கட்ரமணசாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோயில், வேலம்பட்டி பெரியமலை கோயில், ஐகொந்தம் கொத்தப்பள்ளி சீனிவாசபெருமாள் கோயில், கிருஷ்ணகிரி தம்மண்ணநகர் பெருமாள் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
புரட்டாசி முன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் மாலைகள், பூக்கள் அதிக அளவில் விற்பனை ஆனது. இதே போல மாவட்டம் முழுவதும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அதிகாலையிலேயே குளித்து பெருமாள் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கனவாய்ப்பட்டி பெருமாள் கோயில் உள்பட பல கோயில்களில் பக்தர்கள் மொட்டை போட்டு தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.25 கோடி மதிப்பில் புதியவகுப்பறைகள் கட்டும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெடுங்கல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நபார்டு திட்டத்தில், புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட, ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்று, கட்டுமான பணிகளை பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாக ராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார்.
- சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டிபார் மெண்ட்ஸ்டோர் கடையை உடைத்து கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையம் அருகில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமை யாளர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு உறங்க சென்றுள்ளார்.
அப்போது ஒரு மர்ம நபர் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளை அடித்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்க வே வீட்டில் இருந்து வந்து பார்த்த போது மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அதனை தொடர்ந்து கடையை திறந்து கல்லா பெட்டியை பார்த்தபோது பணம் கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இது குறித்து கடையின் உரிமையாளர் முரளிதரன் மத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் நேரில் சென்று விசாரித்து அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவா னதை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- "மா "அரிமா சங்கத்தின் தலைவர் கிருஷ்ண்மூர்த்தி தலைமை வகித்தார்.
- அரசு சார்ந்த பல்வேறு பொது சேவையிலும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில், மத்தூர் "மா "அரிமா சங்கம் சார்பில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் 5 ஆயிரம் பனை விதைகள் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விவசாயிகளுக்கு தேன்கூடு அமைத்து கொடுத்தல், மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் படித்து பயன் பெறும் வகையில் நூலகத்திற்கு புத்தகம் அளித்தல், அதே போல் மத்தூர் குணாமெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்களால் இயற்கை முறையில் சமைக்கப்பட்ட சிறு தானிய உணவை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து பரிசளித்தல் உள்ளிட்ட அரசு சார்ந்த பொது சேவை திட்டங்கள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு மத்தூர் "மா "அரிமா சங்கத்தின் தலைவர் கிருஷ்ண்மூர்த்தி தலைமை வகித்தார்.
நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆளுநர் டி.ஆர். தமிழ்மணி கலந்து கொண்டு கவுண்டனூர் ஊராட்சிக்குட் பட்ட அரசு புரம் போக்கு நிலத்தில் தமிழகத்தின் ஆதாரமாக விளங்கும் பனை மரமான பனை விதைகள் நட்டு வைத்து அச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அரசு சார்ந்த பல்வேறு பொது சேவையிலும் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மத்தூர் குணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளுரும், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு, மத்தூர் ஒன்றியகுழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூபதி (பொறுப்பு), மத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார், சரவணாஸ் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் சரவணன், கண்ணன்டஅள்ளி பரணிப் பள்ளியின் தாளாளர் சேகர், குருமார்டன் வே பிரிட்ஜ் உரிமையாளர் திருப்பதி, திமுக.மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் இறந்த தமிழகத்தைச் சார்ந்த 14 குடும்பத்தினருக்கும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் உயர் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் நிதி உதவி வழங்கவும் இறந்தவர்களின் உடல்கள் அவருடைய உறவினர்களிடம் பாதுகாப்பாக வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான ஆர்.சக்கரபாணி ஆகியோர் இன்று காலை பெங்களூரு வருகை தந்தனர்.
வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களையும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
முன்னதாக அத்திப்பள்ளிக்கு வருகை தருவதற்காக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோரை பெங்களூரு விமான நிலையத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலா ளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. வரவேற்றார். அப்போது, ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா உடன் இருந்தார்.
- கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன
ஓசூர்:
ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனும், ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. அவர் இந்த கடையை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்தது சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியது.இதைக் கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக எல்லையில் ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து போக்குவரத்தில் இயல்பு நிலை ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் 1 சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகி எலும்புக்கூடாகின. மேலும் பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன.
- எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க வை முழுவதுமாக ஒழித்து விடுவார் என்று பெங்களூர் புகழேந்தி தெரிவித்தார்.
- எடப்பாடி பழனிசாமி திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று இரவு நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க (ஓ.பன்னீர்செல்வம் அணி) கொள்கைபரப்பு செயலாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதா வது:- ஏற்கனவே, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை முதுகில் குத்திய எடப்பாடி பழனி சாமி பற்றி தற்போது தான் பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு தெரிய வந்துள்ளதா? முதன் முதலாக, பா.ஜனதா கட்சியை பின்னாலிருந்து முதுகில் குத்திய ஒரே மனிதர் எடப்பாடி பழனி சாமி தான். அந்த கட்சியே, நிலை தடுமாறும் அளவிற்கு அவர்களது முதுகில் எடப்பாடி பழனிசாமி பலமாக குத்தியுள்ளார்.
திமுகவுக்கும், அதிமுக வுக்கும் தான் போட்டி எனக் கூறிவரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு, திமுகவை எதிர்ப்பதற்கு தமிழ்நாட்டில் அவர்களிடத்தில் தற்போது என்ன பலம் இருக்கிறது? ஏற்கனவே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்து கட்ட மைப்பு சீராக இருந்த ஒரே தொகுதியான தேனி யில் மட்டும் ஓபிஎஸ் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
தற்போது, கட்சி பிளவு பட்டுள்ள சூழ்நி லையில் இவர்களிடம் என்ன கட்டமைப்பு உள்ளது? எடப்பாடி பழனி சாமியும், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் ரகசிய உடன்பாட்டில் உள்ளனர். எனவே தான் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கட்சி யை காட்டி கொடுத்து விட்டதுடன்,தற்போது அதிமுக என்ற கட்சியை முழுவதுமாக ஒழித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
மேலும் தற்போ துள்ள அதிமுக இரண்டாக பிளவுபட்டு, வேலுமணி போன்றவர்கள், எடப்பாடி பழனிசாமியிடமிருந்து வெளியேறப் போகிறார்கள். இதனை சாதகமாக்கிக் கொண்டு, அதிமுகவிலிருந்து சுமார் 28 எம். எல். ஏ.க்களை பா.ஜனதா கட்சியினர்தங்கள் வசம் நிச்சயம் இழுத்து விடுவார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை புறம்தள்ளி, எடப்பாடி பழனிசாமியை நம்பி, அவர் முதுகில் குத்தியதை இன்னும் சரி செய்ய முடியாத சூழலில் நிலை தடுமாறி, புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பா.ஜனதா தலைவர்களில் அண்ணாமலையும் ஒருவர். இவ்வாறு புகழேந்தி நிருபர்க ளிடம் கூறினார்.
- தேன்கனிக்கோட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தண்டரை ஊராட் சிக்கு உட்பட்டது இஸ்லாம் பூர் கிராமம். இந்த கிரா மத்தின் அருகில் சன்னத்து ஓடை என்ற இடம் உள்ளது. இதன் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி ஒரு ஆட்டை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இழுத்து சென்றது.
இதை யடுத்து தேன்க னிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலை மையிலான வன குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கு தடயங்கள் உள்ளதா என பார்த்தனர். அதில் சிறுத்தையின் கால் தடயங்கள் கண்டறி யப்பட்டன.
இதையடுத்து ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்தை பார்வை யிட்டு தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள் ளவும், சுற்று வட்டார கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் வனத்துறை யினருக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து ஓசூர் வன கோட்ட உதவி வன பாது காவலர் ராஜமாரியப்பன் தலைமையில் வன குழுவி னர் சம்பவ இடத்தை கண்கா ணித்து வந்தனர். இந்த நிலையில் சிறுதை யின் நடமாட்டத்தை கண்கா ணிக்க தானியங்கி கேமராக் கள் பொருத்த பட்டு கண்கா ணிக்கப்பட்டன.
அதில் தானியங்கி கேமரா வில் சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இந்த சிறுத்தை தற்போது தேன்கனிக்கோட்டை காப்பு காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள து. இதன் அருகில் சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைக்கல புரம், தண்டரை, இஸ்லாம் பூர், பண்டேஸ்வரம், பே லூர், எண்ணேஸ்வ ரமடம், பென்னங்கூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தொழிற்சா லைகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன.
ஆகவே அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்கள். மேலும் வருவாய்த்துறையி னரும், காவல் துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகை யில், பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் வெளி யில் மின் விளக்கு களை ஒளிர செய்ய வேண்டும். சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தேன்கனிக்கோட்டை வன சரக அலுவலர் 97870 96753 மற்றும் அய்யூர் வனவர் 82482 61278 ஆகிய எண்க ளில் தொடர்பு கொள்ளலாம். என தெரிவித்துள்ளனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் மூலம் ரூ. 63 லட்சம் மோசடி நடந்துள்ளது.
- படித்தவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கொப்பகரை அருகே எச்சனஅள்ளி அருகேயுள்ள கோனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31).
இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 9.5. 2023 அன்று இவரது செல்போனில் வாட்ஸ் அப் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில் பகுதி நேரமாக பணியாற்றினால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நடைமுறை செலவுகளுக்காக குறிப்பிட்ட கணக்குகளில் பணம் செலுத்தவும் கூறப்பட்டிருந்தது.
இதை நம்பி ரமேஷ், அவர் கூறியிருந்த வங்கி கணக்குகளில் ரூ. 30 லட்சத்து 83 ஆயிரத்து 298 தொகையை அனுப்பினார். அந்த தொகை கிடைத்த உடன் எதிர் முனையில் தகவல் அனுப்பியவர் தொடர்பை துண்டித்தார். இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதே போன்று ஓசூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (38). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதனை டவுன் லோடு செய்து அதில் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் பேசிய நபர் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுகூறியுள்ளார். இதனையடுத்து அவர் சொன்ன வங்கி கணக்கு எண்ணில் ரூ. 21 லடசத்து 18 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு அந்த எண்ணில் உள்ள நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமரேசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று ஒசூர் ஜவஹர் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ரேகா (60). இவரது செல்போன் நம்பருக்கு ஒருவர் ஸ்டேட் வங்கி மேலாளர் பேசுவதாககூறி கூறி மர்ம நபர் ஒருவர் பேசினார். அவர், ஏடி.எம் கார்டை புதிதாக மாற்ற வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு எண், ஏடி.எம் பின் நம்பர் மற்றும் ஒ.டி.பி. நம்பர் ஆகியவற்றை கேட்டுள்ளார். ரேகா எல்லாவற்றையும் கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரேகா இது குறித்து சம்பந்தப் பட்ட வங்கியில் சென்று விசாரித்தபோது அவரிடம் மேலாளர் என்று பேசிய மர்மநபர் ஒருவர் ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து ரேகா கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வர்களை குறிவைத்து அதிக சம்பாதிக்காலம் என்று ஆசை வார்த்தை கூறி பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; பொதுமக்கள் தங்களது செல்போனுக்கு வரும் அறிமுகம் இல்லாதவர்களை அழைப்பையும், குறுஞ்செய்தி களையும் தவிர்ப்பது நல்லது என்றார்.
- சாலையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பழுதான நிழற்குடையால் பொது மக்கள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் கடந்த 2002- 2003-ம் ஆண்டு பஸ் நிறுத்த நிழற் குடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பயணிகள் நிழற் குடையானது சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்பொழுது ஒரு சில ஆண்டுகளாக பழுதாகி மிகவும் நிழற்குடையின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் கீழே விழுந்து கம்பிகள் தெரியும் அளவிற்கு மிக மோசமாக இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.
இந்த நிழற் குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அப்பகுதி பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு நகர்ப்புறம் செல்வதற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்காக நகர் பகுதிகளுக்கு செல்லவும் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயில் நேரத்திலும் மழை நேரத்திலும் இந்த நிழற்குடையில்தான் அமர்ந்திருக்க வேண்டி யுள்ளது. தற்பொழுது இந்த நிழற்குடை மிகவும் பழுதாகி உள்ளதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தான் பொதுமக்கள் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருந்து சென்று வருகின்றனர்.
எனவே இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி பழுதான நிழற் குடையை அகற்றிவிட்டு புதியதாக நிழற் குடையை அமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






