என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மதுபோதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
    • கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7 லட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பஜார் வீதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த மையத்தில் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையன் தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (32) என்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாகவும், சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

    கைதான யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7 லட்சம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.
    • கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 100 சதவீதம் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு 'ஜல் ஜீவன்' திட்டத்தை கொண்டு வந்தது.

    ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தின் கீழ், 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக மத்திய அரசின் 'பிரதமர் விருது' காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ல் டெல்லியில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்திக்கு விருது வழங்குகிறார்.

    காஞ்சிபுரம் மாவட்டத் தில், 'ஜல் ஜீவன்' திட்டம் தொடங்கியபின், புதிதாக 1.16 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு மொத்தம் உள்ள 2.15 லட்சம் வீடுகளுக்கு முழுவதுமாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2022 அக்டோபரில் இத்திட்டப்பணிகள் முடிவுற்றன. இதுமட்டுமல்லாமல், குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்ய, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள், அவ்வப்போது குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்கின்றனர். கிராம அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இக்குழு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் செல்வதை கண்காணிக்க வேண்டும். 'பைப் லைன்' பழுது, சீரமைத்தல் உள்ளிட்டவற்றை செய்ய இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
    • 6 வழி சாலை பணி முடிவடைந்து 6 ஆண்டுகளாகியும் சர்வீஸ் சாலை அமைக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக உள்ள சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை செல்லும் சாலை 6 வழி சாலையாக விரிவு படுத்தும் பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி முடிவடைந்த நிலையில் ஒரகடம்- சென்னகுப்பம் பகுதியில் சர்வீஸ் சாலை பணி இது நாள் வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கிராம சாலையை விட நெடுஞ்சாலைகள் பல அடி உயரம் உள்ளதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் லேசான மழை பெய்தாலே ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் 6 வழி நெடுஞ்சாலை பணி தொடங்கி 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரகடம் சென்னகுப்பம், பகுதியில் சர்வீஸ் சாலை மற்றும் கால்வாய் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

    24 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த 6 வழி சாலையில் பல்வேறு பகுதிகளில் சர்வீஸ் சாலை முடிவு அடைந்த நிலையில் ஒரகடம், சென்னகுப்பம் பகுதியில் மட்டும் ஏன் சர்வீஸ் சாலை பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக தொடங்க காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரகடம் சென்னகுப்பம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
    • ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று அதிகாலை வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதற்குள் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளையர்களின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

    ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    • பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.

    இதில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த 114 திருநங்கைகள் மற்றும் 3 திருநம்பிகள் மற்றும் 5 வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அவருக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துறை இயக்குனர் அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள்.
    • கைதானவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் பழைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ், வெங்கடேசன், சச்சின், செல்வம், நரேஷ், சபரி, சரவணன், கவுதம், அலெக்ஸ், பிரீத்தி குமார், வல்லரசு, சூர்யா, விக்னேஷ், தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ், விஜயராகவன், தினேஷ் ஆகிய மூன்று பேரும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புட்டா முருகனும் கைது செய்யப்பட்டனர்.

    ஒரே நாளில் 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 19 பேரில் 5 பேர் பழைய குற்றவாளிகள் ஆவார்கள். அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறை மற்றும் புழல் சிறையில் அடைத்தனர்.

    • தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது.
    • ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள வேதாச்சலம் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சாலை அமைத்து தரக்கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் வந்தனர்.

    இந்த நிலையில் அங்கு தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு அந்த பணியானது கடந்த 2 வாரங்களுக்கு முன் தொடங்கியது. முதற்கட்டமாக அங்கு குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றது. அப்போது 2 மின்கம்பத்தை அகற்றி சாலை அமைத்திடாமல் மின்கம்பம் நடுவில் இருந்தபடியே சாலை பணியானது நடைபெற்று கடந்த வாரம் முடிந்துள்ளது.

    இந்த பணிகளே முடிவுற்று இரண்டு வாரங்கள் ஆகியும் தற்போது வரை மின்கம்பம் அகற்றப்படாமல் சாலையின் நடுவே இருந்து வருகிறது. முறையாக சாலை பணியின்போது மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்கம்பங்களை இடமாற்றம் செய்த பின்னரே சாலை அமைத்திட வேண்டுமெனும் விதிமுறைகள் இருக்கும் நிலையில் இத்தகைய ஒப்பந்ததாரரின் செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே மின்கம்பத்தினை இடம் மாற்றி, மின்கம்பத்தினை இடம் மாற்றிடாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
    • ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்துகால மீட்புக்குழு உபகரணங்களையும் வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 290 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். தொடர்ந்து இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், 2021-22 ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது தொகையினை வழங்கினார்.

    மேலும், ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் மேலாண்மை சார்பில், மீட்புக்குழு தன்னார்வலர்களுக்கு ஆபத்துகால மீட்புக்குழு உபகரணங்களையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், மகளிர் திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதியவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார்.
    • தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது66). உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் குமார் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வண்டலூர் ரெயில் நிலையம் அருகே குமார் வந்தார். திடீரென அவர் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்ற போது திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். தாம்பரம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
    • போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் 250 நாட்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதையடுத்து கிராம மக்களின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள்.

    • கரசங்கால் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் குறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் அப்பாவி மக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தாம்பரம், சென்னை, காஞ்சிபும், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்கிறது. இந்த நிலையில் இந்த 6 வழிச்சாலை கரசங்கால் அருகே சாலையின் கீழே செல்லும் பாலாற்று குடிநீர் குழாய்கள் சேதமடைந்து அதில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் வெளியேறி சாலையில் வீணாக ஒடுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

    கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் திண்டாடும் நிலையில் இதனை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்ந 2019-ம் ஆண்டு முதல் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

    குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் பகுதியில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் அப்பாவி மக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்குள்ளாகின்றனர்.

    அடிக்கடி குடிநீர் குழாய் உடைவதும் சரி செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. நெடுஞ்சாலையின் கீழே செல்லும் குழாய் உடைவதற்கு என்ன காரணம்? இதற்கு நிரந்தர தீர்வு காண நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி லதா கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
    • லதா ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லம் ஊராட்சியில் உள்ள மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 35). இவருடைய மனைவி லதா (27). மளிகை கடை நடத்தி வருகிறார். ஜெகநாதன் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார்.

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி லதா கடையில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்த ஒருவர் கடையில் பொருட்கள் வாங்குவது போல் லதா அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவனுடன் தப்பிச்சென்றார்.

    அப்போது லதா கத்தி கூச்சலிட்டுள்ளார் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து லதா ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    நகை பறிப்பில் தொடர்புடைய நபரின் மோட்டார் சைக்கிள் வாகன எண் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    பின்னர் அங்கு சென்ற போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட கவுதம் (28) என்பவரை கைது செய்தனர்.

    போலீசாரின் தொடர் விசாரணையில் கவுதமின் நண்பரான சென்னை வாஷர்மேன்பேட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதம் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 6 பவுன் தங்கச்சங்கிலியை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×