என் மலர்
கிருஷ்ணகிரி
- அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.
- எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம் சாலையில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் 2006-ம் ஆண்டு அப்போதைய துணை முதல் அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், சமத்துவபுரத்தை திறந்து வைத்து 100 பேருக்கு வீட்டின் சாவியை வழங்கினார். ஆனால் 18 ஆண்டுகள் முடிந்தும் பட்டா வழங்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சமத்துவ புரங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளி சமத்துவபுரத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.
வீட்டில் புதிய அறைகள் அமைக்கவும், பாகங்கள் பிரிக்கவும், பட்டா தேவைப்படுகிறது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் வாரிகளுக்கு வாரிசு சான்றுடன் பட்டா தேவைப்படுகிறது. எங்கள் பகுதியில் ரேஷன் கடை, சுற்றுச் சுவர், சாக்கடை கால்வாயும் இல்லை. எனவே பட்டா வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தண்ணீர் கொதிக்க, கொதிக்க இருந்தால் பலத்த காயமடைந்த ரூபேஷ்குமார் வலியால் அலறி துடித்தார்.
- அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
பீகார் மாநிலம் பகவான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபேஷ்குமார் (வயது23). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெலத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எந்திரம் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் அங்குள்ள ஒரு எந்திரத்தின் உதிரிபாகங்களை சுத்தம் செய்வதற்காக சுடுதண்ணீர் நிரம்பிய கலனுக்கு எடுத்து சென்றார்.
அப்போது அந்த சுடுதண்ணீர் கலனில் தவறிவிழுந்தார். அதில் தண்ணீர் கொதிக்க, கொதிக்க இருந்தால் பலத்த காயமடைந்த ரூபேஷ்குமார் வலியால் அலறி துடித்தார்.
உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு நேரங்களில் குறிப்பாக மழை காலங்களில் அந்த வழியாக வரும் கார் போன்ற வாகனங்கள், சாலையின் நடுவே தடுப்பு இருப்பது அறியாமல் அதன் மீது மோதுவது தொடர்கதையாகி வருகிறது.
- அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணம் செய்த தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூவரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தை சாலையில், தாலுக்கா அலுவலகம் பகுதியில் சாலையின் நடுவே தடுப்பு உள்ளது.
இரவு நேரங்களில் குறிப்பாக மழை காலங்களில் அந்த வழியாக வரும் கார் போன்ற வாகனங்கள், சாலையின் நடுவே தடுப்பு இருப்பது அறியாமல் அதன் மீது மோதுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, இரவில் அந்த வழியாக வந்த கார், தாலுக்கா அலுவலகம் எதிரே தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த பெங்களூரை சேர்ந்த 3 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதே போல், நேற்றும் இரவு அதே இடத்தில் ஒரு கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்கவர் மீது மோதி நின்றது.
அதிர்ஷ்டவசமாக அந்த காரில் பயணம் செய்த தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை ஆகிய மூவரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கெலமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் கலா தலைமை வகித்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டாரம் ஜெக்கேரி கிராமத்தில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் சார்பில் காலஜதா கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கெலமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் கலா தலைமை வகித்தார்.ஜெக்கேரி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலையில் ஜெகதேவி விநாயகா கோலாட்ட கலை குழு பங்கேற்று வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், சொட்டு நீர் பாசனம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் அட்மா திட்டம் பற்றி கலைநிகழ்ச்சியின் மூலம் எடுத்து கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் கீதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலையில் காளேஸ்புரம் பகுதியில் தனியார் லேஅவுட் பகுதி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், நள்ளிரவில் 4 மர்ம நபர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஒவ்வொரு வீட்டின் வாசல் கதவையும் தட்டியதாகவும், மறுமுனையிலிருந்து வீட்டில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதை அடுத்து, அந்த மர்ம நபர்கள் நைசாக நழுவி சென்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அந்த நபர்கள், பூட்டியிருந்த வீடுகளை நோட்டம் விட்டுள்ளனர் இதில், சந்தோஷ்குமார் (29) என்ற தனியார் நிறுவன ஊழியரின் பூட்டியிருந்த வீட்டுக்குள் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், உள்ள பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிக் கொலுசை கொள்ளை பிடித்தனர்.
பின்னர் அருகில் உள்ள பிச்சாண்டி என்பவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள லே அவுட் அலுவலகத்திலும் புகுந்து, உள்ளே சூறையாடியிருப்பதாக தெரிகிறது.
மர்ம நபர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளின் முன்பு நடமாடுவது, அந்த 4 பேரில், 3 பேர் முகமூடி அணிந்திருப்பது ஆகியவை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
நள்ளிரவில், அடுத்தடுத்து நடந்த இக்கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அந்த குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு வசதிகள் இல்லை, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதான சாலையிலிருந்து லேஅவுட் உள்ளே செல்லும் பகுதியில், தெருவிளக்கு வசதி இல்லாததால், மதுப்பிரி யர்கள் கும்பலாக மது அருந்துவதாகவும், மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இதனால், வெளியே செல்லவே அஞ்சும் நிலை உள்ளது என குடியிருப்பு மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
மேலும் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அங்கு நேரில் சென்று, அச்சத்துடன் காணப்பட்ட குடியிருப்பு மக்களுக்கு ஆறுதல் கூறி, தைரியமூட்டினார்.
அப்போது குடியிருப்பு மக்கள், தங்கள் குறைகளை கூறி, அவரிடம் முறையிட்டனர். இது சம்பந்தமாக, ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி, தெருவிளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தர, ஏற்பாடு செய்வதாக பாலகிருஷ்ண ரெட்டி, உறுதியளித்தார்.
- சந்து கடைகளில், மது விற்கப்படுவதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
- 2 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காவேரிப்பட்டணம், கே.ஆர்.பி., டேம் சாலை, சாப்பாணிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சந்து கடைகளில், மது விற்கப்படுவதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். இதில் கே.ஆர்.பி., டேம் சாலை, சாப்பானிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஒரு வீடு மற்றும் கடையில் மது பாட்டில்கள் விற்ற ராஜி (வயது 36), சப்பாணிப்பட்டி சின்னதம்பி (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வாய்பேச முடியாத, காது கேளாத, 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றார்.
- சிறுமியிடம், திம்மராயன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த தக்கட்டி காலனியைச் சேர்ந்தவர் திம்மராயன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10.03.2010 அன்று அஞ்செட்டி அருகே உறவினர் வீட்டிற்கு சென்றார்.
அந்த பகுதியைச் சேர்ந்த, வாய்பேச முடியாத, காது கேளாத, 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றார்.
அப்போது எதிரில் வந்தவர்கள் இது குறித்து கேட்ட போது, சிறுமியை அவரது தாயிடம் அழைத்துச் செல்கிறேன் எனக்கூறி சென்றார்.
அங்குள்ளவர்கள் சந்தேகமடைந்து, பின் தொடர்ந்து சென்று பார்க்கும் போது சிறுமியிடம், திம்மராயன் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திம்மராயனை அஞ்செட்டி போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மராயனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராத தொகையை கட்டாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.
- எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
- பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சுள்ளிகுட்டையை அடுத்த பெரியசப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் (வயது60). தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று சப்படி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டில் தற்போது கரீப் பருவத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.
- ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் வேளாண் பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
உரிமம் பெறாத நாற்று பண்ணைகளில் நெல் அல்லது காய்கறி நாற்றுகளை வாங்க வேண்டாம் என, தருமபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தற்போது கரீப் பருவத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர். ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் வேளாண் பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்ய, நாற்று விடும் பணிகள் நடந்து வருகிறது. நெல் நடவு செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறையின் மூலம் உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையத்திலோ விதைகளை வாங்கவும், வாங்கும்போது பருவத்திற்கு ஏற்றதா என்பதை உறுதி செய்தபின் வாங்கவும்.
உரிமம் பெறாத எந்த ஒரு நாற்று பண்ணையிலும் நெல் அல்லது காய்கறி நாற்றுகளை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இரண்டாம் கட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையும் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
- விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி காமராஜர் நகர் ஊரக வாழ்வாதார அலகு அலுவலகம், துறிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி நேதாஜி சாலையில் உள்ள கே.எஸ்.ஆர் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் முகாமை தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையும் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அடடை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட்ட அனைத்து முகாம் நடைபெறும் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- தேன்கனி க்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசினார்.
தேன்கனிக்கோட்டை,
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தேன்கனி க்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசினார்.
மாநில செயலாளர் அன்வர், பொதுக் குழு உறுப்பினர் சீனிவாசன், நகர தலைவர் பால்ராஜ், முன்னாள் நகர தலைவர் தாஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் மஞ்சு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆதாம், லாசர், சண்முகம், துரை, அஜ்மல், முகமது நூருல்லா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.






