என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணெலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

    திருவட்டார்:

    பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவட்டார் வட்டம், குல சேகரம் பேரூராட்சி செருப்பாலூர் கல்லடிமா மூடு பகுதியில் பொதுப்ப ணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப் பட்டதைத் தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியை முதல்-அமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதையடுத்து செருப்பாலூர் கல்லடிமா மூட்டில் மினி விளையாட்டரங்கம் அமையவுள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றியதுடன் அந்த இடத்தில் அடிக்கல் நாட்டி முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட கல்லடி மாமூட்டில் மினி விளை யாட்டரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றி தெரி வித்துக்கொள்கி றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோ வில் சட்டமன்ற தொகுதியில் அண்ணா விளை யாட்டரங்கம் உள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளிலும் மினி விளையாட்டரங்கங் கள் அமைய உள்ளன.

    இதில் முதற்கட்டமாக பத்மநாபபுரம் தொகு திக்குட்பட்ட குல சேகரம் கல்லடிமாமூட்டில் அமைக் கப்படுகிறது. அடுத்த கட்டமாக குளச்சல் தொகுதியில் அமைக்கப்படும். அதனை தொடர்ந்து கிள்ளியூர், விளவங்கோடு, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். குறிப் பிட்ட ஒரு இடத்தை மையமாக கொண்டு இந்த அந்த விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படாமல் அனைத்து பகுதி மக்க ளுக்கும் பயன் கிடைக்க வேண்டுமென்பதற்காக இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட செய்தித்தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட் வரவேற்றார். குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ் நன்றி கூறினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேரம் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஜே.எம்.ஆர். ராஜா, கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் ஜெஸ்டின் பால்ராஜ், குலசேகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெபித் ஜாஸ், வட்டார காங்கிரஸ் பொருளாளர் ஜேம்ஸ் ராஜ் மற்றும் குலசேகரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மக்கள் பணியை செய்யவிடாத மத்திய அரசு, மக்கள் பணியை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளது.
    • பாரதிய ஜனதாவினர் அவர்களை பற்றியும், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    28 மசோதாக்கள் காத்திருக்கிறது. அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள அரசு நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது.

    மக்கள் பணியை செய்யவிடாத மத்திய அரசு, மக்கள் பணியை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளது. இது ஒரு அரசியல் நாடகம். பாரதிய ஜனதாவினர் அவர்களை பற்றியும், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கும் பொருந்துமா? என்று பார்க்க வேண்டும். ஏன் பொருந்தவில்லை என்றும் பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாதவன் பலியானது குறித்த தகவல் அம்பையில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
    • போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மாதவன் (வயது 18). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வேலை பார்த்த ஓட்டலில் இருந்து சுங்கான்கடை பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று விட்டு மீண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மாதவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாதவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி மாதவன் பரிதாபமாக இறந்தார். மாதவன் பலியானது குறித்த தகவல் அம்பையில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கார் டிரைவர் முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மாதவன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது தெரியவந்துள்ளது. பலியான மாதவனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    இதையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • ராமநாதபுரம் தொழிலாளி செய்யது நவாஸ் (36) என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
    • குளச்சல் மரைன் போலீசில் விசைப்படகு ஓட்டுனர் ஜஸ்டின் புகார் செய்தார்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மேலத்துறை பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் ஜெகன். இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது படகில் குமரி மாவட்ட தொழிலாளர்கள் 8 பேர், ஒடிசாவை சேர்ந்த 5 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 20 தொழிலாளர்கள் வழக்கம்போல் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று கன்னியாகுமாரி கடற்பகுதியிலிருந்து 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒடிசா தொழிலாளி திபாகர மாலிக் (வயது 64) கடலில் போட்டிருந்த ஆங்கரை மேலே எடுக்க முயற்சித்தார். அப்போது ஆங்கர் கயிறு வேகமாக சுழன்றதில் கயிறு திபாகர மாலிக் தலை மற்றும் முகத்தில் அடித்தது. இதில் அவர் மயங்கி விசைப்படகுக்குள் விழுந்தார்.

    அருகில் நின்ற ராமநாதபுரம் தொழிலாளி செய்யது நவாஸ் (36) என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் விசைப்படகை சின்ன முட்டம் துறைமுகத்திற்கு செலுத்தி திபாகர மாலிக்கை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திபாகர மாலிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசில் விசைப்படகு ஓட்டுனர் ஜஸ்டின் புகார் செய்தார். அதன்பேரில் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார். பலியான திபாகர மாலிக்கிற்கு திருமணமாகி 2 மகன்களும்,1 மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 108 ஆம்புலன்சு அலுவலகத்தில் 4-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
    • ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 35 வயத்திற்குள் இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்சு அலுவலகத்தில் 4-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் இந்த தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள், உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும். மருத்துவ உதவியாளர் 19 வயதில் இருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 35 வயத்திற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    • மேயர் மகேஷ் உறுதி
    • ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மேயர் மகேஷ் தலைமையில் நடந்தது.. ஆணையர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

    மனுக்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் மேயர் மகேஷ் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மழை பெய்து வருவதால் ஆங்காங்கே சாக்கடை கால்வாய் நிரம்பி மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் செல்கிறது. இதை தடுக்கும் வகையில் சாக்கடை கால்வாயில் உள்ள மண்ணை அகற்றும் பணி நடக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. எனினும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தினமும் 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன.

    முக்கடல் அணையில் தண்ணீர் இல்லாமல் போனதால் புத்தன் அணையில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது முக்கடல் அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து முக்கடல் தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு புத்தன் அணையில் இருந்து வரும் தண்ணீரும் வழங்கப்படுகிறது. எனவே நாகர்கோவில் மாநகர மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக 3-வது வார்டு அந்தோணியார் தெருவில் ரூ.3.10 லட்சத்தில் கான்கிரீட் தளம், 34-வது வார்டு ரீட்டாஸ் தெருவில் ரூ.8 லட்சத்தில் கான்கிரீட் தளம், 43-வது வார்டு கலை நகரில் (ரேஷன் கடை அருகே) ரூ.15 லட்சத்தில் கான்கிரீட் தளம், 9-வது வார்டு விநாயகர் தெருவில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர் செல்வகுமார், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர்கள் அருள் சபிதா ரெக்ஸலின், தினகரன், விஜயன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை
    • 3 மாதம் லோன் கட்டாமல் பாக்கி இருப்பதாக கூறி உள்ளார்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோட சேவியர்புரம் அருகே வசித்து வருபவர் ஸ்ரீதரன் (வயது 50). இவர் திக்கணங்கோடு ஊராட்சியின் முன்னாள் கவுன்சிலர். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகன் குருநாத் (21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.

    தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும், ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. கடன் தொகையை அவர் திருப்பி கட்டிய போதும், இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து மிரட்டல் வந்துள்ளது.

    மேலும் மோசடி கும்பல் குருநாத்தின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அவர் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை நீ கட்டாவிட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பரவ விடுவதோடு உனது உறவினர்கள், தாய்-தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் மிரட்டல் விடுத்தது யார்? என்பது பற்றிய சரியான தகவல் கிடைக்காமல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை குருநாத்தின் வீட்டுக்கு, ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் 3 மாதம் லோன் கட்டாமல் பாக்கி இருப்பதாக கூறி உள்ளார். அவரை அந்தப் பகுதி மக்கள் சிறைபிடித்து வைத்தனர். பின்னர் தக்கலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து, சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். குருநாத் இறந்தது கூட தெரியாமல் வாலிபர் லோன் வசூல் செய்ய வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் கடை வீதிகளில் கண்காணிப்பு

    நாகர்கோவில், நவ.2-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஓடும் பஸ்களில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிக ரித்து வருகிறது. டிப்டாப் உடையில் கை குழந்தை களுடன் வரும் பெண்கள் கூட்ட நெரிசலை பயன் படுத்தி நகைகளை பறித்து விட்டு தப்பி சென்று விடு கிறார்கள்.

    இந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் உத்தர வின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்ப டும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது பஸ்சில் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரி விக்குமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது.

    மேலும் திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையங்களில் 24 மணி நேரமும் மப்டி உடையில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பெண் கொள்ளையர்களின் புகைப்படங்களை பஸ் நிலையங்களில் ஒட்டி வைத்துள்ளனர். அந்த கொள்ளையர்களை பார்த்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறப்பட் டுள்ளது.

    அந்த அறிவிப்பில் போலீ சாரின் செல்போன் எண்க ளையும் குறிப்பிட் டுள்ளனர். அந்த செல்போ னில் தொடர்பு கொண்டு பெண் கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கடை வீதிகளிலும் கூட்டம் அலை மோத தொடங்கியுள்ளது. மீனாட்சிபுரம், செம்மாங்குடி ரோடு, வடசேரி, கோட்டார் பகுதிகளில் கூட்டம் அதிக மாக உள்ளது.

    எனவே கடை வீதிகளி லும் போலீசார் கண் காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், தக்கலை, குளச்சல், குலசேகரம், கன்னியாகுமரி போன்ற பெரு நகரங்களில் உள்ள கடைவீதிகளிலும் போலீசார் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகை யில், தீபாவளி பண்டிகையை யொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைவீதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப் படும். எனவே கடைக்கா ரர்கள் சி.சி.டி.வி. காமி ராவை முழுமையாக செயல் பட வைக்க வேண்டும். பொதுமக்களும் கடை வீதிகளுக்கு வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    தங்களது உடைமை களையும், பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப் பாக பஸ்களில் பயணம் செய்யும்போது கூட்டத்தில் பயன்படுத்தி பெண் கொள் ளையர்கள் கைவரிசை காட்டி வருவதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

    • கட்டுப்படுத்த மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை
    • கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    திருவட்டார் :

    குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் எம்.சான்ட், என்-சான்ட், ஜல்லி, கல் ஆகிய கனிம வளங்களை இரவு பகலாக கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். கல்குவாரிகளை சுற்றி ஏராளமான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன.

    இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பாறைகள் உடைப்பதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் வீடுகள் உறுதிதன்மை இல்லாமல் நிற்கிறது. வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இரவு நேரங்களில் வீட்டில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள். அதிக எடையுடன் 16, 18 சக்கரம் உடைய கனரக வாகனங்களில் இரவு நேரங்களில் கனிம வளங்கள் எடுப்பதற்காக வரிசையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அதிக சத்தத்துடன் லோடு ஏற்றி செல்வதால் அந்த பகுதியில் உள்ள கல் குவாரிகளை சுற்றி குடியுருப்புகளில் வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி அதிகாலை வரை ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்து கொண்டோ சித்திரங்கோடு சந்திப்பில் இருக்கும் எடைமேடையில் ஒவ்வொரு வாகனமும் எடை போடுவதற்கு வரிசையில் நிற்பதால் அந்த பகுதியில் வீட்டில் உள்ளவர்க ளுக்கும், கனரக வாகன டிரைவர்க ளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிக எடையுடன் கனரக வாகனங்களில் கனிம வளங்களை எடுத்து செல்வதால் ரோடுகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    காலை, மாலையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் செல்லும் நேரங்களில் அதிக எடையுடன் கனரக வாகனங்கள் செல்வதால் பெரிய அளவில் போக்கு வரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பல விபத்துக்கள் நடை பெறுகிறது. எனவே அந்த பகுதியில் செயல்படும் கல்குவாரிகள் அதிக சத்தத்துடன் வெடி வைத்து பாறைகள் உடைப்பதை தவிர்த்து சிறிய அளவில் வெடி வைத்து பாறைகள் உடைக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து அதிக சத்தத்துடன் கற்களை உடைக்கும் கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்
    • ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலம்

    கன்னியாகுமரி :

    ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1-ந்தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு உள்ளாட்சி தினத்தையொட்டி லீபுரம் பஞ்சாயத்து சிறப்பு கிராம சபை கூட்டம் ஆரோக்கியபுரத்தில் நடந்தது. லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், சுயம்புகனி, லட்சுமிபாய், ஜெகன், மரிய ஜெராபின், ஜெனிபுரூன்ஸ், டெல்சி, சுமதி, ஊராட்சி செயலாளர் ஜெனட் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுற்றுலாத்துறை போன்ற அனைத்து துறை அதிகாரிகள் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதேபோல லீபுரம் பஞ்சாயத்தில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் லீபுரம் கடற்கரைக்கு செல்லும் பாதையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.15 லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கான்கிரீட் பாலத்தை சிறப்பாக கட்டுவதற்கு உறுதுணை புரிந்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஜெயச்சந்திரனுக்கு லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

    • மாலை மலர் செய்தி எதிரொலி
    • பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தவிட்டது. அதன் பயனாக ரூ.30 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் மட்டும் நடந்து வந்தது. ஆனால் இதன் மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் இந்த இணைப்பு பாலத்துக்கான பணிகளில் தீவிரம் காட்டாமல் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. மேலும் இந்த பால பணியினால் கடந்த 6 மாத காலமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை என்றும், இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரடியாக பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என்றும், கன்னியாகுமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது என்றும் இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது என்றும் இந்த சீசன் காலங்களில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கன்னியா குமரிக்கு வருவார்கள் என்றும், எனவே இந்த இணைப்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து வருகிற சபரிமலை சீசன் காலம் முடிவதற்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் மாலைமலரில் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது.

    அதன் எதிரொலியாக தற்போது திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதைதொடர்ந்து இதன் மறுபுறம் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை யிலும் இந்த கண்ணாடி கூண்டு இணைப்பு பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • இறந்துபோன பாலகிருஷ்ணனுக்கு 18 மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.
    • மண் கொட்டும் இடத்தில் வண்டியை திருப்பியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    ராஜாக்கமங்கலம் :

    நெல்லை மாவட்டம் இருக்கன் துறையை சேர்ந்தவர் சுப்பையா. அவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 37). இவர் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு மணல் குவாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கூடங்குளத்தில் இருந்து பிள்ளை தோப்புக்கு டெம்போவில் பாறை மண் கொண்டு வந்தார். பிள்ளை தோப்பில் மண் கொட்டும் இடத்தில் வண்டியை திருப்பியபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    உடனடியாக வண்டியை நிறுத்தி விட்டு சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வருவதற்குள் அவர் மயங்கி விழுந்து டெம்போக்கு உள்ளேயே இறந்தார். உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன பாலகிருஷ்ணனுக்கு 18 மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    ×