என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது
    • மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜா கடை மாட்டுண்ணி பகுதியில் சின்னதம்பி (வயது 67) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். இவரது மனைவியின் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    சிகிச்சையை முடித்து கொண்டு இருவரும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீடு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து சின்னதம்பி மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னதம்பி வெளியூருக்கு சென்றிருப்பதை மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    பின்னர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா–வில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடை காலத்திற்கு ஏற்ற பயிர் மற்றும் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
    • காலாவதி நாள் மற்றும் விலை விவரம் அடங்கிய ரசீது விவசாயிகளின் கையொப்பம் பெற்று கட்டாயம் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    பதிவுச்சான்று பெறாத விதைக்குவியல்களை விற்பனை செய்யக்கூடாது என தர்மபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 மாவட்டங்களிலும் காய்கறி பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றன.

    இதனால் தற்போது காய்கறி பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் கோடை காலத்திற்கு ஏற்ற பயிர் மற்றும் ரகங்களை தங்கள் பகுதி தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களின் ஆலோசனைப்படி பயிர் செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    விதை விற்பனை யாளர்கள் மற்றும் நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் கோடை காலத்திற்கு ஏற்ற பயிர் மற்றும் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அனைத்து விதை விற்பனையாளர்களும் மற்றும் நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் விவசாயிகளுக்கு உரிய பயிர் ரகம், குவியல் எண், காலாவதி நாள் மற்றும் விலை விவரம் அடங்கிய ரசீது விவசாயிகளின் கையொப்பம் பெற்று கட்டாயம் வழங்க வேண்டும்.

    அரசு சான்று பெறாத அல்லது விதைச்சான்றளிப்புத்துறை மற்றும் அங்ககச்சான்றளிப்புத் துறையினால் வழங்கப்படும் பதிவுச்சான்று பெறாத விதைக்குவியல்களை விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுவோர் மீது தக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிப்படை வசதிகள் குறித்தும், பொது மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
    • பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது,சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், பொது மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    மேலும், பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சினேகா, 22-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது
    • அதனை தடுக்க வந்த ரவியின் மனைவி இந்துமதியை சரமாரியாக 2 பேரும் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அத்திபாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது இந்துமதி (வயது19).

    ரவியின் உறவினர்களான அதேபகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (60), பிரவீன்குமார் (45). இவர்களுக்கும் ரவிக்கும் இடையே பூர்வீக சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ரவியை தாக்க முயன்றனர். அப்போது அதனை தடுக்க வந்த ரவியின் மனைவி இந்துமதியை சரமாரியாக 2 பேரும் தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த இந்துமதியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரவி சிங்காரபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயன், பிரவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • பணிகளை தாமாகவும், விரைந்து முடித்து பயன்பாடுக்கு விட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • உரம் தயாரிக்கும் பணி, மற்றும் பதிவேடுகள், பணியாளர் விவரங்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜூஜூவாடி, ஆனந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 18 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பணிகளை தாமாகவும், விரைந்து முடித்து பயன்பாடுக்கு விட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, விளையாட்டு மைதானத்தில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஏ.எஸ்.டி சி. ஹட்கோவில், ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கட்டிட கட்டுமான பணிகள், குப்பைகளை தாம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி, மற்றும் பதிவேடுகள், பணியாளர் விவரங்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஜூஜூவாடி பகுதியில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்புற நலவாழ்வு மைய கட்டிட கட்டுமான பணிகளையும் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டும், ஆனந்த் நகரில் குப்பை தரம் பிரிக்கும் 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகளையும், குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் மூலப்பொருட்களாக மாற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • நடுகற்கள் தொகுப்பு என்பது இம்மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.
    • 15 -க்கும் அதிகமான அதியமான் நடுகல் தொகுப்பு என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் 10 தொடங்கி 89 நடுகற்கள் வரை இருக்கின்றன .

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் பக்கமுள்ள கூலி சந்திரம் என்ற கிராமத்தில், தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான 89 நடுகற்கள் இருப்பதை அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவை சார்ந்த அறம் கிருஷ்ணன், மஞ்சுநாத், முனிகிருஷ்ணப்பா, ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.

    உலக பாரம்பரிய நாளில் மேற்கொண்ட வரலாற்று பயணத்தில் அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் இவ்விடத்தை கண்டறிந்தனர்.

    தமிழக நடுகற்கள் வரலாற்றில் அதிக நடுகற்கள் இருப்பது மட்டுமில்லாமல் அதிக நடுகற்கள் தொகுப்பு இருப்பதும் கிருஷ்ணகிரி மாவட்டம்தான்.இம்மாவட்டத்தில் 8 -ஆம் நாற்றாண்டு தொடங்கி 18 -ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் தொடர்ச்சியாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கத்திலிருந்து பாரந்தூர் செல்லும் சாலையில், எச்.செட்டிப்பள்ளி வருகிறது இங்கிருந்து வலதுபக்கம் திரும்பி 5 கி.மீ. பயணம் செய்தால் கூலிசந்திரம் என்ற சிற்றூர் வருகிறது.பல ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஊர் பண்டிகைகள் செய்யும் பொது இடத்தில் இந்த 89 நடுகற்களும் சிதறிக்கிடக்கின்றன.இங்கு சிவன் கோயில் ஒன்றும் கட்டபட்டு வருகிறது..

    நடுகற்கள் தொகுப்பு என்பது இம்மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருக்கின்றன.

    ஓசூர் தேர்பேட்டையில் -20, நாகொண்டபள்ளியில் 45 ,பேரிகைக்கு அருகில் சிங்கிரிப்பள்ளியில் -74, தேன்கனிக்கோட்டைக்கு அருகில் உள்ள பிக்கனப்பள்ளியில் -48 ,பாகலூருக்கு அருகில் குடி செட்லுவில் -25, ஓசூர் அருகே கொத்தூரில் -28, ஒன்னல்வாடியில் -24, ஓசூரிலிருந்து தளி போகும் சாலையில் உள்ள உளிவீரனபள்ளியில்-32 ,காவேரிப்பட்டிணம் அருகில் பெண்ணேஸ்வர மடத்தில்-25 க்கும் மேல் நடுகற்கள், சின்னகொத்தூரில் 25- க்கும் மேல், தொகரப்பள்ளிக்கு அருகில் 15 -க்கும் அதிகமான அதியமான் நடுகல் தொகுப்பு என இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் 10 தொடங்கி 89 நடுகற்கள் வரை இருக்கின்றன .

    கூலிசந்திரத்தில் மொத்தமாக 89 நடுகற்கள் இருக்கின்றன இங்கு இருக்கும் அனைத்தும் குரும்பர் இனமக்கள் வழிபடும் 14 ஆம் நூற்றாண்டு தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகற்கள் ஒரே இடத்தில் எந்த வகையான பராமரிப்பும் இன்றி சிதறிகிடக்கின்றன.இங்கு கட்டப்பட்டு வரும் சிவன் கோயிலின் பிராதன வளாகம் சுற்றியும் வரிசையாக வைத்து பராமரிக்கும் நோக்கில் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன. வரலாற்று பொக்கிஷமான இவற்றை பாதுகாக்கும் பொருட்டு அறம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ரூ. 25,000 ஊர் மக்களிடம் வழங்கப்படுள்ளதாக, அறம் கிருஷ்ணன் தெரிவித்தார்

    • நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • பணி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை, 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இது ஒரு இலவச சேவையாகும். இதில் பணி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

    இந்த முகாமில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 10&ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுய விவரங்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தரஊதியம் 1900 ரூபாயாக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளராக அறிவித்திட வேண்டும்.
    • 7500-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரமூர்த்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். இணைச் செயலாளர்கள் மூர்த்தி, கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும். தரஊதியம் 1900 ரூபாயாக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளராக அறிவித்திட வேண்டும். 7500-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திட வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு சம்பளங்கள் வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் 10 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். 

    • மாணவர்கள் கணக்கெடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு சீருடை, புத்தகப்பை, தூய்மை பொருட்கள் வழங்கப்பட்டது

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற, இடம்பெயர்ந்த மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கணக்கெடுப்பு பணிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டுதல்படி நடைபெற்று வருகிறது.

    பெரியகுத்தி பாலா குடியிருப்பு பகுதியில் களப்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் குமார், வைத்தியநாதன், சங்கரன் மற்றும் ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் மாணவர்கள் கணக்கெடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதில் பள்ளியில் இடைநின்ற மாணவி பானுபிரியாவை கண்டறிந்து மாணவியை மேற்பார்வையாளர், வார்டன் தனலட்சுமி உதவியோடு கே.ஜி.பி.வி. பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

    பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு சீருடை, புத்தகப்பை, தூய்மை பொருட்கள் வழங்கப்பட்டது. இடைநின்ற மாணவர்கள் கல்வி தொடர வேண்டும். கல்வி இல்லை என்றால் உலகம் இல்லை என விழிப்புணர்வு எற்படுத்தி கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். 

    • இந்த வருடம் மா விளைச்சல் குறைவு என விவசாயி வேத னையுடன் தெரிவித்தார்.
    • மாமர த்துக்கு செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லை.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மா மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.

    தற்போது மாங்காய் சீசன் துவங்கி உள்ள நிலையில் காவேரிப்பட்டணம் மாங்காய் மண்டிகளுக்கு இருசக்கர வாகனம், டாட்டா ஏஸ், டிராக்டர், மாட்டுவண்டி உள்ளிட்ட வாகனங்களில் மாங்காய் மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த வருடம் மா விளைச்சல் குறைவு என விவசாயி வேத னையுடன் தெரிவித்தார். மேலும் அதற்குரிய விலை கிடைக்கவில்லை. மாமர த்துக்கு செலவு செய்த பணம் கூட கைக்கு வரவில்லை என்று வேதனையுடன் தெரிவி த்தார்.

    செந்தூரா, பையண ப்பள்ளி அல்போன்சா, பெங்க ளூரா, நீளம் உள்ளிட்ட மா வகைகள் தற்போது வரத் துவங்கியுள்ளது.

    தற்போது ஒரு கிலோ செந்தூரா -25, பையண பள்ளி -25, அல்போன்சா -45, சக்கரக்குட்டி- 40, நீளம் -25, பெங்களூரா- 20 விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து மா வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கேசவன் கூறியதாவது கடந்த வருடத்தை ஒப்பிடும் பொழுது இந்த வருடம் மாங்காய் விளைச்சல் 15 சதவீதம் குறைவு.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஈரோடு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் சென்னை போன்ற இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

    இந்த வருடம் மாங்கூழ் தொழிற்சாலையில் இருந்து இந்த வருடம் எங்களுக்கு ஆர்டர் இதுவரை வரவில்லை. அதனால் மாங்காய் விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்பொழுது தான் மாங்காய் சீசன் துவங்கி உள்ளது. போகப்போக தான் விலை ஏற்றம் இருக்குமா இல்லையா என்று தெரியவரும் என கூறினார்.

    • சின்னதம்பி வெளியூருக்கு சென்றிருப்பதை மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
    • சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜா கடை மாட்டுண்ணி பகுதியில் சின்னதம்பி (வயது 67) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். இவரது மனைவியின் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக கடந்த 17-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    சிகிச்சையை முடித்து கொண்டு இருவரும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீடு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து சின்னதம்பி மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னதம்பி வெளியூருக்கு சென்றிருப்பதை மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    பின்னர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்
    • புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவி, மாவட்ட பொருளாளர் சுஜாதா, மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் பார்வதி, கவிதா, ராணி, பழனியம்மாள், மஞ்சுளா, மஞ்சு, பச்சியம்மா, முனியம்மா, ஜெகதா, மாலா, அனிதா, சித்ரா மற்றும் ரோகிணி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினார்கள்.

    தர்ணா போராட்டத்தில், 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் இன்சார்ஜ் பார்ப்பதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்திட வேண்டும். உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×