என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரம் புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவரும் பட்டு கைத்தறிக்கூடம்
    X

    காஞ்சிபுரம் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி நெசவுக்கூடம்

    காஞ்சிபுரம் புத்தக திருவிழாவில் பார்வையாளர்களை கவரும் பட்டு கைத்தறிக்கூடம்

    • புத்தக கண்காட்சி காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை போன்று களைக்கட்டியது.
    • சேலையின் தரம் குறித்து அரசு சான்றிதழ் பெறுவதால் போலியான பட்டுச் சேலையை வாங்கி ஏமாறுவதை தவிர்க்க முடியும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த கண்காட்சி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 125 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதில் முதலாவது அரங்கமாக தமிழக அரசின் திருவள்ளுவர் பட்டு நெசவு கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பட்டு உற்பத்தி கைத்தறி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கைத்தறி கூடத்தில் பட்டுச்சேலைகளை நெசவாளர் ஒருவர் நெய்து வருகிறார். புத்தக திருவிழாவுக்கு வரும் பார்வையாளர்கள் இந்த கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார்கள். அப்போது பட்டுச்சேலை எவ்வாறு தயாராகிறது என்பது தொடர்பாக பார்வையாளர்களுக்கு தெளிவான வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    மேலும் நெசவாளர் சேவை மையத்தால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற பட்டுச்சேலைகளும் இந்த கைத்தறி கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கிய 10-க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டு சான்றிதழ்களும் அந்த அரங்கில் உள்ளன.

    அந்த கைத்தறி கூடத்தில் பட்டுச்சேலை நெய்து கொண்டிருந்த காஞ்சிபுரம் கருணாநிதி நகரை சேர்ந்த நெசவாளர் சம்பத் கூறியதாவது:-

    இந்த கண்காட்சியில் தங்கம், வெள்ளி ஜரிகையுடன் ஒரிஜினலான பட்டுச் சேலைகளை நெய்து வருகிறோம். இங்கு தரமான காஞ்சிபுரம் பட்டுச்சேலை ரூ.12 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனைக்கு உள்ளது. பட்டுச்சேலை வாங்குபவர்கள் அந்த சேவை தரமானதா என்பதை உறுதி செய்ய அரசு பரிசோதனை மையத்தில் கொடுத்து பரிசோதித்து உறுதி செய்து கொள்ளலாம்.

    இந்த சேலையின் தரம் குறித்து அரசு சான்றிதழ் பெறுவதால் போலியான பட்டுச் சேலையை வாங்கி ஏமாறுவதை தவிர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இந்த புத்தக கண்காட்சியில் பலரும் விரும்பக்கூடிய புத்தகங்கள் முதல் அரிய வகை புத்தகங்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் வரை 5000 தலைப்புகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    காஞ்சிபுரத்தில் முதன் முறையாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தக திருவிழாவில் ஆரம்ப நாள் முதலே மக்கள் வர தொடங்கிய நிலையில் விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை யொட்டி ஏராளமான உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு கிராமப்புற பகுதிகளிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் சிலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தும் புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த புத்தக கண்காட்சி காஞ்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை போன்று களைக்கட்டியது.

    Next Story
    ×