என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் இருந்தனர். அப்போது தியாகராஜபுரத்தில் வீட்டின் அருகில் சாராயம் விற்ற அதே ஊரை சேர்ந்த மொட்டையம்மாள்(வயது 58) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    சின்னசேலத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தனர்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் சேதமடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நேற்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தனர்.
    கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று மனு அளிப்பதற்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில் இந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

    எனவே இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு விரைந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்து தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் உதவி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, 3 சக்கர வண்டி, வங்கிக்கடன் மானியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் கோரி மாற்றுத்திறனாளிகள் 217 பேர் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இதில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மருத்துவ அலுவலர் ஜீவா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    திருக்கோவிலூர் அருகே கெடிலம் ஆற்று வெள்ளத்தில் காருடன் டிரைவர் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிளியூரை சேர்ந்தவர்கள் கேசவன் மகன் கிளியான், சிவலிங்கம் மகன் சங்கர் ஆவார்கள். அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது தந்தை உளியான் என்பவர் இறந்து விட்டார்.

    எனவே இவரது இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து வரும் உறவினர்களை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் திருக்கோவிலூருக்கு கிளியான், சங்கர் ஆகியோர் புறப்பட்டனர். இதற்காக காசிலிங்கம் மகன் முருகன் என்பவரது வாடகை காரில், திருக்கோவிலூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே திருக்கோவிலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கெடிலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் மொகலார் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இரவு நேரம் என்பதால், தண்ணீர் எந்த அளவுக்கு செல்கிறது என்பது தெரியாமல், அந்த வழியாக அவர்கள் காரில் கடந்து செல்ல முயன்றனர்.

    இதற்கிடையே அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள், தரைப்பாலத்தின் வழியாக செல்ல வேண்டாம் என்று கூச்சலிட்டனர். ஆனால் அவர்கள் அதை கவனிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தரைப்பாலத்தின் வழியே சென்றபோது, கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    உடன் அங்கிருந்தவர்கள் கிளியானை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். மற்ற இருவரும் காருடன் சேர்ந்தே சென்றுவிட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே சங்கரும், வெள்ளத்தில் நீந்தி கரைக்கு திரும்பினார்.

    ஆனால் முருகன் மட்டும் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நேற்று முழுவதும் நடைபெற்றது. இதில் டிரோன் கேமரா மூலமாகவும் ஆற்று பகுதி முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை வரை அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நேற்று மதியம் மொகலார் கிராமத்துக்கு நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.மேலும் மீட்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினரிடம் கேட்டறிந்த அவர், முருகனை மீட்கவும் அறிவுரை கூறினார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தின் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இங்கு மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

    இதை கேட்டறிந்த அவர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அழைத்து, இந்த தரைப்பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யும்படி கூறினார்.

    தொடர்ந்து ரூ.10 கோடி செலவில் மேம்பாலம் கட்ட தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டு இருப்பதாகவும், அதற்கு அவர் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று, மேம்பாலம் கட்ட விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

    அப்போது அவருடன் திருக்கோவிலூர் ஒன்றிய குழு தலைவர் அஞ்சலாட்சிஅரசகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
    சின்னசேலம் பகுதியில் தொடர் மழை பெய்தும் நீர்வரத்து இல்லாமல் போனதால் ஏரி நிரம்பாமல் உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே நைனார்பாளையம் கிராமத்தில் நல்லாண்பிள்ளை பெற்றாள் ஏரி உள்ளது. 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் மூலம், அந்த பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து சரியான அளவில் இல்லை. இதனால் ஏரியும் நிரம்பாமல் போய்விடுதால், அதை சார்ந்துள்ள விவசாயிகள் வேளாண் பணியை மேற்கொள்ளவும் முடியாமல் போனது.

    இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, போதும், போதும் என்கிற அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் சின்னசேலம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. ஆனால், இந்த ஏரி மட்டும் இன்னும் நிரம்பவில்லை. இது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

    இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நைனார்பாளையம் ஏரிக்கு தண்ணீர் வரும் வனப்பகுதியில் உள்ள வரத்து வாய்க்காலில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    மேலும் தோட்டப்பாடி எல்லை பகுதியில் சிலர் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்கள். இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்வதில்லை.

    இதனால் தான் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. தற்போது சுற்றிலும் உள்ள பகுதியில் இருந்து வந்த தண்ணீர் தான், ஏரியில் குட்டை போன்று தேங்கி நிற்கிறது.

    இதை வைத்து நாங்கள் எப்படி விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் என்று கவலையுடன் அவர்கள் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு, ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போதைய பருவமழை காலத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலாக இருக்கிறது.
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், மயிலாடும் தாங்கல் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. ஒரு கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதியில் தேங்கியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 95 மில்லி மீட்டரும், தியாகதுருகம்-80, கள்ளக்குறிச்சி-70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழை வெள்ளம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எஸ்.மலையனூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏமம், நத்தகாளி ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடும்தாங்கல் ஏரி நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் உபரிநீர் செல்லக்கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள அம்மன் கோவில் மற்றும் 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தெருக்களிலும் மழைவெள்ளம் ஆறுபோல் போல் ஓடியதால் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி காலனியை சேர்ந்த பரிமளகாந்தி(வயது 45) என்பவரது கூரைவீட்டின் சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அவரது மகள்கள் கார்த்திகா(19), லீனா(18), மகன் மகேஷ்(15) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் கார்த்திகா, அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டும், லீனா 12-ம் வகுப்பும், மகேஷ் (15) 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    திருச்சி:

    கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட நிலையான இயக்க செயல்முறைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு அவர்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டைகள் வழங்கிட, கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிற 15.2.22வரை பெறப்படவுள்ளது.

    அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிஷான்அட்டைகள் பெற உரிய விண்ணப்பத்தினை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் வருகின்ற 15.2.2022க்குள் அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
    திருக்கோவிலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே திருக்கோவிலூர், மணம்பூண்டி, அரகண்டநல்லூர், ஜி.அரியூர், திருப்பாலபந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி முள்ளுகாடு பகுதியில் சாராயம் விற்றதாக அதே ஊரை சேர்ந்த கண்ணன்(வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஆலங்குளத்தில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் கந்தன் மகன் ரமேஷ் (வயது 33). இவர் ஆலங்குளம் - தென்காசி சாலையில் இரு சக்கர வாகனம் விற்கும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் 50-க்கும் மேற்பட்ட பழைய மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு விட்டிருந்தார். இங்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதனை ஓட்டி பார்த்துவிட்டு, அதன் பின்னரே விலை கொடுத்து வாங்குவது வழக்கம்.

    இதேபோல் நேற்று மாலை அந்த கடைக்கு 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக ஆலங்குளம் பஸ் நிலையம் நோக்கி சென்றவர் நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் ஆலங்குளத்தில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். மோட்டார் சைக்கிளுடன் அந்த மர்ம நபர் காணாமல் போனதால் இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் உள்ள கடைகளில் உள்ள சி.சி.டிவி கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    வீராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    செங்கல்பட்டு:

    வீராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பரனூர், வீராபுரம், மகேந்திரா சிட்டி, மருதேரி, சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, தென்மேல்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
    பள்ளி மாணவி, மாணவர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் மாணவரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைச்சந்தை கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் அரிகிருஷ்ணன்(வயது 16). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜன் மகள் நிவேதாவும்(16) அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது பற்றி அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இருவரது உறவினர்களும் மாணவி, மாணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரிகிருஷ்ணனின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரிகிருஷ்ணன் கழுத்தில் காயம் இருப்பதாகவும், மாணவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை முடிவை உடனடியாக கொடுக்க வேண்டும் என்றும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைத்தனர்.
    ×