என் மலர்tooltip icon

    கரூர்

    • குளித்தலை அருகே மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யபட்டார்
    • வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார்

    கரூர்,

    குளித்தலை அடுத்த உடையாபட்டியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 30). லாரி டிரைவர். இந்நிலையில் கடந்த 15 -ந் தேதி இரவு வின்சென்ட், இவரது தந்தை மரியதாஸ் (73), தங்கை டைசி ராணி (29) ஆகியோர் நிலபிரச்சனை காரணமாக தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே மரியதாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் வின்சென்ட் வயிற்றில் குத்தியுள்ளார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் வின்சென்ட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வின்சென்ட் மனைவி யோகம்மேரி தோகைமலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மரியதாஸை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள டைசி ராணியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.71.55 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது
    • இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

    கரூர்,

    கரூர் அருகே சாலைப்புதூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வாரந்தோறும் கரூர் ஒன்றியம் க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.19-க்கும் சராசரியாக ரூ.23.51 என மொத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனையானது.தேங்காய் பருப்பு முதல் தரம் கிலோ அதிகபட்சமாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்சமாக ரூ.74.30-க்கும், சராசரியாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.

    2ம் தரம் தேங்காய் பருப்பு அதிக பட்சமாக கிலோ ரூ.77.86-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.39-க்கும், சராசரியாக ரூ.73.16 என மொத்தம் 13 லட்சத்து 57 ஆயிரத்து 532 ரூபாய்க்கு விற்பனையானது.தொடர்ந்து 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ அதிகபட்சமாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.139.99-க்கும், சராசரியாக ரூ.155-க்கு விற்பனையானது. வெள்ளை எள் கிலோ அதிகபட்சமாக ரூ.158.99-க்கும் குறைந்தபட்சமாக ரூ.158.99-க்கும், சராசரியாக ரூ.158.99 என மொத்தம் 56 லட்சத்து 42 ஆயிரத்து, 684 ரூபாய்க்கு விற்பனையானது. வேளாண் பொருட்கள் மொத்தம் 71 லட்சத்து 55 ஆயிரத்து 181 ரூபாய்க்கு விற்பனையானது.

    • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்,

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி சிலைக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கொரோனாவுக்கு பின்னர் பழையபடி பக்தர்கள் வருவார்கள் என தொழிலதிபர்கள் எதிர்பார்த்தனர்.
    • நிலத்தை வாங்கிய கரூர் தொழில் அதிபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் சாமியாரை துரத்த முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது.

    கரூர்:

    கரூரைச் சேர்ந்த 2 டெக்ஸ்டைல் தொழில் அதிபர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அரவக்குறிச்சி அருகாமையில் உள்ள பெரிய தொப்பார்பட்டியில் 4 ஏக்கர் நிலம் வாங்கினர். அப்போது அந்த ஊர் மக்கள் டெக்ஸ்டைல் தொழில் தொடங்குவார்கள், நமது கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி இருந்தனர்.

    ஆனால் சில மாதங்கள் கழித்து அந்த இடத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டது. பின்னர் குதிரை சிலை, கருப்பு சாமி சிலை ஆகியவற்றை அங்கு நிறுவி வெள்ளிக்கிழமைகளில் கிடா வெட்டி பூஜை செய்தனர். இதில் பங்கேற்க சுற்று வட்டார பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான ஆண்களும், பெண்களும் பூஜைக்கு சென்றனர்.

    அப்போது ஒரு பெண் சாமியார் கருப்பு சாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். வாட்ட சாட்டமாக இருந்த அந்த பெண் சாமியாரை பற்றிய விபரங்கள் எதுவும் கிராம மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிடா விருந்து பரிமாறப்பட்டது. அது மட்டுமில்லாமல் மறு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வாருங்கள், கிடா விருந்து சாப்பிட்டு செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து அடுத்த வெள்ளிக்கிழமையும் கிராம மக்கள் கிடா விருந்து ஆசையால் சென்றனர். ஆனால் அடுத்த வாரம் சென்றபோது பெண் சாமியாரின் தோற்றம் மாறி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கருப்பு சேலை கட்டி, ஆணி செருப்பை அணிந்து கொண்டு ஒரு கையில் பெரிய அரிவாளும், மற்றொரு கையில் சுருட்டும் வைத்துக் கொண்டு ஆவேசமாக நிற்பதைக் கண்டு வெல.. வெலத்து போனதாக பூஜையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, பொதுமக்களை பார்த்து நாக்கை துருத்தி துருத்தி ஆத்தா கிட்ட வாங்கடா என அந்த பெண் சாமியார் அலறவும், நாங்கள் பயந்து ஓட பார்த்தோம். அங்கிருந்த சாமியாரின் ஆட்கள் எங்களை பார்த்து பயப்படாதீர்கள், ஆத்தா உங்களுக்கு இலவசமாக அருள்வாக்கு சொல்லத்தான் கூப்பிடுகிறது என்றார்கள். அன்றைக்கும் ருசியாக கிடா விருந்து கிடைத்தது.

    இந்த விஷயம் ஊருக்குள் பரவ தொடங்கியதும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கூட்டம் குவிய தொடங்கிவிட்டது. நாட்கள் செல்லச்செல்ல பெண் சாமியாரின் சுயரபம் தெரிய வந்தது. ஆத்தாளுக்கு ரம் பாட்டில், அதிலும் ஓல்ட் மங்க் புல் ரம் பாட்டில் வாங்கி வாங்கடா... என பக்தர்களிடம் கேட்கத்தொடங்கினார்.

    அவரின் அருள்வாக்கு ஒரு சிலருக்கு பலிக்கவே சுருட்டு, சரக்கு பற்றி பக்தர்களும் கண்டுகொள்ளவில்லை. கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து வந்தனர். இதனால் அங்கு பாட்டில்களும், பணமும் கொட்டோகொட்டென்று கொட்டத் தொடங்கியது. இதையடுத்து நிலத்தை வாங்கிய தொழில் அதிபர்கள் அந்த பெண் சாமியாருக்கு ஜீப் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதில் கம்பீரமாக ஏறி உட்காந்து அவர் வலம் வந்தார். மேலும் வசூல் ஆகும் தொகையில் ஒரு பங்கை மட்டும் சாமியாருக்கு கொடுத்துவிட்டு மீதம் தொகையை அவர்கள் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு 4, 5 ஆண்டுகள் பெண் சாமியாரும், அந்த நிலத்தின் உரிமையாளர்களும் குஷியாக இருந்தனர்.

    இந்த நிலையில் 2020-ல் கொரோனா வைரஸ் தாக்கியதும் பக்தர்கள் வருகை நின்றுவிட்டது. கொரோனாவுக்கு பின்னர் பழையபடி பக்தர்கள் வருவார்கள் என தொழிலதிபர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. வெள்ளிக்கிழமைகளில் ஐந்தாறு பேர் மட்டுமே வருகை தருகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து நிலத்தை வாங்கிய கரூர் தொழில் அதிபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் சாமியாரை துரத்த முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சாமியார் என்னை முதலீடா வச்சு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து விட்டு இப்ப என்னையே காலி பண்ண சொல்றீங்களாடா? நான் நினைத்தேன் என்றால் உங்களை காலி பண்ணிடுவேன் என்று பேசி உள்ளார்.

    அதைத்தொடர்ந்து சாமியார் தரப்புக்கும், நிலத்தை வாங்கிய தொழிலதிபர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் பெண் சாமியாரை செல்வந்தர்கள் சிலர் ஆதரிப்பதால் கரூர் தொழிலதிபர்கள் செய்வது அறியாமல் திகைத்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பெண் சாமியார் கூறும் போது, நான் குறி சொன்னபோது வருமானம் கொட்டியது, அப்போது அவர்களுக்கு இனித்தது. கூட்டம் இல்லை என்றவுடன் என்னை துரத்த பார்க்கிறார்கள். இந்த இடத்தின் விலைக்கு மேலேயும் சம்பாதித்து கொடுத்து விட்டேன். இடத்தை காலி பண்ண முடியாது. முடிந்ததை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என ஆவேசமாக கூறினார்.

    இந்த விவகாரத்தால் அந்த பெண் சாமியாரின் விவகாரம் அரவக்குறிச்சி பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

    • கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கபடும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள், கள் இறக்கி விற்பனை செய்பவர்கள், வெளிமாநில மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் பற்றிய தகவல்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 9498100780, 04324-296299 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    • கரூர் பகுதியில் மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாபேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்ற மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (வயது55), நதியா (35), கிருஷ்ணமூர்த்தி (51), மதிவாணன் (55), வேங்கம்பட்டி செல்வராஜ் (38), பழைய ஜெயங்கொண்டம் ராஜூ (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் (54), மலர் (43), மேலும் மாயனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணவாசி கந்தசாமி (46), கீழடை முத்துசாமி (71), மாணிக்கபுரம் தங்கவேல் (59), சின்னகிணத்துப்பட்டி கோபால் (47) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கரூர் மாவட்ட விவசாயிகள் பூ சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது

    கரூர்,

    கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கொண்டை, செண்டு மல்லி, விரிச்சிப் பூ, ரோஜா ஆகிய பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பூக்களை பறித்து கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதாலும், தொடர்ந்து திருமண முகூர்த்தம் இருப்பதாலும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் தாலுகாவுக்குட்பட்ட சோமூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70), விவசாயி. இவர் சோமூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் முத்துசாமியின் கால் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முனியப்ப சுவாமி கோவிலில் குட்டிக்குடி திருவிழா நடைபெற்றது
    • வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சியளித்தார்

    கரூர்,

    கரூர் மண்மங்கலம் முனியப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் இருந்து வேல் எடுத்து வருதல், தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி காட்சியளித்தார்.இதையொட்டி பரம்பரை பூசாரி கருப்பசாமி உடையணிந்து தாரை தப்பட்டைகள் முழங்க கோவிலில் இருந்து வேல் ஏந்தி ஆவேசத்துடன் வலம் வந்தார்.

    பின்னர் அங்குள்ள எல்லைச்சாமியை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் வரிசையாக நின்று 500-க்கும் மேற்பட்ட கிடா குட்டிகளை நேர்த்திக்கடனாக வழங்கினார்கள். அப்போது அந்த கிடா குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சியவாறு அரிவாள் மேல் ஏறி நின்று பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • தரகம்பட்டியில் ரூ.12.40 கோடியில் கட்டப்பட உள்ளது
    • எம்.எல்.ஏ.சிவகாமிசுந்தரி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தரகம்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி சில ஆண்டுகளான கல்லூரி வகுப்புகள் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பகுதிகளில் இயங்கி வருகிறது, இதனால் தனியாக கல்லூரி கட்டிடம் கட்டி இயங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கைவைத்தனர்.இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்திலபாலாஜி பரிந்துரையில் ரூ.12 கோடியே 40 லட்சத்தில் கல்லூரி அமைப்பதற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கீழப்பகுதி ஊராட்சி, மைலம்பட்டி அரசு மருத்துவமனை அருகில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.விழாவில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, ஆடிட்டர் சங்கர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், ராமலிங்கம், தரகம்பட்டி ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், கீழப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் ஜாஜகான், மற்றும் அரசு அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமி கல்லூரியில் நடைபெற்றது
    • பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது

    கரூர்,

    கரூர் சி.எஸ்.ஐ. பிஷப் சாலமன் துரைசாமிக் கல்லூரியில் முதலாம் ஆண்டுவிழா நடைப்பெற்றது. திருச்சி மறை மாவட்ட தலைவர் ராஜா மான்சிங் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வினைத் துவங்கி வைத்தனர். விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பேராயர் ஆணையாளர் சுதர்சன் தலைமையுரை ஆற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் (பொ) முனைவர் சீனிவாசராகவன் சிறப்புரை ஆற்றினார்.திருச்சி தஞ்சை திருமண்டல பொருளாளர் ராஜேந்திரன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால்தயாபரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு பாடங்களில் நூறு சதவீத தேர்ச்சியினை அளித்த ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.பல்வேறு பிரிவுகளில் சாதனை செய்து வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. வணிக மேலாண்மை துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கண்ணகி நன்றியுரை ஆற்றினார். கரூர் மறை மாவட்ட தலைவர் பாஸ்கர் முடிவு ஜெபத்தினை செய்தார். திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் ஆணையாளர் சுதர்சன் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இறைமக்கள் செயலர் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர் ஸ்டான்லி மதிசெல்வன், ஆட்சிமன்ற உறுப்பினர் ராஜய்யா, சி.எஸ்.ஐ தொழிற்பயிற்சிப் பள்ளி தாளாளர் கிறிஸ்டோபர் சுரேந்திர குமார், தாராபுரம் தார்ப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் விக்டர் லாசரஸ், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சத்தியசீலன், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் நிதியாளர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்
    • 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தவர் தற்கொலை

    கரூர்,

    கரூர் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 47). தொழிலதிபரான இவர், கரூரில் சொந்தமாக டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பன்னீர்செல்வம் வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லைஎன கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பன்னீர்செல்வம் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.இதைக்கண்ட உறவினர்கள் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×