என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • விபத்தால் காஞ்சிபுரம்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    திருச்சியை சேர்ந்தவர் விக்கேஷ். இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் காரில் காளஸ்த்திரி சென்றுவிட்டு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

    காஞ்சிபுரம் வழியாக செவிலிமேடு பகுதியை கடந்து பாலாற்று மேம்பாலத்தில் சென்றி கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கோழி ஏற்றி சென்ற மினிலாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த விக்கேஷ், 2குழந்தைகள் மற்றும் டிரைவர் ஆகிய 4பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்தால் காஞ்சிபுரம்-திருவண்ணாமலை செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1 லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்து உள்ளனர்.
    • அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 559 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.44.91 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    நம் சமுதாயத்தில் ஆண்களை போல பெண்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரி மாவட்டத்தில் 1989-ம் ஆண்டு மகளிர் சுயஉதவி குழு திட்டத்தை தொடங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2022-2023 ஆண்டிற்கு வங்கிக் கடன் உதவி ரூ.500 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 5,884 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.324 கோடியே 91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாநில அளவில் கடந்த 2021-22ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கபட்டுள்ளது.

    இதன்மூலம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன் அடைந்துள்ளனர். 2022-2023ல் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,559 சுய உதவிக் குழுக்களில் உள்ள 16,474 உறுப்பினர்களின் ரூ.37.75 கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தி அந்த திட்டங்கள் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேமலதா ஞானசேகர், துணைத்தலைவர் வசந்தி குமார் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
    • வேளாண்மை துறை சார்பில் 3 பேருக்கு இடுப் பொருட்கள் முழு மானியத்துடன் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 11 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 951 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    வேளாண்மை துறை சார்பில் 3 பேருக்கு இடுப் பொருட்கள் முழு மானியத்துடன் வழங்கப்பட்டது. 2 விவசாயிகளுக்கு விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பில், அங்ககச்சான்று வழங்கப்பட்டது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான ஆணை 2 நபர்களுக்கும், முருங்கை விதைப்பொருள் 1 நபருக்கும் மற்றும் வெண்டை விதைப்பொருள் 1 நபருக்கும் வழங்கப்பட்டது. வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு அரசு மானிய விலையில் பவர் டில்லர் எந்திரமும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத் ரய்யா, மண்டல வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • முதியவரிடம் ரூ.1¾ லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்கள் அவர் பணப்பையை தர மறுத்ததால் 100 மீட்டர் தூரம் தரதரவென்று இழுத்து சென்றனர்.
    • ரத்தினகரனை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினகரன் (வயது 66). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலூரில் இருந்து வாலாஜாபாத் பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு கடையில் வசூலான ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை பெற்று கொண்டு வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ரத்தினகரன் கையில் வைத்திருந்த பணப்பையை பறிக்க முயன்றனர். ரத்தினகரன் பணப்பையை விட மறுக்கவே அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை இயக்கியவாறு முதியவரை 100 மீட்டர் தொலைவுக்கு சாலையில் தரதரவென இழுத்து சென்று பணப்பையை பறித்து சென்றனர்.

    இதில் காயம் அடைந்த ரத்தினகரனை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரிடம் விவரங்களை கேட்டறிந்து வழிப்பறியில் ஈடுபட்ட யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள் வழங்கினார்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் கட்சியின் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தம்மன் தலைமையில் நடந்தது.

    காஞ்சிபுரம் மாநகர தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கலந்து கொண்டு பள்ளி மாணவனுக்கு மிதிவண்டி, மாற்று திறனாளிகள் 3 பேருக்கு வண்டி, கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள்,தொழில் செய்ய முனைவோருக்கு அவர்கள் விரும்பிய தொழில் செய்ய உதவும் உபகரணங்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் சங்கர், நகர தலைவர் சுகுமார், வட்டார தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர்.

    காஞ்சிபுரம்:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரத்தினக்கரன்(66). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலாஜாபாத்தில் உள்ள ஒரு கடையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் வசூல் செய்து விட்டு காஞ்சிபுரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென முதியவர் ரத்தினக்கரன் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். ஆனால் அவர் பணப்பையை விடாமல் பிடித்ததால் சுமார் 100 மீட்டருக்கு மேல் சாலையில் தரதரவென இழுத்து சென்றனர். பின்னர் அவரை தாக்கி பணத்தை பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் முதியவர் ரத்தினக்கரன் பலத்த காயம் அடைந்தார்.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் கலைத் திருவிழாவில் இடம் பெற்றன.
    • குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கலைத் திருவிழாவில் 34 வகையான தனிநபர் போட்டிகளும், 4 வகையான குழு போட்டிகளும் நடைபெற்றன.

    பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் இந்த கலைத் திருவிழாவில் இடம் பெற்றன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரம், குன்றத்தூர் ஆகிய 2 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. 34 தனிநபர் போட்டிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் வீதம் தலா 38 பேர் பங்கேற்றனர்.

    குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி நடை பெறும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தங்களது நெல் அறுவடை மகசூலினை நல்ல விலைக்கு விற்பனை செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மூலமாக 11 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வருவாய் கிராமங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது. சிறுகாவேரிப்பாக்கம் குறுவட்டம், விஷார் கிராமத்திலும், பரந்தூர் குறுவட்டம், தொடூர் மற்றும் புரிசை கிராமங்கள், கோவிந்த வாடி குறுவட்டம், வேலியூர் மற்றும் கம்மவார்பாளையம் கிராமங்கள், சிட்டியம் பாக்கம் குறு வட்டம், சிட்டியம்பாக்கம் மற்றும் மருதம் கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் குறுவட்டம் (பிர்கா), நாவலூர் கிராமம் மற்றும் மதுரமங்கலம், மேல்மதுரமங்கலம் கிராமங்களிலும், படப்பை குறுவட்டம் (பிர்கா), அமரம்பேடு கிராமத்திலும், நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும்.

    சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய விரும்பும் விவசாய பெருமக்கள் அனைவரும் உரிய ஆவணங்களான அடங்கல் சான்று, ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் கொண்டு சென்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 50 வகையான போட்டிகள் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.
    • பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், காஞ்சிபுரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண்/பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் வருகிற ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

    போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

    பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுகள் மண்டல அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பிற விளையாட்டுகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.

    பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மாவட்ட அணிகளின் சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    தனி நபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    மாவட்ட அளவிலான போட்டிகள்: தனிநபர், ஒற்றையர், இரட்டையர் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும், குழுப் போட்டிகள் ஒவ்வொருவருக்கும் முதல் இடம் ரூ.3000, 2-ம் இடம் ரூ.2000, 3-ம் இடம் ரூ.1000 மும் அளிக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம், அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண். 7401703481, 044-27222628 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 152-வது நாளாக இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
    • 152-வது நாளாக கடும் குளிரிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.

    விமான நிலையம் அமைப்பதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வா தாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 152-வது நாளாக இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    152-வது நாளாக கடும் குளிரிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • சிறுவயதில் இருந்தே பக்தியை வளர்த்தால் அவர்களுக்கு ஒழுக்கம் ஏற்படும். படிப்பிலும் ஆர்வம் வளரும்.
    • சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்படுகின்றன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், திருப்பக்கூடல் தெருவில் இந்தி உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத்தரும் பண்டிட் சாமுண்டீஸ்வரி சேகர் மாணவ-மாணவிகள் இடையே ஆன்மிக பக்தியை வளர்க்கும் எண்ணத்துடன் ஆண்டுதோறும், மார்கழி மாதம் பஜனை நடத்தி வருகிறார். 

    மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து தினந்தோறும் பஜனை நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதில், பள்ளி சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று, திருப்பாவை, திருவெம்பாவை உள்ளிட்ட பாசுரங்களை பாடி, தெருக்களில் ஊர்வலமாக செல்கின்றனர்.

    கிருஷ்ணர், ராதை கோலத்தில் தினந்தோறும் இந்த பஜனை திருப்பக்கூடல் தெருவில் தொடங்கி யாதவ தெரு வழியாக பாண்டவ தூதர் பெருமாள் கோவிலில் முடிவடைகின்றது. இது குறித்து, திருப்பாவை சபா நிர்வாகி சாமுண் டீஸ்வரி சேகர் கூறியதாவது:-

    சிறுவயதில் இருந்தே பக்தியை வளர்த்தால் அவர்களுக்கு ஒழுக்கம் ஏற்படும். படிப்பிலும் ஆர்வம் வளரும். அதற்காக, பஜனையை ஆரம்பித்தோம். தொடக்கத்தில், சிலர் மட்டும் பங்கேற்றனர். தற்போது, 50 சிறுவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை இலவசமாக கற்றுத்தந்து மொழியாற்றலை வளர்க்கின்றோம். பள்ளி மாணவ-மாணவிகள், மார்கழி மாதத்தில், தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து, பஜனையில் பங்கேற்கின்றனர்.

    இந்த சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், படிப்புக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்படுகின்றன. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்க உரையும் வழங்கப்பட்டு அதை ஒப்புவிப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    7-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஹரிகரன் கூறும்போது, "இறை வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையை பாடும்போது மனதுக்கு உற்சாகமாக உள்ளது. சுறுசுறுப்பாக செயல்பட முடிகின்றது. அதனால் நான் 4 வருட மாக மார்கழி மாத பஜனையில் கலந்து கொள்கின்றேன். எங்களை மார்கழி மாத பஜனை பக்குவப்படுத்தி உள்ளது. பாடங்களில் அதிக கவனம் செலுத்த முடிகின்றது. தமிழ் உச்சரிப்பு நன்றாக வளர்கின்றது" என்று தெரிவித்தார்.

    • புத்தக கண்காட்சி காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை போன்று களைக்கட்டியது.
    • சேலையின் தரம் குறித்து அரசு சான்றிதழ் பெறுவதால் போலியான பட்டுச் சேலையை வாங்கி ஏமாறுவதை தவிர்க்க முடியும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 125 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதில் முதலாவது அரங்கமாக தமிழக அரசின் திருவள்ளுவர் பட்டு நெசவு கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பட்டு உற்பத்தி கைத்தறி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கைத்தறி கூடத்தில் பட்டுச்சேலைகளை நெசவாளர் ஒருவர் நெய்து வருகிறார். புத்தக திருவிழாவுக்கு வரும் பார்வையாளர்கள் இந்த கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார்கள். அப்போது பட்டுச்சேலை எவ்வாறு தயாராகிறது என்பது தொடர்பாக பார்வையாளர்களுக்கு தெளிவான வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    மேலும் நெசவாளர் சேவை மையத்தால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற பட்டுச்சேலைகளும் இந்த கைத்தறி கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கிய 10-க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டு சான்றிதழ்களும் அந்த அரங்கில் உள்ளன.

    அந்த கைத்தறி கூடத்தில் பட்டுச்சேலை நெய்து கொண்டிருந்த காஞ்சிபுரம் கருணாநிதி நகரை சேர்ந்த நெசவாளர் சம்பத் கூறியதாவது:-

    இந்த கண்காட்சியில் தங்கம், வெள்ளி ஜரிகையுடன் ஒரிஜினலான பட்டுச் சேலைகளை நெய்து வருகிறோம். இங்கு தரமான காஞ்சிபுரம் பட்டுச்சேலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளது. பட்டுச்சேலை வாங்குபவர்கள் அந்த சேவை தரமானதா என்பதை உறுதி செய்ய அரசு பரிசோதனை மையத்தில் கொடுத்து பரிசோதித்து உறுதி செய்து கொள்ளலாம்.

    இந்த சேலையின் தரம் குறித்து அரசு சான்றிதழ் பெறுவதால் போலியான பட்டுச் சேலையை வாங்கி ஏமாறுவதை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த புத்தக கண்காட்சியில் பலரும் விரும்பக்கூடிய புத்தகங்கள் முதல் அரிய வகை புத்தகங்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் வரை 5000 தலைப்புகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    காஞ்சிபுரத்தில் முதன் முறையாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தக திருவிழாவில் ஆரம்ப நாள் முதலே மக்கள் வர தொடங்கிய நிலையில் விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை யொட்டி ஏராளமான உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமப்புற பகுதிகளிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் சிலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தும் புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த புத்தக கண்காட்சி காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை போன்று களைக்கட்டியது.

    ×