என் மலர்
காஞ்சிபுரம்
- காலிப்பணியிடமாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.
- விண்ணப்பப்படிவத்தினை https://Kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் காலிப்பணியிடமாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது.
தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பப்படிவத்தினை https://Kancheepuram.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பழைய கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் வருகிற 7-ந்தேதி மாலை 5.45க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம் சென்று விட்டு பெருநகர் அருகே உள்ள தனலட்சுமி நகரில் உள்ள வீட்டுக்கு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
- தனலட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளை திருப்பியபோது பின்னால் வந்த வாகனம் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் தனலட்சுமி நகர் அருகே ஓட்டல் நடத்தி வந்தவர் பாஸ்கரன் (வயது 52). இவரது மனைவி தனலட்சுமி (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் சென்று விட்டு பெருநகர் அருகே உள்ள தனலட்சுமி நகரில் உள்ள வீட்டுக்கு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
காஞ்சிபுரம் பெருநகர் சாலையில் இரவு 10½ மணி அளவில் அவர்கள் தங்கி இருக்கும் தனலட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளை திருப்பியபோது பின்னால் வந்த வாகனம் அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் பலத்த காயமடைந்த தனலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். பாஸ்கரனுக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்.
- மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
- மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சக்கர நாற்காலி, திறன்பேசி, ஊன்றுக்கட்டைகள், காதுக்கு பின் அணியும் காதொலிக்கருவி, மோட்டார் பொருந்திய தையல் எந்திரம் போன்ற உபகரணங்கள் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 300 மதிப்பில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் செந்தில்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், அனைத்து சிறப்பு பள்ளியின் தாளாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியில் மக்களுக்காக பல அறிய திட்டங்களை தீட்டினார்.
- மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
அ.தி. மு.க. நிறுவனர் முன்னாள் முதல் - அமைச்சர் எம்ஜிஆரின் 35 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.
காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை ஊராட்சி அருகே வண்ண வண்ண மலர்களை கொண்டு எம்ஜிஆர் படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த படத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க.ஓ.பி.எஸ். அணி செயலாளர் தொழிலதிபர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் மலர் தூவி வணங்கினார். அவர் பேசுகையில், என்றைக்கும் எம்ஜிஆரை மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்
எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியில் மக்களுக்காக பல அறிய திட்டங்களை தீட்டினார். மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
சத்துணவு திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திய ஒரே முதல்வர் எம்ஜிஆர் தான். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதை நிரந்தரமாக ஆள்பவரின் பெரும் நினைவை போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட கழக அவைத் தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் வஜ்ரவேலு, பெருநகர் கோபால், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் குணசேகரன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பூக்கடை ஜகா, உத்திரமேரூர் தொகுதி அமைப்பாளர் யோகானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.
- 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையம், வெளிநாட்டு விமான நிலையம் என 2 முனையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம் முடிவு செய் தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது சர்வதேச விமான நிலையம் என்பதால் நவீன வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்ததாக இருக்கும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-ல் செயல்பட்டு வருகிறது. டெர்மினல் 2-ல் தற்போது விமான நிலைய விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. டெர்மினல் 3-ல் சர்வதேச விமான நிலையம் வருகை பகுதியாகவும், டெர்மினல-4 சர்வதேச புறப்பாடு பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் பணிக்காக இந்திய விமான நிலைய இயக்குனரகம் சுமார் ரூ.2467 கோடி ஒதுக்கி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், ஒரு சில மாதத்தில் அது திறக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இது பயன்பாட்டிற்கு வந்த பின், தற்போது சர்வ தேச வருகை பகுதியாக செயல்பட்டு வரும் டெர்மினல்-3 முழுவதுமாக இடிக்கப்பட்டு அதற்கான வேலை தொடங்கப்படும். இதனை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க இந்திய இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.
அதன் பின்னால் டெர்மினல்-1 மற்றும் டெர்மினல்-4 ஆகிய இரண்டு டெர்மினலும் உள்நாட்டு விமான நிலையமாகவும், டெர்மினல் இரண்டு மற்றும் மூன்று சர்வதேச விமான நிலையமாகவும் செயல்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னை விமான நிலையத்தில் 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த விமான முனையம் திறக்கும்போது அதில் சுமார் 33 தானியங்கி நுழைவாயிலும், 20 ஏரோ-பிரிட்ஜ்களும் இருக்கும். இது பயணிகளை கையாளுவதற்கு எளிதாகவும், வேகமாகவும் அமையும். இந்த பணிகள் தாமதமாவதற்கு காரணம் விமான நிலையம் எல்லையை ஒட்டியுள்ள நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமும் கொரோனா தொற்றும் ஆகும்.
கடந்த 2 ஆண்டுகளாக மழையின் காரணமாகவும் இந்த பணிகளை சரியாக செய்து முடிக்க முடியவில்லை. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு ஆண்டுக்கு 3½ கோடி பயணிகளை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையம் திறக்கப்படும்" என்றார்.
- உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது.
- 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளான பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது.
ஆலந்தூர்:
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. இதை அடுத்து இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை, நேற்று நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.
அதை போல் சென்னை விமான நிலையத்திலும், சர்வதேச முனையத்தில் வருகைப் பகுதியில் வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை சுகாதாரத் துறை தொடங்கியுள்ளனர்.
இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகள் வருகை பகுதியில், செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைத்து உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது.
இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப் படுகின்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடக்கிறது. அந்த இரண்டு சதவீதம் பயணிகள் யார்? என்பதை அந்தந்த விமான நிறுவனங்களே முடிவு செய்து அறிவிக்கின்றனர்.
விமானங்களில் வரும் போது சோர்வாக, இருமல் சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவைகளுடன் இருக்கும் பயணிகளை, இவ்வாறு இரண்டு சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர். குறிப்பாக வெளி நாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன.
இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளான பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்களில் யாராவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். அதோடு அந்த பயணிகள் மருத்துவ மனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.
விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 150-வது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தியினை ஏந்தியவாறு, விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
150-வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலையில் துண்டு கட்டிக்கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் முதியவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
- சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
- குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
காஞ்சிபுரம்:
கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.
பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.
வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.
அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.
அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.
இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.
அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.
இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
- தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கஞ்சா கும்பல் தாக்கியதால் பல கடைகள் சேதம் அடைந்தன.
- கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், குள்ளப்பன் தெருவில் விமல் என்பவர் வீட்டின் அருகே சிறிய பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடைக்கு கஞ்சா போதையில் வந்த வாலிபர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்றனர். கடையையும் நொறுக்கி சேதப்படுத்தினர்.
மேலும் அந்த போதை கும்பல் சுண்ணாம்புக்கார தெரு, அமுது படி சாலை, தேனம்பாக்கம் சாலை வழியாக சென்றபோது அங்கு வந்த பொதுமக்களை மிரட்டி பணம், செல்போனை பறித்தனர். பணம் கொடுக்க மறுத்தவர்களை பட்டாக்கத்தியால் காட்டி மிரட்டி வெட்டினர்.
இதில் ஆனைகட்டி தெருவை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்தன், சேஷாத்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் டோல்கேட் பகுதியை சேர்ந்த சீனு மற்றும் வீரராகவன் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தயாளன் சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 7 பேருக்கு வெட்டு விழுந்தது.
அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் கஞ்சா கும்பல் தாக்கியதால் பல கடைகள் சேதம் அடைந்தன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி விசாரித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, போதையில் வந்த வாலிபர்கள் பொதுமக்களிடம் செல்போன் மற்றும் பணம் கேட்டு மிரட்டினர். மேலும் பட்டா கத்தியால் வெட்டினர். பல கடைகளும் தாக்கப்பட்டது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இது போன்ற கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்.
- பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
- குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
குன்றத்தூர்:
குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 70). இவரது மகன் வெங்கடேசன் (43), போரூரில் சொந்தமாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் 70 வது பிறந்தநாள் என்பதால் திருவல்லிக்கேணியில் உள்ள மண்டபத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து விட்டு சினிமா படம் பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகை, மற்றும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
- பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற 11.1.2023 வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேலும் பொதுமக்கள் எவரேனும் பள்ளி செல்லா , இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@yahoo.co.in என்ற என்ற இ-மெயில் முகவரி அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






