என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டம் தலைவர் பரிதா நவாப் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம். அருகில் ஆணையாளர் வசந்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி நகராட்சி கூட்டத்தில் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு
- அரசால் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, திட்டம் நிறைவேற்றாமல் எப்படி கைவிட முடியும் என கேட்டனர்.
- பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை தாங்கினார். ஆணையாளர் வசந்தி முன்னிலை வகித்தார்.
இதில் நகராட்சி எல்லைக்குட்பட்ட போகனப்பள்ளி கிராமத்தில், 60 அடி அகல சாலை அமைப்பதற்காக தனியார் பள்ளி அருகே ஒதுக்கப்பட்ட நிலத்தில், அத்திட்டத்தை செயல்படுத்தாததால், திட்டம் கைவிடப்படுவதாக முதல் தீர்மானம் இயற்றப்பட்டது.
இதற்கு சில தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் பா.ஜ., கவுன்சிலர் சங்கர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசால் சாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, திட்டம் நிறைவேற்றாமல் எப்படி கைவிட முடியும் என கேட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதில் பதில் அளித்து நகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:-
கடந்த, 1994-ம் ஆண்டு நகர் ஊரமைப்பு துறை மூலம் கண்டறியப்பட்ட கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட இடங்கள் சாலை விரிவு அபிவிருத்தி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு, அரசிதழிலும் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த பணியும் அங்கு நடக்கவில்லை.
அரசு அறிவித்து மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலத்திற்கான தொகையை நில உரிமையாளர்கள் தரப்பில் வழங்காமலோ, அறிவிக்கப்பட்ட பணிகள் செய்யவில்லை என்றாலோ அந்த திட்டம் காலாவதி ஆகி விடும். அந்த அடிப்படையில் தற்போது அத்திட்டம் நடப்பதற்கு சாத்தியம் இல்லாததால் கைவிடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதை அவர்கள் ஏற்காமல் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் பெரும்பான்மை கவுன்சிலர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது.
அதேபோல கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் சாலைகளின் நடுவே வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனை அகற்றுவது, கிருஷ்ணகிரி நகராட்சி அருகில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைகள் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் செயற்பொறியாளர் சேகரன், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






