என் மலர்
கிருஷ்ணகிரி
- சிறிது நேரத்திற்கு பிறகே அங்கிருந்த சிலர் வரிசையில் நிற்பது கலெக்டர் என்பதை அறிந்து அவரை முன்னால் செல்ல கேட்டுக் கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் இந்த எளிமை அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கிய கலெக்டர், மக்களோடு வரிசையில் நின்று பொருட்களுக்கு பில் போட்டு கலெக்டர் தொகையை செலுத்தி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப், கடந்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் வந்தார். அங்கு பொருட்களை வைக்க கூடிய கூடையை எடுத்து பல்வேறு பொருட்களை தேர்ந்தெடுத்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்றார்.
சிறிது நேரத்திற்கு பிறகே அங்கிருந்த சிலர் வரிசையில் நிற்பது கலெக்டர் என்பதை அறிந்து அவரை முன்னால் செல்ல கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அவரோ அனைவருடனும் வரிசையில் நின்று பொருட்களுக்கு பில் போட்டு விட்டு தொகையை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து சென்றார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரின் இந்த எளிமை அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
- நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில்சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
- கருப்பு துணியை வாயில் கட்டிக்கொண்டும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி,
ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்டகாங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு, அவதூறு வழக்கில்2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, எம்பி பதவி பறிக்கப்பட்டது.இதனை கண்டித்து நாடு முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில்சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை எதிரில், கிழக்கு மாவட்டகாங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநிலசெயலாளர் ஜே.எஸ். ஆறுமுகம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், நாராயணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், எஸ்.சி. எஸ்.டி.பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர்.
இதில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும், அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள் கருப்பு துணியை வாயில் கட்டிக்கொண்டும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் பி.சி.சேகர்,
ரகமத்துல்லா, நகர தலைவர்(தெற்கு) லலித் ஆண்டனி, முபாரக் (வடக்கு), மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், நிர்வாகிகள் யுவராஜ், ராஜேந்திரவர்மா, ஜாக்கப், கமலக்கண்ணன் விவேகானந்தன் ஜெயபிரகாஷ் வக்கீல் அசோகன்,வட்டாரத் தலைவர்கள் கல்லாவி ரவி, திருமால், மாது, ஜெயவேல், ஜேக்கப், நகரத் தலைவர்கள் யுவராஜ்,விஜயகுமார், தேவநாராயணன், விவேகானந்தன், செயலாளர் பாண்டுரங்கன், மடத்தனூர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
- ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில், 109 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள படேதலாவ் ஏரிக்கு (பெரிய ஏரி) மார்க்கண்டேயன் நதியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால் மார்க்கண்டேய நதியில் நீர்வரத்து முற்றிலும் நின்றதால் படேதலாவ் ஏரியும் வறண்டது. கடந்த, 2019ல் ஆந்திராவில் பெய்த கன மழையால், மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நிரம்பியது.
பின்னர் மழையின்றி ஏரி வறண்ட நிலையில், கடந்த ஆண்டு மார்க்கண்டேயன் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் அக்டோபரில் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஏரி நீரை நம்பி ஏரியின் கீழ் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை துவங்கினர்.
தற்போது 100 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பாதி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்தவர்கள் கடந்த ஒரு வாரமாக ஏரியில் இருந்து தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியதாலும், ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததாலும், இந்த நீரை நம்பி விவசாயப் பணியை துவக்கினோம். ஏரியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ளவர்கள், ஏரி முழுவதும் முட்செடிகள் வளர்ந்துள்ளதால் வலை வீசி மீன் பிடிக்க முடியாது என்பதால், ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்த தண்ணீர் விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 5 அடி வரை தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது.
எப்போதாவதுதான் இந்த ஏரி நிரம்பும் நிலையில், தற்போது நிரம்பியுள்ள தண்ணீரையும் மீன் குத்தகைதாரர்கள் திறந்துவிட்டுள்ளதால் தண்ணீர் வீணாகி வருவதோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரியில் இருந்த வெளியேறும் தண்ணீரை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆனந்த நகரில் நுண்ணுயிர் செயலாக்க மைய பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
- ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
தூய்மை பாரத திட்டம் (யு), 2.0 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பில் ஆனந்த நகரில் நுண்ணுயிர் செயலாக்க மைய பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மம்தா சந்தோஷ், மாநகராட்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
- இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த ரேஷன் அரிசியை வீடு, வீடாக சென்று வாங்கியவர்களிடமிருந்து 225 கிலோ அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையில், வருவாய் ஆய்வாளர் முருகேசன், ஜீப் ஓட்டுநர் சுப்பிரமணி ஆகியோர் கிருஷ்ணகிரி -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி என்ற இடத்தில் இருந்து கரிக்கல்நத்தம் - மாங்குட்டை ஏரிக்கு செல்லும் சாலையில் ரோந்து சென்றனர்.
அபபோது அங்கு இருசக்கர வாகனத்தில், 5 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் 225 கிலோ ரேஷன் அரிசி, மின்னணு எடை தராசுடன் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன், தேவர்குந்தாணி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமன் என்பதும், அவர்கள் இருவரும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசை வாங்கி, மொத்தமாக கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இந்த விசாரணையின் போது, அவர்கள் இருவரும் அரசி, இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு தராசு ஆகியவற்றை விட்டுவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இருசக்கர வாகனம் மற்றும் மின்னணு எடை தராசை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தனர்.
- தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
- பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் - தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட துணை செயலாளர் பி.முருகன், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு, முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து விரிவாக பேசினார். மேலும், பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை குறித்தும் அவர் ஆலோசனைகள் வழங்கினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளர்கள் ஆரணி அன்புவாணன், வேலூர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் இன்பசேகரன், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, மாநகர நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
- எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு நடைபெறும்.
- இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -
அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதார ர்களிடமிருந்து வருகிற 31ம் தேதி வரை இணைய வழியாக (லீttஜீs://ணீரீஸீவீஜீணீtலீஸ்ணீஹ்u.நீபீணீநீ.வீஸீ) விண்ணப்பிக்க இந்திய விமானப்படை விளம்பர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்னி வீரர்களுக்கான இணைவழித் தோவு வருகிற மே மாதம் 20ம் தேதியன்று நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் 2002ம் ஆண்டு டிசம்பர் 26 அல்லது அதற்கு பிறகு பிற்நதவர்களாகவும், 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 26 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளில் தேர்வு நடைபெறும். இந்திய விமானப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு, 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 29ம் தேதி காலை 11 மணியளவில் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 04343-291983 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்வதோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவல் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
- பார்த்தீபன் அருவாளாலும், அவரது அப்பா சுப்பிரமணியுடன் சேர்ந்து சிவசங்கரனை தாக்கியுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணி, பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி அருகே உள்ள மேல்சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் சிவசங்கரன்(34). இவர் தற்போது மணிப்பூரில் ராணுவத்தில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சிவசங்கரன், 55 நாள் விடுமுறையில் தனது சொந்த ஊரான மேல்சீனிவாசபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கரின் தந்தை பச்சையப்பனுக்கும், அவரது உடன் பிறந்த தம்பியான சுப்பிரமணி(60) என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக வீட்டிற்கு செல்லும் பாதை சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பிரச்சனைக்குரிய அந்த பாதையில் சிவங்கரன் சென்ற போது, அவரது சித்தப்பா மகனான பார்த்தீபன்(29) அவ்வழியே எதற்கு வந்தாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றி, கை கலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தீபன் அருவாளாலும், அவரது அப்பா சுப்பிரமணியுடன் சேர்ந்து சிவசங்கரனை தாக்கியுள்ளார்.
அப்போது சிவசங்கரனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவசங்கரனின் சித்தப்பா சுப்பிரமணி மற்றும் அவரது மகன் பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ்பாபு, தொகுதி தலைவர் சதாம் உசேன், நகர தலைவர் நிதீஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் கவியரசன், சென்னப்பன், மாரியப்பன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர் கலந்து கொண்டார். சேவாதளத் தலைவர் தேவராஜ் நன்றி கூறினார்.
இதில், ராகுல்காந்தி மீது அவதூறுபரப்பி தண்டனை பெற்றுத்தரக் காரணமாக இருந்த பாஜக அரசைக் கண்டித்தும், அவர் பதவியை பறிக்கக் காரணமானவர்களைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
- ஓசூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமை தாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ராகுல் காந்தி, எம்.பி.பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த இந் நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமை தாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் , ஹரீஷ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
- தெரு விளக்குளை தேன்கனிக்கோட்டை மின் வாரிய உதவி பொறியாளர் தேன்மொழி பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மல்லசந்திரம் ஊராட்சி அளேநத்தம் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சத்துணவு கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி ரிப்பன் வெட்டி, சமையலறைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா முனிராஜ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஓசூர் கூட்ரோடு முதல் அளே நத்தம் வரை புதிதாக அமைக்கப்பட்ட எல் ஈடி தெரு விளக்குளை தேன்கனிக்கோட்டை மின் வாரிய உதவி பொறியாளர் தேன்மொழி பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, மல்லசந்திரம் ஊராட்சி தலைவர் சுரேகா முனிராஜ், துணை தலைவர் மஞ்சுளா, தொழிலதிபர் வசந்தப்பா, கூட்டுறவு வங்கி தலைவர் ரவிகுமார், ரமேஷ், ஊராட்சி செயலாளர் மகேஷ்குமார், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
- முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
கிருஷ்ணகிரி,
மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 25 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 24 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த வாகனங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணமாக ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரமும் முன்பணமாக வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். முன்பணம் செலுத்துபவர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி தொகை முழுவதையும் செலுத்தி, வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஓசூரில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்.9498105529 மற்றும் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தொலைபேசி எண் 9498175188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.






