என் மலர்
கன்னியாகுமரி
- ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை
- இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம், ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலம் பகுதியில் இருந்து அரளிப்பூவும், தோவாளை, ராஜாவூர், மருங்கூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளிப்பூவும், சம்மங்கி, கோழி கொண்டை, அருகம்புல், தாமரை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. ஆடி மாதம் என்பதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது.
பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு வருமாறு:-
பிச்சிப்பூ ரூ.600, மல்லிகைப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.125, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டரோஸ் ரூ.110, மஞ்சள் கிராந்தி ரூ.60, சிவப்பு கிராந்தி ரூ.70 என அனைத்து பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வருகிற 19-ந்தேதி முதல் கேரளா முழுவதும் ஓணம் கொண்டாட இருப்பதால் பூக்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
- எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
- 16-வது வார்டு கவுன்சிலர் நவமணி அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார்.
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமியை சென்னை யில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
ஆரல்வாய்மொழி பேரூராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் நவமணி மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார். குல சேகரபுரம் ஊராட்சி தலைவர் சுடலையாண்டி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி குழு துணை தலைவர் சண்முகவடிவு ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்த னர்.
நாகர்கோவில் மாநக ராட்சி 11-வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் சிலரும் மரியாதை நிமித்தமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
- பிரம்மபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இன்று ஊர்வலமாக சென்றனர்.
- தக்கலை அருகே பிலாங்காலையில் பயங்கரவாத எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி நடந்தது
நாகர்கோவில் :
குமரி பாலன் நினைவாக குமரி மாவட்ட இந்து முன்னணியினர் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரம்மபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இன்று ஊர்வலமாக சென்றனர்.
நாகர்கோவில் நாக ராஜா திடலில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்து ராமன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் அசோகன், சந்திரசேகரன், மார்த்தாண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நாகராஜா திடலில் இருந்து தொடங்கிய பேரணி பார்வதிபுரம் வழியாக தக்கலை பிரம்மபுரத்தை சென்றடைந்தது.
தெங்கம்புதூரில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன பேரணிக்கு என்.ஜி.ஓ. காலனி சந்திப்பில் பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலை வரும், கவுன்சிலருமான அய்யப்பன் கொடியசைத்து வரவேற்பு அளித்தார்.
என். ஜி. ஓ. காலனி சந்திப்பில் இருந்து நாகராஜா திடலுக்கு சென்ற இருசக்கர வாகனப் பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக குமரி பாலன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார். இதில் மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோயில் அருகே இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் புறப்பட்டது. அலங்காரம் செய்யப் பட்ட குமரி பாலன் உருவபடத்திற்கு அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
தக்கலை அருகே பிலாங்காலையில் இன்று காலை பயங்கரவாத எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் பிலாங்காலையில் தொடங்கி அழகியமண்டபம், திருவிதாங்கோடு, கோழிப்போர்விளை , கோடியூர், குழிக்கோடு, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சுவாமி யார்மடம் வழியாக காட்டாத்துறை ஆல்தறை அம்மன் கோயிலில் வந்தடைந்தது.
- ஆடி கிருத்திகையையொட்டி நாளை நடக்கிறது
- லங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளல்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகை விழா நாளை (9-ந்தேதி) நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் தோளில் காவடி எடுத்து கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வருகின்றனர். பின்னர் காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி சுப்பிர மணிசாமிக்கு எண்ணை, பால், தயிர், நெய், விபூதி, சந்தனம், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம்வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அதன்பிறகு மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன்குன்றத்தில் உள்ள வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நாளை (9-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.
- ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ஊட்டுவாழ்மடம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டு ஏற்கனவே இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. பொது மக்கள் வசதிக்காக தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுரங்கப்பாதை ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் உள்ள 4 தண்டவாளங்களின் கீழ் கர்டர் என்று சொல்லப்படும் பாலம் அமைத்து தண்டவாளத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் மற்ற 2 தண்டவாளங்களில் கர்டர் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்பட்டு நேற்று முதல் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.
இன்று காலையிலும் பணி நடந்தது. ராட்சத கிரேன் மூலமாக தண்டவாளங்கள் அகற்றப்பட்டு கர்டர் பாலம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை நாளைக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கர்டர் பாலம் அமைக்கப்பட்டு ரெயில்வே தண்டவாளம் அமைத்து விட்டால் ரெயில் போக்கு வரத்தில் எந்த ஒரு பாதிப்பும் இன்றி சுரங்கப்பாதை பணியை மேற்கொள்ள முடியும்.
தற்போது கர்டர் பாலத்திற்காக தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெறுவதையடுத்து அந்த வழியாக ரெயில் போக்குவரத்து சில மணி நேரம் தடைபட்டது. இதனால் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அந்த ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்து சேர்ந்தது.
சென்னை, பெங்களூர், கோவை, ராமேசுவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் வள்ளியூர், பணகுடி, ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வரும். இந்த ரெயில் இன்று காலையில் வழக்கமான நேரத்திற்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே கேபின் பகுதிக்கு வந்தது.
ஆனால் சுரங்கப்பாதை பணி காரணமாக அந்த ரெயில் சுமார் 2 மணி நேரம் அங்கேயே நிறுத்தப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். தொடர்ந்து 7.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு 7.45 மணிக்கு சென்றடைந்தது.
இதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 4.50 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயிலும் வள்ளியூரில் 2 மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது.
பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 7.30 மணிக்கு வந்து சேரும். இன்று 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ரெயில் அதிகாலையில் 3.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் 4¾ மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தது.
சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேர வேண்டிய சிறப்பு ரெயில் 8.50 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.15 மணிக்கு வழக்கமாக புறப்பட்டு செல்லும். இன்று 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக 7.35 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ரெயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணி கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த ரெயில் பணகுடி அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
- கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர்.
- பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனி பகுதியில் குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புலி கடித்து கொன்றது.
இதனால் பழங்குடி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் அடுத்தடுத்து அந்த பகுதிகளில் ஆடு, மாடுகளை புலி கடித்து குதறியது. வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
சிற்றார் சிலோன் காலனி உட்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். சிலோன் காலனி குடியிருப்பு பகுதியில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு இருந்தது. எலைட் படையினரும் மருத்துவ குழுவினரும் அங்கேயே முகாமிட்டு தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.
கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர். இருப்பினும் குமரி மாவட்ட வனத்துறையினர் சிலோன் காலனி பகுதியில் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு ஆறுகாணி அருகே ஒரு நூறாம் வயல் கீழ்மலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்து கொன்றது பழங்குடி மக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளை புலி கடித்துக் கொன்றது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இரண்டு குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்துக் கொன்றிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டை யின் காரணமாக புலி ஒரு நூறான் வயல் கீழ் மழை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக புலி தென்படவில்லை. ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. புலி நடமாட்டம் தென்படாததால் தேடுதல் பணியில் ஈடுபட்ட படையினர் திரும்பி சென்றனர். தற்போது ஒரு நூறான் வயல் கீழ்மலை பகுதியில் குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்துள்ளது.
அந்த பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் வீடுகளில் ஆடுகளை கட்டும்போது அந்த பகுதியில் தீ வைத்திருந்தால் புலி அந்த பகுதிக்கு வராமல் தடுக்க முடியும். புலியை பிடிக்க பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கருனாநிதியின் படத்துக்கு மாவட்ட துணை செயலாளர் புஷ்பலீலா ஆல்பன் மாலை அணிவித்து மரியாதை
- மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி :
தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் கருனாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பாக ஆற்றூர் ஆல்பன் நினைவு மருத்துவமனையில் கருனாநிதியின் படத்துக்கு மாவட்ட துணை செயலாளர் புஷ்பலீலா ஆல்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.பிஸ்வஜித் ஆல்பன், முன்னாள் பேரூர் செயலாளர் பெனட், மாவட்ட மருத்துவரணி துணை செயலாளர் அசின் ஜித், முன்னாள் திருவட்டார் பேரூராட்சி துணைத் தலைவர் ஐசக், ஆற்றூர் பேரூராட்சி முன்னாள் கிளை செயலாளர், ஞானதாஸ் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
- விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுப்பில் 759 குழந்தைகள் மற்றும் 32 கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்த வில்லை
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடிவீஸ்வரம் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விடுபட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
போலியோ, டிப்தீரியா, கக்குவான் இருமல், இரண ஜன்னி, தட்டம்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் தீவிர காச நோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
போதிய விழிப்புணர்வின்மை, பெற்றோரின் நேரமின்மை, சுகாதார பணியாளர்களின் காலிப்பணியிடங்கள், தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சில குழந்தைகளுக்கு ஒரு சில தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப்பெறாமல் இருக்கலாம். இதன் மூலம் விடுபட்ட குழந்தைகளுக்கு அனைத்து தடுப்பூசிகள் பெறுவதற்காக இந்திய அரசு தீவிர மிஷன் இந்திர தனுஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு இத்திட்டம் 3 சுற்றுகளாக (ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர்) மாதங்களில் நடைபெறுகிறது.விடுபட்ட குழந்தைகள் கணக்கெடுப்பில் மாவட்டத்தில் 759 குழந்தைகள் மற்றும் 32 கர்ப்பிணிகள் இதுவரை தடுப்பூசி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாரம் தவணையில் உள்ள 72 கர்ப்பிணிகள் மற்றும் 1980 குழந்தைகள் முதல் சுற்றில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.முதல் சுற்று தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்டத்தி ற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், குருந்தன்கோடு, மேல்புறம், தோவாளை, முன்சிறை, ராஜாக்க மங்கலம், தக்கலை, திருவட்டார், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மையங்களில் இன்று முதல் 12-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது.
2-ம் சுற்று செப்டம்பர் மாதம் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மற்றும் 3-ம் சுற்று அக்டோபர் 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பொது சுகாதார பணி துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, மாநகர் நல அலுவலர் ராம்குமார், வடிவீஸ்வரம் நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ராகினி, மருத்துவ ஆய்வாளர் சூரிய நாராயணன், டாக்டர்கள், செவிலியர்கள், பயனா ளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.
- கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கி ழமை தோறும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப் பட்டு வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக வருகிறார்கள்.
இதில் சிலர் தீக்குளித்து தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் கலெக்டர் அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் மனு கொடுக்க வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்கு ஏராள மானோர் வந்திருந்தனர். அதில் முதியவர் ஒருவர் திடீரென கலெக்டர் அலுவ லக வாசலில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி மயங்கி விழுந்தார். அப்போது கலெக்டர் அலுவ லகத்தில் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அந்த நபரை பிடித்து காப்பாற்றினார்கள். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர்.
போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பூதப்பாண்டி அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 72) என்பது தெரியவந்தது. அவரது தோட்ட பயிருக்கு வேலி அமைத்து இருந்ததாகவும், அதை 2 பேர் தீ வைத்து எரித்து விட்டதாகவும், இது தொடர்பாக உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதுதொடர்பாக சம்பந் தப்பட்ட போலீஸ் நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீ சார் உறுதி அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு வழங்கினார்
- முதல் 2 இடங்களை பிடித்த 10 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
கன்னியாகுமரி :
தக்கலை நகர தொழில் வணிகர் சங்க 27-வது ஆண்டு விழா வருடாந்திர பொதுக்குழு, பரிசளிப்பு மற்றும் விருது வழங்குதல் உள்ளிட்டவை முப்பெரும் விழாக்களாக கொண்டாடப்பட்டது. சங்க கொடியை தலைவர் ஜெகபர் சாதிக் ஏற்றினார். விழாவில் கடந்த 2 கல்வி ஆண்டுகளில் அரசு பொதுத்தேர்வில் 10,12-ம் வகுப்புகளில் முதல் 2 இடங்களை பிடித்த 10 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், நகர்மன்ற ஆணையாளர் லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சந்திரமோகன், மன்மதன், வெனிபால்டு ரூபஸ், சனூஜ் கபூர், விஜயகுமார், விஷாக், முருகேசன், வேலாயுதன் பிள்ளை, தக்கலை சிவா, பத்மதாஸ், பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் தாணு மூர்த்தி, துணை தலைவர்கள் சுரேஷ்குமார், சண்முகம், செயலாளர்கள் மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவத் தலைவர் ஆனந்தம் குமார், ஜெயக்குமார், தொழிலாளர் நலத்துறை அலுவலர் மன்னன் பெருமாள், நகர் மன்ற துணைத் தலைவர் உன்னிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- தி.மு.க.செயலாளர் பாபு கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- பொன்.ஆசை தம்பி தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் :
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவப்ப டத்திற்கு தி.மு.க.வினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குமரி மாவட்டத்திலும் கட்சியினர் இன்று ஊர்வ லமாக சென்று கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தனர். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க.சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில்அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சுந்தர்சிங், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், சிறுபான்மையினர் உரிமை நலப்பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொட்டாரம் சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு கொட்டாரம் பேரூர் தி.மு.க.செயலாளரும் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலருமான வைகுண்ட பெருமாள் தலைமையில்தி.மு.க. வினர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், பேரூர் வார்டு செயலாளர்கள் அய்யப்பன், குமரன், அரிகரசுதன், சுப்பிரமணியன், சந்திரசேகர், வள்ளி நாயகம், பன்னீர்செல்வம், அன்புதாஸ், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் ஜங்ஷனில் ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது .இதில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி துணைத்தலைவர் மல்லிகா,கவுன்சிலர்கள் குமரேசன்,பிரேம்ஆனந்த், செல்வராஜ் ,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மற்றும் ஒன்றிய, பேரூர் ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தென்தாமரைகுளம் ஜங்ஷனில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ் தலைமை தாங்கினார்.திமுக வர்த்தகர் அணி இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறி ஞர் தாமரைபாரதி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் பேராசிரியர் டி.சி.மகேஷ், ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், வார்டு செயலாளர்கள் கே.கே.நாதன், ஆல்வின், அன்பு ரமேஷ், டென்னிஸ், நிர்வாகிகள் ஸ்டூவர்ட், எமர்சன், தாமரை பிரதாப், ஆல்பர்ட் பண்ணையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி தலைமையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில திமுக சட்டத்துறை இணை செயலாளர் தினேஷ், மாஹின் அபுபக்கர், கவுன்சிலர் அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ஷாஜிலால், கலை, ஸ்டாலின் உட்பட கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
- ஆகஸ்ட் 6-ந்தேதி திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-ந்தேதி வரை நடைபெறும்.
- பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று செல்வார்கள்.
கன்னியாகுமரி :
தென் தமிழகத்திலும், குமரி மாவட்டத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறித்தவ தேவாலயங்களில் ஒன்றான திக்கணங்கோடு அருகே மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ந்தேதி திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-ந்தேதி வரை நடைபெறும்.
குறிப்பாக 6-ந்தேதி மாலை நடைபெறும் திருக்கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். 15-ம் நாள் நடைபெறும் அன்னையின் பெருவிழா மற்றும் அன்னையின் தேர் பவனியில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து மத மக்களும் கலந்து கொண்டு தேரில் உப்பு, மிளகு மற்றும் மாலை காணிக்கையாக செலுத்தி அன்னையின் ஆசி பெற்று செல்வது வழக்கம்.
அதன்படி 588-வது ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இந்த ஆண்டு பாதுகாவல் பெருவிழாவை முன்னிட்டு 1-ம் திருவிழாவாகிய நேற்று காலை 7.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு புனித ஜோசப் தொடக்கப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற்றது.
மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி புனித ஆரோபண அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அர்ச்சித்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஏற்றி வைத்தார். மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெஸ்டின் பிரபு முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையேற்று அருளுரை வழங்கி திருப்பலி நிறைவேற்றி னார். உடன் மாத்திரவிளை வட்டார அருட்பணியாளர்கள் இணைந்து ஜெபித்தார்கள்.
கொடியேற்ற விழாவில் பங்கு இறைமக்கள், இணை பங்குதந்தை அருட்பணி மகிமைநாதன், மாத்திரவிளை வட்டார அருட்பணியா ளர்கள், பங்கு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்த ர்கள், அருட்சகோதரிகள், பாதிரியார்கள் மற்றும் குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்க ளில் இருந்தும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், மறையுரையும், இரவு 8.30 மணிக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
9-ம் நாள் திருவிழாவான 14-ந்தேதி காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 8.30 மணிக்கு தேர்பவனியும் நடைபெறுகிறது.
10-ம் நாள் திருவிழாவான 15-ந்தேதி காலை 5 மணி, காலை 6 மணி, திருப்பலியும், காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
இந்த கூட்டுத்திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை யேற்று அருளுரை வழங்கு கிறார். காலை 11 மணிக்கு புனித ஆரோபண அன்னை யின் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர் மற்றும் சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெறுகி றது. 10-ம் நாள் திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று செல்வார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குதந்தை அருட்பணி மகிமைநாதன், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.






