என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது
    • அவரது உருவப்படத்திற்கு காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், பிரபு மன்ற தலைவர் ஜெயபாலன், துணை தலைவர் செல்வின் ராம்குமார் மற்றும் அலெக்ஸ், கண்ணன், ஜேசுபெப்ற்றீஸ், குமரேசன், செல்லத்துரை, பலவேசம், தியாகி தவசிமுத்து, சரலூர் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு தூய்மை பணிகளை மேற் கொண்டனர்.
    • நாகரா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் தூய்மை பணிகள் நடந்தது.

    நாகர்கோவில் :

    குப்பையில்லா இந்தியா என்பதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தூய்மை பாரத் இயக்கம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து தூய்மை பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியா குமரி மாவட்டம் முழுவதும் தூய்மை பாரத் இயக்கம் என்ற பெயரில் பொது மற்றும் தனியார் இடங்களில் தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டன.

    இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், இளைஞர் அமைப்புகள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வா்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு தூய்மை பணிகளை மேற் கொண்டனர்.

    மேலும் தனியார் இடங் களில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து தனியார் இடங்களிலும் தூய்மை பணிகள் நடந்தது. நாகரா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் தூய்மை பணிகள் நடந்தது.

    குறிப்பாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி, கோட் டார் அரசு ஆயுர்வேத கல்லூரி ஆஸ்பத்திரி, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தீயணைப்புத்துறை அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையங்கள், அண்ணா விளையாட்டு அரங்கம், வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், செட்டிகுளம் சந்திப்பு, பார்வதிபுரம், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட், வடசேரி சந்தை மற்றும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் குப்பைகள் அகற்றப் பட்டு தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டன.

    இதேபோல வனத்துறை சார்பில் மலையோர கிரா மங்களும், பொதுப்பணித் துறை சார்பில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தூய்மை பணிகள் நடந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த இந்த தூய்மை பணிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிக மானோர் கலந்து கொண்ட னர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரை ஓரமாக பனை விதைகளை விதைத்தனர்.

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் கடலோர பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் 1071 கிலோ மீட்டர் தூர கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி இன்று நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதியில் 6 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி இன்று நடந்தது.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயக்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு கடற்கரை ஓரமாக பனை விதைகளை விதைத்தனர்.

    • பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி
    • காரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பகுதியிலுள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் கருணாநிதி (வயது 40). இவர் உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென்று மாயமாகி விட்டார். அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது, சுவிட்ச் ஆப் நிலையில் உள்ளது. இதுகுறித்து அவரது தந்தை பூதப்பாண்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மராத்தான் போட்டியில் கொட்டும் மழையிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
    • மராத்தான் ஓட்டம் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.

    நாகர்கோவில் :

    உலக இதய தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் மாணவர்கள் மற்றும் முதியவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மராத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மறவன்குடியிருப்பு கால்வின் மருத்துவமனை சார்பில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான மராத்தான் போட்டி நடைபெற்றது. பட்டகசாலியன்விளையில் இருந்து தொடங்கிய மராத்தான் ஓட்டம் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது.

    அங்கு மராத்தானில் பங்கு பெற்றவர்களுக்க போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் பரிசுகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜெர்சி, காலை உணவு, பரிசுகள், பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், டாக்டர்கள் கால்வின் டேவிட்சன், பினு லா கிறிஸ்டி, ஹனுஷ்ராஜ் பதக்கங்கள் மற்றும் பாராட்டு பத்திரங்களை வழங்கினர். அகஸ்டின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மராத்தான் போட்டியில் கொட்டும் மழையிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள் தங்கள் நெல்லை மிக குறைவான விலைக்கு வெளிசந்தையில் விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
    • குமரி மாவட்டத்திலும் கன்னிப்பூ அறுவடையான நெல் கொள்முதல் செய்ய வேண்டும்

    நாகர்கோவில் : 

    நாகர்கோவில தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியா குமரி மாவட் டத்தில் அறுவடை காலத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் அறுவடை நெல்லின் ஈரப்பதத்தின் அளவு சற்று அதிகமாகவே உள்ளது. அதோடு அறுவடையான நெல்லை காய வைக்க காலநிலையும் தற்பொழுது இல்லை.

    அரசு ஈரப்பதத்தை கார ணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய தயங்குவதால், விவசாயிகள் தங்கள் நெல்லை மிக குறைவான விலைக்கு வெளிசந்தையில் விற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை பயன்படுத்தி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அரிசி ஆலை அதிபர்கள் மிகக் குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்ற னர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கடந்த மழைக்காலத்தில் டெல்டா மாவட்டத்தில் ஈரப்பதத்தில் தளர்வுகள் பெற்று ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதல் செய்தனர். அதேபோல் குமரி மாவட்டத்திலும் கன்னிப்பூ அறுவடையான நெல் கொள்முதல் செய்ய வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கோமதி தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்
    • புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிள்ளியூர் :

    புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கோமதி (வயது 62). இவர் தி.மு.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று கோமதி அம்சி சிவன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவரான முருகன் (35) என்பவர் கோமதியை பார்த்து அவதூறாக பேசி, கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கோமதி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது
    • 12 மீனவர்களில் 5 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தையும், ஒரு தொழிலாளி மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர் ஆவர்.

    குளச்சல் :

    குளச்சல் துறை முகத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகில் மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 பேர் கடந்த 25-ந்தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் மூழ்கியது. இதனால் கடலில் குதித்த மீனவர்கள் கரையை நோக்கி நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மற்றொரு குளச்சல் படகு அவர்களை மீட்டது. 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஆரோக்கியம், ஆன்றோ, பயஸ் ஆகிய 3 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதில் பயஸ் உடல் நேற்று மீட்கப்பட்டது. மற்ற 2 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

    மீட்கப்பட்ட பயஸ் உடல் விசைப்படகு மூலம் நேற்றிரவு குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் குளச்சல் மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் பிரேத பரிசோதனைக்காக பயஸ் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பலியான மீனவர் பயசிற்கு மேரி ஸ்டெல்லா (50) என்ற மனைவியும், பிரதீப் (26) என்ற மகனும் உள்ளனர். .

    குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 12 மீனவர்களில் 5 தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தையும், ஒரு தொழிலாளி மேற்கு வங்காளத்தையும் சேர்ந்தவர் ஆவர். இம் மீனவர்களை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை மற்றும் பஷீர்கோயா, ஏரோணிமூஸ், ஆனக்குழி சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்த்து ஆறுதல் கூறினர்.

    • ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு
    • பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு நன்றி

    இரணியல் :

    இரணியல் பேரூராட்சியில் நடந்த சாதாரண கூட்டம் தலைவர் ஸ்ரீகலாமுருகன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ராணுவம் மற்றும் துணை ராணுவங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று 15-வது வார்டு கவுன்சிலர் செந்தில் ராமலிங்கம் கொடுத்த மனு மீது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் பாரத பிரதமர் மோடி, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு 4-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டார்

    • தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.
    • ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் தருவைக்குளம் எப்.எக்ஸ். தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் ரோகிணி கல்லூரியின் மாணவர்கள் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி இயக்குனர்கள் சபரீஷ், காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரையும் ரோகிணி கல்லூரியின் தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் ராஜேஷ் மற்றும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே அழகியமண்டபம் பொந்தன் பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 43), வேன் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடைய தந்தை மற்றும் தாயார் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால் மது பழக்கத்துக்கு அடிமையான தினேஷ் கடந்த சில மாதங்களாக தக்கலை அருகே கோழிப் போர்விளை யில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் வீட்டுக்குள் மதுவில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மாலையில் அருகில் உள்ள நபர்கள் பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி தினேஷ் கிடந்துள்ளார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக அவரது சகோதரி, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 10 கிலோ மீட்டரும்
    • பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

    நாகர்கோவில், அக்.1-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான அறி ஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வருகிற 7-ந்தேதி காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடை பெறவுள்ளது.

    இந்த போட்டியானது 17 வயது முதல் 25 வயதிற்குட் பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 8 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் பிரிவிற்கு 10 கிலோ மீட்டரும், பெண்கள் பிரிவிற்கு 5 கிலோ மீட்டரும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

    இப்போட்டியானது 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு நாகர்கோவில் அண்ண விளையாட்டரங்கத்தில் தொடங்கி, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக டதி பள்ளி சந்திப்பு மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக செட்டி குளம் சந்திப்பு, சவேரியார் கோவில் சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ண விளையாட்டரங்கம் வரையும், 17 வயது முதல் 25 வயதிற்குட்ட பெண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் வழியாக கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் வரையும் நடத்தப்படவுள்ளது.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக டதி பள்ளி சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக செட்டிகுளம் சந்திப்பு, இந்து கல்லூரி வழியாக பீச்ரோடு சந்திப்பு, கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்ட ரங்கம் வரையும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இருந்து மணிமேடை சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம் வழியாக, கோட்டார் போலீஸ் நிலையம், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி பாலம் வழியாக மீண்டும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் வரையும் நடத்தப்படவுள்ளது.இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தங்களின் பெயரினை பதிவு செய்து, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் அவர்களின் ரத்தப்பிரிவு போன்ற தகவல்களை அளித்து வழங்கப்படும் உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 7-ந்தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெறும், போட்டி யில் கலந்து கொள்பவர்கள் காலை 5.20 மணிக்கு தங்களின் வருகையினை உறுதி செய்ய வேண்டும்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்க ளுடன் முதல் பரிசுத்தொகை ரூ.5000, 2-ம் பரிசுத்தொகை ரூ.3,000, 3-ம் பரிசுத்தொகை ரூ.2000 மற்றும் 4-ம் பரிசு முதல் 10-ம் பரிசுத்தொகை வரை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்படவுள்ளது.

    மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் பரிசுத்தொகையினை அவர்களின் வங்கிக்கணக்கில் மட்டுமே வழங்கப்படும். ஆகவே வெற்றி பெற்றவர்கள் தங்களின் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலினை கண்டிப்பாக கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×