என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு கடை தீ"

    • கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன

    ஓசூர்:

    ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனும், ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. அவர் இந்த கடையை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்தது சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியது.இதைக் கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநில அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக எல்லையில் ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து போக்குவரத்தில் இயல்பு நிலை ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் 1 சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகி எலும்புக்கூடாகின. மேலும் பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகள், டீ கடையும் சேதம் அடைந்தன.

    • பட்டாசுக் கடை தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி.
    • காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு-கர்நாடக எல்லையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி என்ற இடத்தில் இயங்கிவந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர் என்ற மிகுந்த வேதனையான செய்தியினைக் கேட்டு துயரமடைந்தேன்.

    இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் மற்றும் காவல் துறை அலுவலர்களை விபத்து நடந்த இடத்திற்கு சென்று தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்க அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இச்சம்பவம் குறித்து நமது தலைமைச் செயலாளர் கர்நாடக மாநில தலைமைச் செயலாளருடன் பேசியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும், மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களை தமிழ்நாட்டுக் கொண்டுவரவும் உரிய ஏற்பாடுகளை செய்ய உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணியையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் அனுப்பிவைத்துள்ளேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது.
    • வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில் அருகில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பேடரப்பள்ளியை சேர்ந்த நவீன் (43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் குடோன் இயங்கி வருகிறது.

    நேற்று முன்தினம் மாலை அந்த கடைக்கு பட்டாசுகள் லாரி மற்றும் பிக்அப் வேன்களில் வந்து இறங்கியது. அப்போது பட்டாசுகளை கடை, குடோன்களில் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடை, குடோனில் இருந்த 13 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களின் உடல்களை நேற்று முன்தினம் இரவு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.

    இந்த நிலையில் அந்த குடோனில் இருந்து நேற்று அதிகாலை மீண்டும் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனால் பட்டாசு கடை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    இறந்த 14 பேரின் உடல்களும் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த விபத்தில் கடை உரிமையாளர் நவீன், ராஜேஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் பெங்களூரு மடிவாளா செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையிலும், சஞ்சய், சந்துரு, ராஜேஷ், பால்கபிர் ஆகிய 4 பேரும் அத்திப்பள்ளி ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது தொடர்பாக அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளர் நவீன் மற்றும் அவரது தந்தை ராமசாமி ரெட்டி, கட்டிட உரிமையாளர் அணில் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதில் நவீன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பதால் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீது கவனக்குறைவாக செயல்படுதல், விபத்து மரணத்தை ஏற்படுத்துல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வெடி விபத்து தொடர்பாக பெங்களூரு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜூன் பால்தண்டி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பட்டாசு கடை, குடோன் உரிமம் தொடர்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டிருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×