என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி மற்றும் கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் விருகாவூர் மற்றும் நாகலூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தினமும் பொரசக்குறிச்சி பஸ் நிலையத்தில இருந்து அரசு பஸ்சில் ஏறி பள்ளிகளுக்குச் செல்வது வழக்கம்.
நேற்று அவ்வாறு அடரி கிராமத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஏறிச் சென்றனர். ஆனால் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ்சின் படிக்கட்டில் ஒரு சில மாணவர்கள் தொங்கி சென்றனர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் படியில் தொங்கியபடி வந்த சுமார் 10 மாணவர்களை பாதி வழியில் கீழே இறக்கி விட்டு பள்ளிக்கு நடந்து வாருங்கள் என கூறினர்.
ஆத்திரமடைந்த 50- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று பொரசக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் அந்த வழியாக வந்த அதே அரசு பஸ்சை நிறுத்தி கூடுதல் அரசு பஸ் இயக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது தனது சொந்த ஊரான சாத்தனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி காரில் வந்த ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மாணவ மாணவிகளிடம் சாலை மறியல் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து மாணவர்களிடம் ஒரு சில நாட்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல ஏற்றவாறு கூடுதலாக அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று மாணவ, மாணவிகள் அதே அரசு பஸ்சில் ஏறி பள்ளிக்குச் சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 13 வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 14 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க வேட்பாளர்கள் 14 பேர், அ.தி.மு.க வேட்பாளர்கள் 14 பேர், பா.ஜ.க வேட்பாளர்கள் 3 பேர், தே.மு.தி.க வேட்பாளர்கள் 4 பேர், பா.ம.க 1, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 7 பேர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் ஆக மொத்தம் 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தியாகதுருகம் பேரூராட்சியில் 19 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரத்து 406 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 19 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கூடுதலாக 4 எந்திரங்கள் என மொத்தம் 23 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் தலைமையில் மண்டல தேர்தல் அலுவலர்கள் அன்பழகன், சிவக்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வராஜ், பிரபு ஆகியோர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து வேட்பாளர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே கானூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (வயது32). அவரது மனைவி மஞ்சு (21). இவர்கள் கடந்த மாதம் 23-ந் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று இரவு 2 பேரும் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் முன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பெரியசாமிக்கு திடீரென விக்கல் ஏற்பட்டது. அதோடு நெஞ்சுவலியும் இருந்தது.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக பெரியசாமியை தூக்கிகொண்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பெரியசாமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கச்சராபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை.
இவர் கடந்த 17.01.2022-ந்தேதி மலைக்கோட்டாலம் குடிகாடிநீலமங்கலம் ஓடை அருகே 149 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். மேலும் இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்பனையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் மீது கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சங்கராபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடும் சின்னதுரையை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சின்னதுரை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் 89 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 46 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இறுதி செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோரின் பெயர் மற்றும் சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பணியை தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி அருகே பாரதி கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு குறித்தும், வாக்குபதிவு எந்திரங்கள் உள்ள அறை உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது வேலூர் நகராட்சி மண்டல இயக்குனர் குபேந்திரன், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன், நகராட்சி பொறியாளர் பாரதி, பணி மேற்பார்வையாளர் சுபேந்தர் முகமது, நகராட்சி நகர ஆணைய ஆய்வாளர் தாமரைச் செல்வன், மண்டல அலுவலர்கள் கார்ல் மார்க்ஸ், முரளி, ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(வயது 61). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஏழுமலை (35) என்பவருக்கும் இடையே நில பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்றும் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, பிரபா, அருளானந்தம், விசாலம், மேகலா, பெரியசாமி உள்ளிட்ட 6 பேர் மீதும், ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் சண்முகம், பெரியசாமி, சக்திவேல், கண்ணம்மாள், வசந்தி உள்ளிட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






