என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது50). அதே பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (38), ஆகிய இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மஞ்சமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் தவறி சாலையில் விழுந்தனர். இதில் வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து பாரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பதவி பிரமா ணம் செய்து வைத்தார்.
    • பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் 2023-2024-ம் ஆண்டிற்கான மாணவ தலைமை பதவியேற்பு விழா நடைபெற்றது.

    இதில் வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பதவி பிரமா ணம் செய்து வைத்தார்.

    பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு முழுவதும் பதவியில் இருந்து ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி கல்வி, ஒழுக்கம், விளையாட்டு என அனைத்து பிரிவு களிலும் தத்தம் குழு மாண வர்களை வழி நடத்துவர்.

    வருட இறுதியில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் குழுவிற்கு சுழற்கோப்பை வழங்கப்படும்.

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தோஷ், அருண் மற்றும் பவித்ரா செய்திருந்தனர்.

    • தொடர்ந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து வந்தால், நெல் விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் சூழ்நிலை ஏற்படும்.
    • இந்தியாவிலும் உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் உள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று தமிழக நெல் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மத்திய அரசு அரிசியை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ததை கண்டிக்கிறோம். உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டங்களுக்கு, மிக சன்ன அரிசியாக, பாஸ்மதி அரிசியாக, சன்னமற்ற அரிசியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

    தற்போது உலக அளவிலே அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு பல நாடுகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, வெளிநாடு களுக்கு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொடர்ந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து வந்தால், நெல் விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் சூழ்நிலை ஏற்படும். இதனால் இந்தியாவிலும் உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

    இன்னும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தியா விலும் குறைவான விலைக்கு உணவுகள் கிடைக்கும். அதன்பிறகு மற்ற நாடுகளுக்கு என்ன நிலைமையோ, அதே நிலைமை தான் இந்தியா வுக்கு கட்டாயமாக வந்தே தீரும். எனவே, மத்திய அரசு உடனே அரிசி ஏற்றுமதி உண்டான தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    இந்த கூட்டத்தில், மாநில மகளிரணி தலைவி பெருமா, மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், வரதராஜ், கண்ணய்யா, மாவட்ட இளைஞரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அனுமந்தராசு, மாநில ஆலோசகர் நசீர்அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    • பயிற்சியில் கலந்துகொள்ப வர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.140 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டப்பணி யாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அரசு தோட்டக்கலைப் பண்ணை திம்மாபுரம் மற்றும் ஜீனூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. தோட்டம் அமைத்தல், அலங்கார தாவரங்களை கொண்டு நில எழிலூட்டுதல் ஆகிய பணிகளில் ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி முடிவின் போது பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியானது 49 தோட்டப் பணியாளர்களுக்கு 25 நாட்கள் கால அளவை கொண்டு வழங்கிடும்படி திட்ட வழிகாட்டி நெறிமுறை பெறப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி இப்பயிற்சியானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

    இதில் நிலமற்ற தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    மேலும், பயிற்சியில் கலந்துகொள்ப வர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.140 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் இந்த பயிற்சியில் கலந்துகொள்ள தேவையான செயல்விளக்க உபகரணங்கள் மற்றும் பயிற்சி பொருட்கள் ஆகியவை வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் ஆதார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு அட்டை நகல், 8-ம் வகுப்பு கல்வித்தகுதிச் சான்று ஆகிய ஆவணங் களுடன், அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவ, மாணவிகள் அனைவரும் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை கற்றிட வேண்டும்.
    • வெற்றி கோப்பை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி, 

    தேசிய அளவில் சேலத்தில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் திருமலை வாசன் 11 வயதிற்கு உட்பட்ட வர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவரை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார். அவர் பேசுகையில் தற்காப்பு கலை என்பது கடினமான சூழ்நிலையில் தங்களை தற்காத்து கொள்ளவும், மன திடத்தை வலுப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும் செய்யும். ஆகவே மாணவ, மாணவிகள் அனைவரும் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை கற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    வெற்றி கோப்பை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற பாரத் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா, கராத்தே பயிற்சியாளர் மாரியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி னார்கள்.

    • நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும்.
    • மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி நகர் பகுதியில் கடந்த, 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோர குப்பைகள் மழைநீருடன் கலந்து மழைநீர் கால்வாயில் அடைப்பு களுடன் ஆங்காங்கே தேங்கி நின்றது. இது குறித்து பொதுமக்கள் அளித்த புகார்படி நேற்று கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் மழைநீர் கால்வாய் தூர் வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

    அவருடன் நகராட்சி ஆணையாளர் வசந்தி, உடன் இருந்தார்.

    பின்னர் நகராட்சி தலைவர் பரிதா நவாப் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சி யில் உள்ள சாக்கடைக் கால்வாய்கள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல இடங்களில் சாலை மேடாக உள்ளதால் கால்வாய்கள் பல இடங்களில் மிகவும் பள்ள மாகவும், ஆபத்தாகவும் உள்ளது. எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் சாக்கடைக் கால்வாயை புதிதாக உயர்த்திக் கட்ட வேண்டும். குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்.

    இதற்காக 100 கோடி ரூபாயும், மீதமுள்ள பாதாள சாக்கடைக் கால்வாயை அமைக்க 75 கோடி ரூபாயும், சாலை அமைக்க 30 கோடி ரூபாயும், புதிய பஸ் நிலையம் அருகில் திருமண மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்ட 50 கோடி ரூபாயும் என மொத்தம் 255 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க ப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தி.மு.க., நகர செயலாளர் நவாப், நகர் மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • காலை, மாலை என இரு நேரமும் டவுன் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.
    • பள்ளி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு பள்ளிகளுக்கு சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் இருந்து மாணவ, மாணவிகள், காலை, மாலை என டவுன் பஸ்களில் வந்து படித்து விட்டு செல்கின்றனர்.

    மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களும் டவுன் பஸ்களையே நம்பியுள்ளனர். இதனால் காலை, மாலை என இரு நேரமும் டவுன் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது.

    அதனால் பள்ளி மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    மகளிருக்கு இலவசம் என்பதால் அவர்கள் வேறு பஸ்களில் செல்லாமல் இதே பஸ்களில் சென்று வருகின்றனர்.

    எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கு சென்று வரும் நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்களை விட மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.
    • இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக, சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தொப்பையாறு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் ஓசூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த குப்புசாமி (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, டெஸ்க்குகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பெஞ்ச், டெஸ்க்குகளை மாணவர்களுக்கு வழங்கி பேசினார்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 305 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    ஆனால் போதிய மேசை, டெஸ்க் வசதியின்றி மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர். இதையடுத்து பள்ளியின் சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ.விடம் பெஞ்ச், டெஸ்க் வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    இதையடுத்து தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, டெஸ்க்குகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பெஞ்ச், டெஸ்க்குகளை மாணவர்களுக்கு வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் மஞ்சுளா, துணைத் தலைவர் நாராயணகுமார், கவுன்சிலர் மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ்குமார், ஆவின் தொழிற்சங்க மாநில துணைத் தலைவர் அருணாசலம், கூட்டுறவு முன்னாள் தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டிற்குட்பட்ட சென்னத்தூர் பகுதியில், மாநகராட்சியின் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில், மாநகராட்சி கவுன்சிலர் புருஷோத்தம ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெங்களூரிலிருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு லாரியை போலீசார் சோதனை செய்த போது அதில் ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.
    • அந்த மதுபான பாட்டில் பாரம் அடங்கிய லாரியை போலீசார் கைப்பற்றி பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே கக்கனூர் சோதனைச் சாவடியில், பாகலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக பெங்களூரிலிருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு லாரியை போலீசார் சோதனை செய்த போது அதில் ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்தது தெரிய வந்தது.

    இந்த மதுபானங்கள் சென்னை அம்பத்தூருக்கு தனியார் சார்பில் கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்தது. மேலும் அதை கொண்டு வந்ததற்கான ஆவணங்களும் சரியான முறையில் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து, அந்த மதுபான பாட்டில் பாரம் அடங்கிய லாரியை போலீசார் கைப்பற்றி பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில், மதுபான பாட்டில் ஏற்றி வந்த லாரி போலீசாரிடம் பிடிபட்ட தகவல் அறிந்து, ஓசூர் ஆயத்தீர்வை துறை அதிகாரி சிதம்பரம், பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று, பிடிபட்ட மதுபான பாட்டில்களுக்கு உரிய வரியை, தனியார் செலுத்திவிட்டனர் என்று கூறி, அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், மாலையில் அந்த மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி விடுவிக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் தற்போது கூடுதல் பணிகளாக தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது, 10 முதல் 15 வருடம் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 15 முதல் 20 வருடம் பழமையான கட்டிடங்களுக்கு ரூ.4 லட்சமும், 20 வருடங்களுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு ரூ.6 லட்சமும் மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

    கலெக்டர் தலைமையிலான குழுவால் பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்து கொள்ள ஏதுவாக தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண் 11) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×