என் மலர்
கன்னியாகுமரி
- காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் ஆகிய உபமின் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் நாளை மறுநாள் (9-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சர்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த நேரத்தில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேயர் மகேஷ் ஆலோசனை வழங்கினார்
- செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை
கன்னியாகுமரி :
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மண்டைக்காடு பருத்திவிளை ஆர்க் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற தொகுதி தலைமை கழக பார்வை யாளர் உசிலம்பட்டி அருண் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் ஆன்றோ சர்ச்சில் வரவேற்றார்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள் சகாய கிறிஸ்துதாஸ், செல்வதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயசீலன், செல்வதாஸ், டாக்டர் ஜாண் சந்திரசேகர், குளச்சல் சபீன் மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்ட னர். ஒன்றிய பிரதிநிதி பால்டுவின் மேஷாக் நன்றி கூறினார்.
வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தென் மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி முகாமில் குருந்தன் கோடு மேற்கு ஒன்றிய 103 வாக்குச்சாவடி முகவர்க ளும் கலந்து சிறப்பிப்பது. தி.மு.க. தேர்தல் அறிக்கை படி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்ட தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
- வருகிற 10-ந்தேதி நடக்கிறது
- ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல் மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும்
கன்னியாகுமரி :
நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். பூஜையில் வைக்கப்படும் நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்க விடுவார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல்மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 10-ந்தேதி நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 5 மணி அளவில் திருவட்டார் பஸ் நிலையம் அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.
தொடர்ந்து 5.45 முதல் 6.15-க்குள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் முன்பு அவை படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தன பிரசாதத்துடன் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- தக்கலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை
- போதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் தக்கலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் பழைய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட னர்.
அப்போது குமார கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 43) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீ சார் பிடித்து சோதனை செய்த போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது அவர் மது போதையில் வாகனம் ஓட்டியது உறுதியானது.
உடனே அவர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியது, வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 100 வாகனங்கள் மீது வழக்கு பதிவுசெய்து ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தக்கலை போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை போதையில் வாகனம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் ஓட்டுபவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பொதுமக்கள் பரிதவிப்பு
- காலையிலேயே அனல்காற்று வீசுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். காலை நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
பெரியவர்கள் மதியம் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். அந்த அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. நாகர்கோவில் நகர பகுதி களில் மதியம் நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பெண்கள் குடை பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு வெயில் சுட்டெ ரித்து வருகிறது. சாலைகளில் கானல் நீராக காட்சியளிக்கிறது.
வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வழக்கமாக குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கண்ணாமூச்சி காட்டிவிட்டது.
வழக்கத்தை விட 65 சதவீதம் மழை குறைவாகவே பெய்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதை யடுத்து இளநீர் மற்றும் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இளநீர் விற்பனை செய்யப் பட்டு வருகிறது.
சுங்கான்கடை, தக்கலை, நாகர்கோவில், கன்னியா குமரி, சுசீந்திரம் பகுதிகளில் சாலையோரங்களில் இளநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இளநீர் ரூ.40 முதல் ரூ.50 வரை விற் பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நுங்கு விற்பனையும் தற்போது அதிக அளவில் நடந்து வருகிறது.
- ஊட்டுவாழ் மடம் கேட் இன்று முதல் 2 நாட்கள் மூடல்
- ஊட்டுவாழ்மடத்தில் சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது
நாகர்கோவில் :
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கிறார்கள்.
இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டு வாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்து தான், நாகர்கோவில் வர வேண்டும். ரெயில் நிலையம் அருகில் இருப்பதால், ரெயில்கள் என்ஜின் மாற்றும் போது கூட ரெயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 மணி நேரம் இந்த ரெயில்வே கேட் பூட்டியே இருக்கும். இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் சுரங்க நடைப் பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஊட்டுவாழ்மடத்தில் சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் பணிகள் தொடங்கின. முதலில் சுரங்கப்பாதை பணிக்காக ரெயில்வே கேட் 4 மாதங்கள் வரை மூடப்படும் என்றும், மக்கள் மாற்றுபாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரெயில்வே கேட்டை மூடினால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே ஊட்டு வாழ்மடம் ரெயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைத்து ரெயில்வே கேட் வசதி ஏற்படுத்தி விட்டு, பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஊட்டு வாழ்மடம் ரெயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. தற்காலிக பாதையில் தனி யாக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் எல்லாம் முடி வடைந்ததை தொடர்ந்து தற்போது சுரங்கம் அமைக்க மண் தோண்டும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.
இந்த சுரங்கப்பாதை சுமார் 8 மீட்டர் அகலத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் சுமார் 80 மீட்டர் நீளத்திலும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
சுரங்கப்பாதை பணிக் காக இன்றும், நாளையும் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை ரெயில்வே கேட் மூடப் பட்டது. ரெயில்வே கேட் மூடப்பட்டதையடுத்து சுரங்க பாதைக்கான பணி கள் தீவிரப்படுத்தப்பட்டது. சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் 4 தண்ட வாளங்கள் உள்ளது. ஏற்கனவே 3 தண்ட வாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு தண்ட வாளத்தில் கர்டர் பாலம் அமைப்பதற்கான பணிகளை ஊழியர்கள் மேற் கொற்கண்டு வருகிறார்கள். தண்டவா ளங்களையொட்டி உள்ள ஜல்லிகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டு கர்டர் பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
காலை தொடங்கி இரவு பகலாக அந்த பாலப் பணியை 2 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கர்டர் பாலம் அமைக்கப்பட்ட பிறகு தண்டவாளத்தின் கீழ் பகுதிகளில் மணல்களை எடுத்துவிட்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்படும். கர்டர் பாலம் 4 தண்டவாளங்களி லும் அமைத்துவிட்டால் ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. சுரங்கப்பாதை பணிகளும் தொய்வின்றி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்ள ஏற்பாடு
- அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
நாகர்கோவில் :
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ஒவ்வொரு தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதயாத்திரை மேற் கொள்வதற்காக வருகிற 15-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அன்று விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கு மீனவ பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரை சந்தித்து பேசுகிறார்.
17-ந்தேதி குளச்சல் பத்ம நாபபுரம் தொகுதிகளில் பாதயாத்திரை மேற் கொள்ளும் அண்ணாமலை 18-ந்தேதி காலை நாகர்கோவிலில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர் மாலை கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
பாதயாத்திரை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதயாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து பாரதிய ஜனதா மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்கள். பாதயாத்திரை தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.
மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை முந்திச்சென்ற கார், வழிமறித்து நின்றது
- அரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பல் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி :
குழித்துறை அருகே பாகோடு ஆலுவிளை பகுதியை சேர்ந்தவர் அஜில் குமார் (வயது 37). மார்த்தாண்டம் டெப்போவில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். இவர் சம்பவத்தன்று மாலை நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வரும்போது தக்கலை அருகே கல்லுவிளை பகுதியில் பின்னால் சொகுசு கார் வந்துள்ளது. அந்த கார் முந்தி செல்ல முயன்றது ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் பஸ்சை முந்திச்சென்ற கார், வழிமறித்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் அஜில் குமாரிடம் எங்களுக்கு வழி விட மாட்டியா? என கூறி அடித்து உதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். பின்னர் தக்கலை போலீஸ் நிலையத்தில் அஜில்குமார் புகார் செய்தார். புகாரை பெற்றுகொண்டு போலீசார் அரசு பஸ் டிரைவரை தாக்கிய கும்பல் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருணாநிதி சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை
- கட்சியினர் திரளாக பங்கேற்பு
நாகர்கோவில் :
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவிலில் இன்று அமைதி பேரணி நடந்தது. பேரணிக்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார்.
வடசேரி அண்ணா சிலை முன்பிருந்து தொடங்கிய அமைதி பேரணி, மணிமேடை சந்திப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலை, அரசமூடு சந்திப்பு, கட்டபொம்மன் சந்திப்பு வழியாக ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகம் வந்தது.பேரணியில் கருணாநிதி உருவப்படம் வைக்கப்பட்ட வாகனம் முன் செல்ல நிர்வாகிகள் திரளாக பின் தொடர்ந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணா நிதி உருவப்படத் திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத் தப்பட்டது. பேரணியில் மாநில மகளிரணி செயலா ளர் ஹெலன்டேவிட்சன் முன்னாள் அமைச்சர் சுரே ஷ்ராஜன், பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் நசரேத் பசலியான், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செய லாளர் தில்லைசெல்வம், துணை மேயர் மேரிபிரின்சி லதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, சதாசிவம், அணி அமைப்பாளர்கள் அகஸ்தீ சன், இ.என். சங்கர், அருண் காந்த், சி.என்.செல்வன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகில வாணி, ஒன்றிய செயலாளர் கள் பாபு, சுரேந்திர குமார், மதியழகன், செல்வன், பிராங்ளின், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமை ப்பாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பலரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மற்றவர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். கருணாநிதி நினைவு நாளையொட்டி நாகர்கோவில் பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
- தென்னங் கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக தென்னங்கண்றுகளை சுற்றி வலைபோட்டு வேலி
- வனத்துறையினர் ராட்சத மலைப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
கன்னியாகுமரி :
அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரம் பகுதியில் உள்ளது. இந்த தோப்பில் உள்ள தென்னங் கன்றுகளை ஆடு, மாடுகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக தென்னங்கண்றுகளை சுற்றி வலைபோட்டு வேலி அமைத்துள்ளார்.
இந்த வலையில் இன்று காலை ராட்சத மலைப்பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. இந்த நிலையில் சிவகுமார் இன்று காலை அந்த தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு உள்ள ஒரு வலையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று சிக்கியபடி வெளியில் வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. உடனே அவர் இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் சீனிவாசன், தளவாய், ரமேஷ்குமார் மற்றும் குழுவினர் அந்த தென்னந்தோப்புக்கு விரைந்து சென்றனர். அந்த தென்னந்தோப்பில் உள்ள வலையில் சிக்கி இருந்த ராட்சத மலை பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த ராட்சத மலைப்பாம்பு 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் தீயணைக்கும் படையினர் அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அந்த ராட்சத மலைப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
- பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்
- ரூ.11 கோடியே 38 லட்சமும், குழித்துறை ரெயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் நிதி ஒதுக்கீடு
நாகர்கோவில் :
நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சேவையாக ரெயில்வேத்துறை உள்ளது. இதனாலேயே ரெயில்வே துறையை மத்திய அரசு நவீனப்படுத்தி வருகிறது. பல்வேறு ரெயில் நிலையங்கள் புனர மைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல குமரி மாவட்டத்தி லும் கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுன் ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 62 ரெயில் நிலையங்கள் மேம்ப டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவில் மற்றும் குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
அந்த வகையில் நாகர்கோ வில் ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சமும், குழித்துறை ரெயில் நிலையத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தின் முன் பகுதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதிகள் தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப்பட உள்ளன.
இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக கலந்துகொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நாகர்கோவிலில் அடிக்கல் நாட்டு விழாவானது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடந்தது. விழாவுக்கு திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் எஸ்.எம்.சர்மா தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
விஜய்வசந்த் எம்.பி. பேசுகையில், "நாகர்கோவில் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயம் டவுன் ரெயில் நிலையத்தையும் நவீனப்படுத்த வேண்டும். குமரி மாவட்ட மக்கள் அதிக அளவு ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அதற்கு ஏற்றார் போல கூடுதல் ரெயில்களை குமரி மாவட்டத்துக்கு இயக்க வேண்டும்" என்றார்.
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பேசுகையில், "பிரதமர் நரேந்திரமோடி உலக நாடுகளுக்கு இணையாக நம் நாட்டிலும் ரெயில் சேவையை நவீனப்படுத்தி வருகிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 62 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
மேயர் மகேஷ் பேசுகையில், " குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு வாரம் 3 முறை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தினசரி ரெயிலாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கன்னியாகுமரி- நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாகர்கோவில் -திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை, நாகர்கோவில் -திருநெல்வேலி இரட்டை ரெயில் பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் வரை செல்லும் ரெயில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம் வழியாக மீண்டும் கோவை வருகிறது.
எனவே அந்த ரெயிலை நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, திருச்சி வழியாக இயக்கினால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்." என்றார்.
இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் முன்னாள் மந்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- சுற்றுலா பயணிகள் ஓட்டம்-பரபரப்பு
- கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, வட்டக்கோட்ைட, சொத்த விளை கடற்கரை, குளச்சல் கடற்கரை, லெமூர் கடற்கரை போன்றவற்றிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
விடுமுறை நாட்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அதன்படி இன்று அனைத்து கடற்கரைகளிலும் ஏராளமானோர் குடும்பத்து டன் வந்திருந்தனர்.
வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் குமரி மாவட்டத் தில் கடல் சீற்றமாக இருக்கும். கடந்த 5 நாட்களாக கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி கடல் நீர் உள் வாங்குவதும், கடல் நீர்மட்டம் தாழ்வு அடைவ தும் நிகழ்ந்து வருகிறது. இன்று பகலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பின.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை யில் இன்று ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் கடற் கரைக்கு வந்தது. ராட்சத அலைகள் வேகமாக காணப் பட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனை கண்ட சுற்றுலா பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்பட வில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. எனவே இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.






