என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல் - 150 பேர் மீது வழக்கு
தியாகதுருகம் அருகே சம்பளம் குறைவாக வழங்கியதாக கூறி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு வாரமும், காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு வாரமும் என தனித்தனியாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கூத்தக்குடி காலனி பகுதியை சேர்ந்த சுமார் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை செய்தனர். அப்பொழுது ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த ஊர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு ரூ.150 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தங்களுக்கும் ரூ.150 சம்பளம்தான் வழங்குவார்கள் என ஆத்திரமுற்ற காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலையை முடித்துவிட்டு வந்து கள்ளக்குறிச்சி கூத்தக்குடி சாலையில் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.273 முழு சம்பளம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வரஞ்சரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முனியமுத்து, பாண்டித்துரை, மணி, சேகர், அரிகிருஷ்ணன் உள்ளிட்ட 50 ஆண்கள் மற்றும் 100 பெண்கள் ஆக மொத்தம் 150 பேர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடை யூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






