என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் மூலம் ரூ.63 லட்சம் மோசடி
    X

    பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் மூலம் ரூ.63 லட்சம் மோசடி

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் மூலம் ரூ. 63 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • படித்தவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கொப்பகரை அருகே எச்சனஅள்ளி அருகேயுள்ள கோனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31).

    இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 9.5. 2023 அன்று இவரது செல்போனில் வாட்ஸ் அப் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில் பகுதி நேரமாக பணியாற்றினால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நடைமுறை செலவுகளுக்காக குறிப்பிட்ட கணக்குகளில் பணம் செலுத்தவும் கூறப்பட்டிருந்தது.

    இதை நம்பி ரமேஷ், அவர் கூறியிருந்த வங்கி கணக்குகளில் ரூ. 30 லட்சத்து 83 ஆயிரத்து 298 தொகையை அனுப்பினார். அந்த தொகை கிடைத்த உடன் எதிர் முனையில் தகவல் அனுப்பியவர் தொடர்பை துண்டித்தார். இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ், இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதே போன்று ஓசூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (38). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    அதனை டவுன் லோடு செய்து அதில் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் பேசிய நபர் பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்றுகூறியுள்ளார். இதனையடுத்து அவர் சொன்ன வங்கி கணக்கு எண்ணில் ரூ. 21 லடசத்து 18 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு அந்த எண்ணில் உள்ள நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமரேசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே போன்று ஒசூர் ஜவஹர் நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ரேகா (60). இவரது செல்போன் நம்பருக்கு ஒருவர் ஸ்டேட் வங்கி மேலாளர் பேசுவதாககூறி கூறி மர்ம நபர் ஒருவர் பேசினார். அவர், ஏடி.எம் கார்டை புதிதாக மாற்ற வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு எண், ஏடி.எம் பின் நம்பர் மற்றும் ஒ.டி.பி. நம்பர் ஆகியவற்றை கேட்டுள்ளார். ரேகா எல்லாவற்றையும் கூறியுள்ளார்.

    சிறிது நேரத்தில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் எடுக்கப்பட்டதாக செய்தி வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரேகா இது குறித்து சம்பந்தப் பட்ட வங்கியில் சென்று விசாரித்தபோது அவரிடம் மேலாளர் என்று பேசிய மர்மநபர் ஒருவர் ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து ரேகா கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் படித்த வர்களை குறிவைத்து அதிக சம்பாதிக்காலம் என்று ஆசை வார்த்தை கூறி பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்; பொதுமக்கள் தங்களது செல்போனுக்கு வரும் அறிமுகம் இல்லாதவர்களை அழைப்பையும், குறுஞ்செய்தி களையும் தவிர்ப்பது நல்லது என்றார்.

    Next Story
    ×