என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சந்திரப்பா என்பவரின் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் புள்ளிமான் நேற்று இரவு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
    • கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மானை கிராம மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி காப்பு காட்டில் அதிக அளவில் மான்கள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் காப்பு காட்டில் இருந்து இரை தேடி வெளியே வந்த 3 வயதுடைய புள்ளிமான் நேற்று இரவு தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தில் சந்திரப்பா என்பவரின் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தளி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனவர் ஆனந்த், வனகாப்பாளர் கார்த்திக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மானை கிராம மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர். அந்தமானை வனசரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின் தளி காப்பு காட்டில் விட்டனர்.

    • கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவராமப்பா (51) விவசாயி. மேலும் இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில், பசுமாடுகள் தீவனத்திற்காக புற்களை அறுத்து காரில் ஏற்றி வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஜுஜு வாடியில் உள்ள மயானம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், காரை வழிமறித்து, அவரை வெளியே இழுத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒசூர் சிப்காட் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிவராமப்பாவுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாபு என்கிற ராமகிருஷ்ணன், நாராயணசாமி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதற்காக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது என்பது தெரியவந்தது.

    தனது தந்தையை நிலத்தகராறு காரணமாக பாபு என்கிற ராம கிருஷ்ணன், நாராயணசாமி ஆகிய 2 பேரும் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிவராம் மகன் மாதுகுமார் போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    • முருகேசன் மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரிடம் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டார்.
    • மஞ்சுநாத் தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மஞ்சுநாத் (வயது21).

    டிராக்டர் டிரைவரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் (39), நாகராஜ் (27) ஆகியோர் சேர்ந்து நடத்தி வந்த நர்சரி கார்டனில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் முருகேசன் மற்றும் நாகராஜ் ஆகிய 2 பேரிடம் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து சம்பவத்தன்று முருகேசன், நாகராஜ் ஆகியோர் சேர்ந்து மஞ்சுநாத்திடம் தகராறு செய்தனர்.

    அப்போது ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து அரிவாளால் மஞ்சுநாத்தை வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து, வலது கையில் வெட்டு விழுந்து காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து மஞ்சுநாத் தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் நாகராஜை கைது செய்தனர்.

    • அரசால் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, திட்டம் நிறைவேற்றாமல் எப்படி கைவிட முடியும் என கேட்டனர்.
    • பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் நகராட்சி எல்லைக்குட்பட்ட போகனப்பள்ளி கிராமத்தில், 60 அடி அகல சாலை அமைப்பதற்காக தனியார் பள்ளி அருகே ஒதுக்கப்பட்ட நிலத்தில், அத்திட்டத்தை செயல்படுத்தாததால், திட்டம் கைவிடப்படுவதாக முதல் தீர்மானம் இயற்றப்பட்டது.

    இதற்கு சில தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜ., கவுன்சிலர் சங்கர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரசால் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, திட்டம் நிறைவேற்றாமல் எப்படி கைவிட முடியும் என கேட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    இதில் பதில் அளித்து நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:-

    கடந்த, 1994-ம் ஆண்டு நகர் ஊரமைப்பு துறை மூலம் கண்டறியப்பட்ட கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட இடங்கள் சாலை விரிவு அபிவிருத்தி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு, அரசிதழிலும் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் அங்கு நடக்கவில்லை.

    அரசு அறிவித்து மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலத்திற்கான தொகையை நில உரிமையாளர்கள் தரப்பில் வழங்காமலோ, அறிவிக்கப்பட்ட பணிகள் செய்யவில்லை என்றாலோ அந்த திட்டம் காலாவதி ஆகி விடும். அந்த அடிப்படையில் தற்போது அத்திட்டம் நடப்பதற்கு சாத்தியம் இல்லாததால் கைவிடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதை அவர்கள் ஏற்காமல் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

    அதேபோல கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனை அகற்றுவது, கிருஷ்ணகிரி நகராட்சி அருகில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைகள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் செயற்பொறியாளர் சேகரன், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விலங்குகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நாடகம் தொட்ட பூவத்தியில் நடைபெற்றது.
    • காடுகளை பாதுகாப்பதால் உள்ள நன்மைகள், வன விலங்குகளால் உள்ள நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள்.

    குருபரப்பள்ளி,  

    ஓசூர் வனக்கோட்டம் ராயக்கோட்டை வனச்சரகம் சார்பில் காடுகளை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நாடகம் தொட்ட பூவத்தியில் நடைபெற்றது.

    இதில் புதுகுரல் கலைக்குழுவை சேர்ந்தவர்கள் நாடகம் நடத்தி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.

    காடுகளை பாதுகாப்பதால் உள்ள நன்மைகள், வன விலங்குகளால் உள்ள நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள். இதில் ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம், வனவர்கள் சரவணன், செந்தில்நாதன், வன காப்பாளர் புட்டுகான், வன குழு தலைவர் சென்னப்பன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி கோவிந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர் மனோகரன், மாரப்பன், கோவிந்தராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 5-ம்தேதி காலை, பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை.
    • திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்றதாக போலீசில் பெண்ணின் தாய் புகார் தெரிவித்திருந்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை தாலுகா, கொப்பக்கரை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி.

    இவர் ராயக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 5-ம்தேதி காலை, பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தார்.

    பின்னர், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் ராயக் கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த பாலாஜி (23) என்பவர், திருமண ஆசை காட்டி தனது மகளை கடத்தி சென்றதாக தெரிவித்திருந்தார்.

    அதன் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஷ்வரி வழக்குபதிவு செய்து, இருவரையும் வலைதேடி தேடி வந்தனர்.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே இருவரையும் கண்டுபிடித்து விசாரனை செய்ததில் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலாஜி கடத்தியது தெரியவந்தது. அவரை நீதிமண்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். அறிவுரை கூறி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    • அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
    • தடை செய்யப்பட்ட 156 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் அருகே ஜூஜூவாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 156 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் அந்த வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது22) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர்.

    • அங்குள்ள சாலையை குடிபோதையில் கடக்க முயன்ற போது தவறி விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் எம்.ஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது44). இவர் அங்குள்ள சாலையை குடிபோதையில் கடக்க முயன்ற போது தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பாம்பாறு அணையில் குளித்து கொண்டிருந்தார்.
    • ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி 

    சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது28). இவர் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பாம்பாறு அணையில் குளித்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

    இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட துர்கா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஏ.ஜெட்டிஅள்ளி அடுத்துள்ள அலசபள்ளி பகுதியை சேர்ந்தவர் அஜித். இவரது மனைவி துர்கா (வயது25). இவர் பெங்களூருவில் மருத்துவக்கல்லூரியில் லேப் டெக்னிசியன் படித்து வந்தார்.இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் இருவரும் தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் மனமுடைந்து காணப்பட்ட துர்கா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்சிக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    ஓசூர், ஜூலை. 8-

    ராகுல் காந்தி மீது 2019- ஆம் ஆண்டில் போடப்பட்ட அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்த மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    இதனை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்சிக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாநில செயலாளர் வீரமுனிராஜ், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மாநகர துணைத்தலைவர் சிவப்பா ரெட்டி மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
    • மாவட்ட துணை தலைவர் ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி, ஜூலை.8-

    கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.

    அவதூறு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட துணை தலைவர் ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச் செயலாளர் அப்சல் வரவேற்றார்.

    கவுன்சிலர் விநாயகம், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் அர்னால்டு, மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர்கள் மாரியப்பன், விஜயராஜ், ஓ.பி.சி., மாவட்ட தலைவர் ஹாஜித் பாஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷபிக் அஹமத், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட மனித உரிமைத்துறை தலைவர் நாகராஜ், அஜிசுல்லா, இளைஞர் காங்கிரஸ் நசீம் இர்பான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×