என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கள்ளத்தொடர்பு காரணமாக பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே சென்னசந்திரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கடந்த 7-ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மது பாட்டில்களும் கிடந்திருந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக அந்த பெண் கொலையாகி இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான பெண், தர்மபுரி அதியமான்கோட்டையை சேர்ந்த பூங்கொடி (40), ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புக்கசாகரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில்தான் பூங்கோதை கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர், போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
    • போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.

    பர்கூர்,

    பர்கூர் போலீசார் பாறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அங்கு தென்னந்தோப்பு ஒன்றில் பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் (38), சங்கரன் (40), நவீன் (25) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை குறித்து போலீசார் கண்காணித்தனர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார் 50 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை செய்த பெத்தனப்பள்ளி சீனிவாசன் (23), மத்திகிரி ஜஸ்டின் (50), ஓசூர் ராயககோட்டை சாலை ஸ்ரீகாந்த் (36) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் 50 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல செய்தனர்.

    • காய்கறிகள், பழங்கள் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் கலெக்டர் சரயு ஆய்வு செய்தார்.
    • மாங்காய் நாளொன்றுக்கு 10-15 டன் அளவிற்கு பதப்படுத்தப்படுனகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் காய்கறிகள், பழங்கள் முதன்மை பதப்படுத்தும் நிலையம் செயல்படுகிறது. இந்த மையத்தில் கலெக்டர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    போச்சம்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் துரித உறைநிலை கூடம், கொதிநீர் மற்றும் நீராவி கொண்டு பதப்படுத்தும் தொழில்நுட்ப அறை, கதிரியக்கத்தின் மூலம் பதப்படுத்தும் அறை, பழுக்க வைக்கும் அறை, குளிர்பதன கிடங்கு, தரம் பிரிக்கும் அறை, எடை மேடை பயன்பாட்டில் உள்ளது.

    முதன்மை பதப்படுத்தும் நிலையம் மற்றும் துரித உறைநிலைக் கூடம் ஆகியவை மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மதிப்பு கூட்டி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே தேங்காய் நாளொன்றுக்கு 6 முதல் 7 மெட்ரிக் டன் வீதம் மதிப்பு கூட்டி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

    500 மெட்ரிக் டன் ஏற்றுமதி

    மேலும், மாங்காய் நாளொன்றுக்கு 10-15 டன் அளவிற்கு பதப்படுத்தப்பட்டு (-40 டிகிரி செல்சியஸ் உறைவெப்பநிலை) ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல கடந்த ஓராண்டாக 500 மெட்ரிக் டன் அளவிற்கு முலாம்பழம் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கதிர்வீச்சு முறை பதப்படுத்துதல் நிலையமானது தற்போது நறுமணப் பொருட்களை பதப்படுத்துவதற்கான உரிமம் பெற்று செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. இதன்மூலம் போச்சம்பள்ளியை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகள், தொழில்முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன் பெற்று வருகின்றனர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் காளிமுத்து, வேளாண்மை அலுவலர் மும்மூர்த்தி சோழன், உதவி வேளாண்மை அலுவலர் குமார், முதன்மை பதப்படுத்தும் மையத்தின் பொறுப்பு அலுவலர் ஜீவானந்தன், கதிரியக்கப் பாதுகாப்பு அலுவலர் சிவந்தன், தாசில்தார் தேன்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ஊத்தங்கரை பகுதியில் குளிர்ந்து காற்றுடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
    • அதிகப்பட்சமாக பெணுகொண்டாபுரத்தில் 29.3,மில்லி மீட்டர் மழை பதிவானது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதியில் குளிர்ந்து காற்றுடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

    அதில் போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழிவு காணப்பட்டது. கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் குளிர்ந்த காற்று மட்டும் வீசியது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில், அதிகப்பட்சம் பெணுகொண்டாபுரத்தில் 29.3, பாம்பாறு அணையில் 19, பாரூரில் 14.06, ஊத்தங்கரையில் 12.14, போச்சம்பள்ளியில் 9.2 மில்லிமீட்டரில் பதிவானது.

    • அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை சோதனை செய்த போது அவர் 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது
    • விசாரணையில் அவரது பெயர் முனுசாமி (28), நல்லாகவுண்டனூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    ஊத்தங்கரை,

    ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை சோதனை செய்த போது அவர் 35 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அவரது பெயர் முனுசாமி (28), நல்லாகவுண்டனூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.
    • 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்தங்கரை,

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மயில் (29). அதே பகுதியை சேர்ந்தவர் பழனி (50). உறவினர்கள். இவர்களின் நிலம் அருகருகில் உள்ளது. இவர்கள் இடையே நில பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.

    இதில் காயம் அடைந்த மயில் கொடுத்த புகாரின் பேரில் பழனி (50), கோகிலா (33), மஞ்சுளா (46) ஆகிய 3 பேர் மீது சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல கோகிலா கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் மயில் (29), சுப்பிரமணி (58), ஜெயா (55), சாந்தி (48) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
    • 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஸ்வரியை சின்னசாமி தரப்பினர் தாக்கினார்கள்.

    மத்தூர்,

    போச்சம்பள்ளி அருகே உள்ள சின்ன பாலேதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (52) உறவினர்கள். இவர்களின் நிலம் அருகருகில் உள்ளது. இவர்களுக்குள் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஸ்வரியை சின்னசாமி தரப்பினர் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சின்னசாமி, செல்வி (35), பரமேஸ்வரி (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • 18 மூன்று சக்கர மின்கல வாகனங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
    • உஷாராணிகுமரேசன் , 18 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவிகளை வழங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி, அத்திப்பாடி, கொண்டம்பட்டி, வெள்ளக்குட்டை, புதூர்புங்கனை உள்ளிட்ட 18 ஊராட்சிகளில் குப்பைகளை கொண்டு செல்வதற்காக, தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில், 45 லட்சம் மதிப்பிலான 18 மூன்று சக்கர மின்கல வாகனங்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் உஷாராணிகுமரேசன் தலைமை வகித்து, 18 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சாவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மிட்டப்பள்ளி சின்னத்தாய், கீழ் மத்தூர் மணிகண்டன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்,தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக, அர.சக்கரபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஒய்.பிரகாஷ் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக, உணவு மற்றும் உணவுப்பொருள் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, திண்டுக்கல்லில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, வேப்பனபள்ளி முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தினமும் மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் என்.தசிராபள்ளி தடத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது25). இவருக்கு மதுக்குடிக்கம் பழக்கம் உள்ளது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் தினமும் அவர் மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

    இந்த நிலையில் தனக்கு இன்னும் திருமணமாகததால் மனவேதனையில் காணப்பட்ட முருகேசன் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ததனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின.
    • பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மைய கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்திருப்பதால் மழை காலங்களில் மழை நீர் கட்டிடத்தினுள் வருவதாக புகார் வந்ததையடுத்து, மேற்கூரை மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது.

    இதையடுத்து நேற்று அங்கன்வாடி மையத்திற்கு வந்த ஒப்பந்ததாரர், அங்கன்வாடி பணியாளர் இல்லாத நிலையில், மேற்கூரையை உடைத்தெடுத்து சென்றுள்ளார். நேற்று இரவு மழை பெய்த காரணத்தால் கட்டிடத்தினுள் இருந்த அனைத்து பொருட்களும் நீரில் நனைந்து சேதமானது. மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின. இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் மேற்கூரை இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அனுமதியின்றி மேற்கூரை எடுக்கப்பட்டது குறித்து ஒப்பந்ததாரரை கேட்டபோது, பணி ஆணை வழங்கப்பட்டதால், பணிகளை தொடங்கி விட்டோம் என மெத்தனமாக பதில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அங்கன்வாடி மேற்பார்வையாளர் மீனா அவர்களிடம் கேட்டபோது, புளியம்பட்டியில் செயல்பட்டும் வரும் இந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் இரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒப்பந்ததாரர் குழந்தைகள் மைய பணியாளரிடம் தெரிவித்துவிட்டு மேற்கூரையை எடுத்துள்ளார். பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். தற்போது 15 குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

    ×